நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

அடுத்த இலக்கு ஒலிம்பிக்தான்!

அட...இந்தப் பெண்ணா அந்த பெரிய இரும்புக்குண்டை தூக்கி வீசி சாதனை படைத்துள்ளார் எனக் கேட்கும் வகையில் இருக்கிறார் பிளஸ் 2 முடித்த மாணவி ஷர்மிளா.

News image
Updated On :27 ஜனவரி 2024, 6:07 pm

ஜெயப்பாண்டி


அட...இந்தப் பெண்ணா அந்த பெரிய இரும்புக்குண்டை தூக்கி வீசி சாதனை படைத்துள்ளார் எனக் கேட்கும் வகையில் இருக்கிறார் பிளஸ் 2 முடித்த மாணவி ஷர்மிளா. மாவட்ட அளவில் நூற்றுக்கணக்கான பதக்கங்கள், மாநில அளவில் பெரும்பாலான தங்கப்பதக்கங்களுடன் மொத்தம் 15 பதக்கங்கள். தேசிய அளவில் 9 பதக்கங்கள். அதிலும் தங்கம் 3, வெள்ளி 4, வெண்கலம் 2 என பதக்கங்களையும், எண்ணிமுடிக்க சில மணி நேரமாகும் வகையில் பாராட்டுச் சான்றுகளையும் பெற்றிருப்பது வியப்பை ஏற்படுத்துகிறது.

தினமும் காலை, மாலை என பள்ளி விளையாட்டு மைதானத்திலேயே பயிற்சியில் பொழுதைக் கழிக்கும் ராணுவ வீரர் முருகானந்தம்-வள்ளி தம்பதியின் இளைய மகள் ஷர்மிளா.

தேசிய அளவில் தொடர்ந்து குண்டு வீசும் போட்டிகளில் ஜொலிக்கும் ஷர்மிளாவை அண்மையில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் நேரில் அழைத்து பாராட்டினார்.

ஷர்மிளாவிடம் பேசியதிலிருந்து-

""அப்பா முருகானந்தம் எல்லைப் பாதுகாப்பு படை வீரர். அம்மா வள்ளி குடும்பத்தலைவி. அக்கா ஷாலினியும் குண்டு எறிதலில் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் வென்றவர்தான்.

ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது, அக்காவுக்கு உறுதுணையாக விளையாட்டு மைதானத்துக்கு சென்று வந்தேன். அப்போது குண்டு எறிதலில் அக்காவை விட அதிகமாக சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதனடிப்படையில் பள்ளி விளையாட்டுப் போட்டியில் எதேச்சையாக குண்டு எறிதல் போட்டியில் பங்கேற்றேன். முதல் பரிசு எனக்குத்தான் கிடைத்தது.

அதையடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகள் அளவிலும், மாவட்ட அளவிலும் நடந்த நூற்றுக்கும் மேற்பட்ட குண்டு எறிதல் போட்டிகளில் முதல் மூன்று இடங்களுக்குள் வந்து நூற்றுக்கும் மேற்பட்ட பதக்கங்களையும், பாராட்டுச் சான்றுகளையும், கோப்பைகளையும் பெற்றுள்ளேன். பள்ளி அளவில் தங்கப்பதக்கம் உள்ளிட்டவற்றைப் பெற்ற பின் தேசிய அளவிலான 9 போட்டிகளிலும் பங்கேற்று பதக்கங்களைப் பெற்றுள்ளேன். அதனடிப்படையில் 3 தங்கப்பதக்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் எனப் பெற்றுள்ளேன்.

கடந்த ஆண்டு அசாமில் நடந்த தேசிய அளவிலான கேலோ போட்டியிலும், அதற்கு முந்தைய ஆண்டு பஞ்சாபில் நடந்த தேசிய அளவிலான தடகளப் போட்டியிலும் நான்காமிடத்தையே பெறமுடிந்தது என்றாலும், இடைப்பட்ட காலங்களில் தென்னிந்திய அளவில் தெலங்கானா திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் நடந்த தடகளப் போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களைப் பெற்றது ஆறுதலாக உள்ளது.

தேசிய அளவில் குண்டு எறிதலில் சிறப்பான இடத்தை வகித்து வந்தாலும், எனது இலக்கு ஒலிம்பிக்கில் பங்கேற்பதுதான். ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று பாரத நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதே எனது இலக்கு. அதனடிப்படையில் அப்பாவைப் போல ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்கு சேவை புரியவேண்டும் என்றே விரும்புகிறேன்'' என்கிறார் இந்த குண்டு எறிதல் வீராங்கனை ஷர்மிளா.

குண்டு எறிதலில் சாதித்துவரும் இந்தப் பரமக்குடி வீராங்கனை, தந்தையைப் போலவே சேவை எண்ணம் கொண்டவராக திகழ்வதுடன், அந்த லட்சியத்துக்காக கடுமையாக உழைத்தும் வருகிறார்.

படங்கள்- பரமக்குடி தத்து

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.