/

உலகின் பேரழகி!

உலகத்தின்  மிக அழகான  பெண்ணாக  பெல்லா  ஹதித் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 10:29 am

சுதந்திரன்


உலகத்தின்  மிக அழகான  பெண்ணாக  பெல்லா  ஹதித் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.  உலக அழகிப்   போட்டி எதுவும் சமீபத்தில் நடக்கவில்லையே... பிறகெப்படி  பெல்லா  உலகின் மிக அழகான  பெண்ணாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்?

பெல்லா  உலகின்  பேரழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது  முக அழகை வைத்தாம்.  புராதன  கிரீஸ் நாட்டின்  அழகை அளவிடும் "தங்க  விகிதம்'  (Golden Ratio of Beauty) விதிப்படி   எல்லாவிதத்திலும்  மிகச் சிறந்த  முகம் கொண்டிருப்பவர்  உலகப் பேரழகியாக  தேர்ந்தெடுக்கப்படுவார்.   தங்க விகித விதியுடன்   94.35  சதவீதம் பொருந்தி  முதலாவதாக வந்திருக்கிறார் 23 வயதாகும் பெல்லா. அமெரிக்காவைச் சேர்ந்த பெல்லாவின் தந்தை பாலஸ்தீனியர். அமெரிக்காவில் பெரும் வணிகர். அம்மா நெதர்லாண்டைச் சேர்ந்தவர்.

தங்க விதியுடன் 92.44 சதவீதம் பொருந்தி இரண்டாம் பேரழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர் பாடகியான பியோன்ஸ். இவருக்கு 38 வயதாகிறது. மூன்றாம் உலகப் பேரழகி  அம்பர்  ஹேர்டு.  இவரது முக அழகு  தங்க விதியுடன் 91.85 சதவீதம் பொருந்துகிறதாம். இவருக்கு 33  வயது.

அழகியலின் "தங்க விகித' விதி   என்றால் என்ன?

இந்த விதியின் "மூலம்' (orgin) ஐரோப்பிய மறுமலர்ச்சி காலத்தில் உருவானது. ஐரோப்பிய ஓவியர்கள், கட்டடக்கலை நிபுணர்கள் தங்களின் படைப்புகளை மதிப்பிட  "தங்க விகிதம்' என்ற  சமன்பாட்டை உருவாக்கினார்கள்.  உலகப் புகழ் பெற்ற  பிரபல  ஓவியர் லியோனார்டோ  டாவின்சி, மனித  உருவ  ஓவியம் வரைய கையாண்ட யுக்தியும் இதுதானாம். அந்தச் சமன்பாட்டை அடிப்படையாக வைத்து  விஞ்ஞானிகள் ஒருவரை  "எது அல்லது எவை' அழகாகக் காட்டுகின்றன என்று கணித சமன்பாட்டை  உருவாக்கினார்கள்.

முக அமைப்பில் நெற்றி, புருவங்கள், புருவங்களின் இடைவெளி, கண்களின் அமைப்பு, கண்களின் அகலம், மூக்கின்  அகலம்,  உதடுகளின் அமைப்பு, நாடியின் (chin) அமைப்பு  இவற்றை மதிப்பீடு செய்து அழகியல் பொருத்தம் பார்க்கிறார்கள். தங்க விதியின்படி, காதின் நீளம்,  மூக்கின் நீளத்திற்குச் சமமாக இருக்க வேண்டுமாம்.  கண்ணின்   அகலம்,  இரண்டு கண்களுக்கும் உள்ள இடைவெளி தூரத்திற்குச் சமமாக இருக்கவேண்டுமாம். எப்படியெல்லாம் அழகை வரையறுக்க வேண்டும் என்று கணக்கிட்டிருக்கிறார்கள்..! மெனக்கெட்டிருக்கிறார்கள்..!

புராதன தங்க விதியை கணினி உதவியுடன் அழகிகளின் முகங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து முடிவினை வெளியிட்டிருப்பவர் லண்டனைச் சேர்ந்த டாக்டர் ஜூலியன் டி சில்வா. சில்வா முகத்தை அழகு செய்யும் சிறப்பு மருத்துவர். ""பெல்லாவின் முக உறுப்புகளில் தங்க விதியுடன் அதிகம் பொருந்துவது  அவரது நாடிதான் (chin). 99.7  சதவீதம் பொருந்துகிறது'' என்கிறார் சில்வா. பெல்லா  அதிவிரைவில் உலகின் சூப்பர்   மாடலாக  பிரபலமாவார் என்றும் சில்வா ஆரூடம் கூறுகிறார்..!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.