சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

நெற்றிக்கண்! 12

"உங்கப்பா உன்னோட செல்லைப் பிடுங்கி வெச்சதுக்குப் பெறகும் ஏதுடீ உனக்கு செல்லு? ...ஓ! உன் செநெகிதி குடுக்கறாளா செல்லு?... அதைத் திருப்பிக் குடுத்துட்டு வாடி கீழே!''

News image
Updated On :29 ஜனவரி 2024, 6:00 pm

ஜோதிர்லதா கிரிஜா

"உங்கப்பா உன்னோட செல்லைப் பிடுங்கி வெச்சதுக்குப் பெறகும் ஏதுடீ உனக்கு செல்லு? ...ஓ! உன் செநெகிதி குடுக்கறாளா செல்லு?... அதைத் திருப்பிக் குடுத்துட்டு வாடி கீழே!''
தாமரை அவ்வாறே செய்ய வேண்டியதாயிற்று...
அதன் பின் அவர்களால் பேசிக்கொள்ள முடியவில்லை.  ஆனால் எழுதிக்கொள்ள முடிந்தது....
சில நாள்கள் கழித்து அதையும் சதாசிவம் தம்  ஊகத்தின் வாயிலாய்க் கண்டுபிடித்துத் தம் நண்பரான அஞ்சல் அலுவலர் உதவியுடன் பக்கத்து வீட்டு ராணிக்கு வாராவாரம் இரண்டு கடிதங்கள் வருவதாய் அறிந்து அவை தாமரைக்கே என்பதை ஊகித்தார். அதன் பின் அவளது பெட்டியைக் குடைந்து அவற்றை எடுத்து அவள் முன்னிலையிலேயே தீயில் இட்டுக் சாம்பலாக்கினார்.  
மொட்டை மாடிக்குச் செல்லும் வழியை நிரந்தரமாக அதன்பின் அவர் அடைத்துவிட்டார்.  வெளித் தோட்டத்திலேயே மரங்களூடே இரண்டு பிளாஸ்டிக் கொடிகளைக் கட்டி அவற்றில்தான் இனித் துணிகளை உலர்த்த வேண்டும் என்று கண்டிப்பாய்ச் சொல்லிவிட்டார்.
அதன் பின் ராணியே  தன் ஊகங்களைத் தெரிவித்தும், தாமரையைத் தன்னால் பார்க்க முடியாத அளவுக்கு அவள் வீட்டில் கெடுபிடிகள் நடந்து வருவதையும், இனி தன் பெயருக்கு கடிதங்கள் அனுப்ப வேண்டாம், அதனால் பயனில்லை என்றும் துரைக்குக் கடிதம் எழுதி அனுப்பினாள்.  
தாமரை அழுது மாய்ந்ததை அவள் அம்மாவும் சரி, அப்பாவும் சரி துளியும் கண்டுகொள்ளவில்லை.  பெண்பார்த்தலை மட்டும் ஒத்திப்போட்டார்கள்.  
வெளியே எங்கும் போகமுடியாத நிலையில், துரையிடம் கைப்பேசி இருந்தும் அது அவனுக்குப் பயன்படாது போயிற்று. என்னதான் செய்வது என்று ஒன்றுமே புரியவில்லை.
அப்போதுதான் ஒரு நாள் அவர்கள் வீட்டுத் தொலைபேசியில் துரையே  பேசினான்.  அவள்தான் ஒலிவாங்கியை எடுத்துப் பதில் சொன்னாள். வழக்கம் போல் அவளைக் கண்காணிக்க அவள் அம்மா அப்போது பக்கத்தில் இருந்தாள்.
"நான் துரை பேசறேன், தாமரை.''
"சொல்லுங்க...''
"யாருடீ  ஃபோன்ல?''
"எங்க ப்ரின்சிபல் பேசறாங்கம்மா.''
அவள் அம்மா எழுந்து தன் வேலையைக் கவனிக்க அப்பால் சென்றாள். ஆனால் காதை மட்டும் இங்கேயே வைத்திருப்பாள் என்று தனக்குள் அவள் எண்ணிக்கொண்டாள்.
"என்னை மன்னிச்சிடு, தாமரை! உங்கப்பாவோட டார்ச்சர் தாங்க முடியல்லே. நமக்குக் கல்யாணம்னு ஆனாலும் என்னைக் கொன்னு போட அவர் தயங்க மாட்டாராம். கொஞ்சங்கூடத் தயக்கமே இல்லாம சொல்றாரு.  அதனால நீ விதவையானாலும் பரவாயில்லையாம். என்னைக் கொன்னுட்டு உனக்கு ரெண்டாங் கல்யாணம் பண்ணி வைப்பாராம். நான் சாகிறதுக்குப் பயப்படல்லே, தாமரை. எங்கம்மா நெலமையைக் கொஞ்சம் யோசிச்சுப் பாரு... என்னைப் பறி குடுத்துட்டு அவங்க என்ன பாடு படுவாங்கன்னு யோசிச்சுப் பாரு, தாமரை. பெத்த மகள்னு கூடப் பாக்காம கொன்னு போடுற வெறி நம்ம நாட்டுல சில மனுசங்ககிட்ட இருக்கு. அசல் மனுஷனான நான் அவருக்கு ஒரு பொருட்டா என்ன? அதனால, என்னை மறந்துட்டு, உங்கப்பா பார்த்து வைக்கிற ஆளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு சவுக்கியமாய் இரு, தாமரை!...'' 
"அய்யோ! நீங்களா இப்படிப் பேசுறீங்க?''
"வேற வழியே இல்லே, தாமரை.  உன்னோட நல்லதுக்காகத்தான் சொல்றேன். என்னோட பேசுறதுக்கோ கொள்றதுக்கோ முயற்சி பண்ணாதே, தாமரை!... என்னை மறந்துடு... நானும் உன்னை மறந்துடறேன். அதுதான் நம்ம ரெண்டு பேத்துக்குமே நல்லது...'' 
அவளை மேலே பேச விடாமல் அவன் தொடர்பைத் துண்டித்தான். தாமரை கண்ணீர் வழிய அங்கிருந்து விரைவாய்த் தன்னறைக்குப் போய்க் குப்புறப் படுத்துக்கொண்டு அழுது தீர்த்தாள்...
அதன் பின் இரண்டே வாரங்களில் அவளது திருமணம் வடிவேலுவுடன் நடந்தது. பெண்பார்த்தலுக்குப் பிறகு தாமரை வடிவேலுவுக்குத் தன் காதல் பற்றி ஏதேனும் எழுதிவிடப் போகிறாளே என்னும் அச்சத்தில் அவளை இருபத்துநாலு மணி நேரக் காவலில் வைத்தார் சதாசிவம். ஒரு பேனாவோ, தாளோ, கடித  உறையோ அவள் கைக்குக் கிடைக்காதவாறு பார்த்துக் கொண்டார்.  ஓர் அச்சத்தில் அவள் அறையின் கூரை மின்விசிறியைக் கழற்றினார்.
வடிவேலுவுடனான திருமணம் நடந்த போது, தாமரை தன் முகத்தில் எதையும் காட்டாமல் கவனமாக இருந்தாள். "இதுதான் என் விதி' என்று அந்தத் திருமணத்தை ஏற்க முற்பட்டாள். வடிவேலுவை மணந்த பிறகு, அவள் அவனுக்கு மட்டுமே சொந்தமானவளாக மனத்தளவிலும் வாழத்  தீர்மானித்தாள். திருமணம் என்பதாய் ஒன்று ஆனதன் பிறகு பழைய காதலனை நினைத்து ஏங்குவதோ, அவனைப் பற்றிய எண்ணங்களில் ஆழ்வதோ ஒரு நல்ல குடும்பப் பெண் செய்பவையல்ல என்பதில் அவள் தெளிவாக இருந்தாள். வடிவேலுவும் மிகவும் நல்லவனாகவும், கண்ணியமானவனாகவும் இருந்ததால், அவளது வாழ்க்கை நல்லவிதமாகவே போய்க்கொண்டிருந்தது.  
எனினும் என்றும் இல்லாதபடி அன்று ஏன் துரை  பற்றிய ஞாபகங்கள் மிக அதிக அளவிலும்,  தீவிரத்துடனும் எழவேண்டும் என்று அவளுக்குப் புரியவில்லை.  ஆனால்,  அதற்கான விடை  அன்று மாலை அவளுக்குக் கிடைத்தது. அம்மாவின் வீட்டுக்குப் போக வடிவேலு இட்டு வந்த ஆட்டோவில் ஏறிய கணத்தில் ஆட்டோ ஓட்டுநர் இடத்தில் இருந்த துரையைப் பார்த்து அவள் அதிர்ந்து போனாள் என்று சொல்லுவது அவள் உள்ளத்து  உணர்ச்சிகளைப் போதுமான அளவில் விவரித்ததாக ஆகாது.
துரை, "எங்க சார் போகணும்?''என்று கேட்டவாறு திரும்பிப் பார்த்தான்.  முகத்தில் எதையும் காட்டாமல் அவளும் அவனைப் பார்த்தாள். 
"ஷெனாய்நகர் போங்க''என்ற வடிவேலு, குனிந்து காலடியில் தான் வைத்த பையை நகர்த்திக்கொண்டிருந்த கணத்தில், "நல்லாருக்கீங்களா, மேடம்?''என்று துரை  தாமரையை நெருக்கு நேராய்ப் பார்த்துக் கேட்டுவிட்டான்.
"ஓ! நான் நல்லாருக்கேன்.  நீங்க நல்லாருக்கீங்களா?''என்று தமரையும் பதிலுக்குக் கேட்க வேண்டியதயிற்று.
"நல்லாருக்கேங்க''எனும் அவனது பதிலைக் கேட்டபின்,  "இவரு என்னையும் என் ஃப்ரண்ட்ஸ் ரெண்டு பேரையும் தினமும் காலேஜுக்கு ஆட்டோவில இட்டுட்டுப் போய் சாயந்தரம் காலேஜுக்கு வந்து எங்களை ஆட்டோவில ஏத்திட்டுப் போய் வீட்டில விடுவாருங்க''
"அப்படியா?''
அதற்கு மேல் யாரும் எதுவும் பேசவில்லை.  அமைந்தகரையில் ஒரு பழக் கடை வாசலில் ஆட்டோவை நிறுத்தப் பணித்த வடிவேலு, "நான் போய்க் கொஞ்சம் பழங்கள் வாங்கிட்டு வந்துடறேன், தாமரை!'' என்று கூறிவிட்டுத் தெருவைக் கடந்து எதிர்க்கடைக்குச் செல்லத்  தெருவோரம் சென்று நின்றான்.
துரை தலையைக் குனிந்தவாறு இருந்தான். இருவரிடையேயும் திண்மையான மவுனம் நிலவியது.  துரை கட்டுப்பாட்டுடன் இருந்தான்.  ஆனால், இரண்டு கணங்களுக்கு மேல் தாமரையால் அப்படி இருக்க முடியவில்லை. 
"என்ன, துரை! வேற வேலை தேடிக்கலையா?''
"இல்லே.  இதுவே போதும்னு தீர்மானிச்சுட்டேன்.''
"அம்மா நல்லாருக்காங்களா, துரை?''
"உம்... நல்லா இருக்காங்க''என்று சொன்ன போது துரையின் குரல் கம்மியது.  ஆட்டோவின் கண்ணாடியில் அவன் கண்ணீரைத் தாமரையால் பார்க்க முடிந்தது. 
தாமரை பழக்கடைப் பக்கம் பார்த்தாள்.  வடிவேலு பழப்பையுடன் தெருவைக் கடக்க நின்று கொண்டிருந்தான்.
"இனிமே என்ன செய்ய முடியும், துரை? மனசைத் தேத்திக்குங்க. வேற வழியே இல்லே'' என்றாள்.
"எவ்வளவு சுலபமாச் சொல்லிட்டீங்க, தாமரை?''
"நானா! சுலபமாச் சொல்லிட்டேனா?  நீங்கதான் அன்னிக்கு என்னோட கடைசியா எங்க வீட்டு லேண்ட்லைனுக்கு ஃபோன் பண்ணி என்னோட பேசினப்ப, எல்லாத்தையும் மறந்துடச் சொன்னீங்க! இப்ப இப்படிப் பேசுறீங்களே?''
சட்டை முனையால் கண்களைத் துடைத்துக் கொண்ட பின், துரை திரும்பி அவளைத் திகைப்புடன் பார்த்தான்: "என்னது! நான் உங்க வீட்டு டெலிஃபோன்ல உங்களோட பேசினேனா! என்ன சொல்றீங்க? அன்னைக்கு உங்கம்மா  மொட்டை மாடிக்கு வந்து கத்திட்டுப் போன பெறகு நான் உங்களோட பேசவே முடியாம போயிறுச்சே? இதென்ன புதுக்கதை?'' அவனது குரல் ஓங்கி ஒலித்தது.
"அப்படின்னா பேசினது நீங்க இல்லியா? அச்சு உங்க கரகரப்பான குரலாவே இருந்திச்சே? எனக்குத் துளிக்கூட சந்தேகமே வரல்லையே! அப்ப, இது ஏதோ மோசடி வேலை''என்று வியப்பும், அதிர்ச்சியுமாய்க் கூவிய தாமரை நடந்ததை அவனுக்குச்  சுருக்கமாய்ச் சொன்னாள்.  பிறகு, "எங்க வீட்டுக்காரர் ரொம்பவே நல்லவர், துரை! நம்ம விஷயத்தை அவர் கிட்ட சொல்லிடணும்னு சில சமயம் என் மனசு  குத்தும்''  என்றாள்.
"அய்யோ! அதை மட்டும் பண்ணிடாதீங்க''
"அதோ அவரு வந்துட்டே  இருக்காரு.  நாம இனி இங்க பேச முடியாது.  ஆனாலும் நான் உங்ககிட்ட பேசணும், துரை. நேர்ல சந்திக்கிறதெல்லாம் வேணாம்.  உங்க மொபைல் நம்பர் சொல்லுங்க பேசறேன்''.
அவன் சொல்ல அவள் குறித்துக் கொண்டாள்.
"கடையில ஒரே கூட்டம்,  தாமரை'' என்றவாறு பழப்பையுடன் வடிவேலு ஏறிக்கொள்ள, ஆட்டோ கிளம்பிற்று. 
-  தொடரும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.