/

அழகு என்றால் ஆபத்தா?அழகான பெண் அதிகாரிகள் செய்தியினால்  எழுந்திருக்கும்  பரபரப்பு

விளம்பரங்களில், விளம்பரம் செய்யப்படும்  பொருளுக்கும் பெண்ணுக்கும் எந்த தொடர்பு இல்லையென்றாலும்,பெண்ணை அல்லது பெண்களைக் கவர்ச்சியாகக் காட்டுகிறார்கள்.      இப்படி பயன்

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:30 pm

பிஸ்மி பரிணாமன்

விளம்பரங்களில், விளம்பரம் செய்யப்படும்  பொருளுக்கும் பெண்ணுக்கும் எந்த தொடர்பு இல்லையென்றாலும்,பெண்ணை அல்லது பெண்களைக் கவர்ச்சியாகக் காட்டுகிறார்கள்.      இப்படி பயன்படுத்தப்படும் பெண்கள் தாங்கள்   செய்யப்படுகிறோம் என்று தெரிந்திருந்தாலும், பொருளாதாரத்  தேவைகளுக்காக சமரசம் செய்து கொண்டுவிடுகிறார்கள் என்ற  குற்றச்சாட்டு  அவ்வப்போது எழுகிறது.

Story image

அகில இந்திய அளவில்  பேசப்படும்  ஐபிஎஸ் பெண் அதிகாரி மெரின் ஜோசப்பை எடுத்துக் கொள்ளுங்கள். மெரின் ஜோசப்பிற்கு, என்ன  ராசியோ  தெரியவில்லை   அவர்  என்ன செய்தாலும், என்ன சொன்னாலும் பரபரப்பு  செய்தியாகி விடுகிறது.

தனக்கு கீழ் வேலை பார்க்கும் ஒருவரை மெரின் தனக்காகக்  குடை பிடிக்கச் செய்தது, சமூகத்தளங்களில் விவாதிக்கப்பட்டு மெரினுக்கு எதிராக விமர்சனங்கள்  எழுந்தன.

கொச்சியில் ஒரு விழாவில், மலையாள நடிகர் நிவின் பாலியுடன்,  மெரின் போலீஸ் சீருடையுடன் நின்று  எர்ணாகுளம் சட்டமன்ற உறுப்பினர்  ஹிபி ஈடனிடம்  போட்டோ  எடுத்துத் தருமாறு கேட்டு, பிறகு அந்த போட்டோவை தனது முகநூல் பக்கத்தில்  பதிவு  செய்ததும், அது  வைரலாகப் பரவ, எல்லா மட்டங்களிலும், கேரள காவல் துறை உட்பட, இந்நிகழ்ச்சி விவாதத்துக்கு உள்ளானது.

தற்போது மீண்டும் பரபரப்பு செய்திக்கு ஆளாகியிருக்கிறார், மெரின்!

அழகான 10 ஐஏஎஸ், ஐபிஎஸ் பெண் அதிகாரிகள்  என்ற தலைப்பில்  படங்களுடன் செய்தி   ஒன்றினை "தைனிக் பாஸ்கர்' ஹிந்தி நாளிதழ் வெளியிட்டிருந்தது. 

அந்த  செய்தி கட்டுரையில், ""தங்களது கடமைகளை  எளிதாக நிறைவேற்றும்  சில அழகிய முகங்களை  நம்நாடு கொண்டிருக்கிறது. நமது சமூகத்தின்  முகச் சாயலை மாற்றிய  அழகான  ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் பெண் அதிகாரிகளின் பட்டியலைத் தயாரித்திருக்கிறோம். அழகிப் போட்டிகளில் கலந்து கொள்வதைத் தவிர்த்து, தங்களது திறமைகளை நாட்டின் சேவைக்காக பயன்படுத்த இவர்கள் முன்வந்துள்ளனர்.  இந்தப்  பெண்கள்,  அழகுடன் அறிவும் சேர்ந்து  முழுமையான முன் உதாரணமாய்த் திகழ்பவர்கள்...'' என்று புகழ்ந்து  எழுதப்பட்டிருந்தது.

பட்டியலில்  மெரின்னும் இடம் பெற்றிருந்தார். இந்த பத்திரிகை செய்தி பரபரப்பானதும்,  "பெண் அதிகாரிகளின் திறமை, சாதனைகளுக்கு முக்கியத்துவம் தராமல், வெட்கமில்லாமல்  அழகான தோற்றத்திற்கு முக்கியத்துவம் தந்திருக்கிறார்கள்' என்று மெரின் கோபத்தில்  பொங்கி எழுந்து,அந்த பத்திரிகை செய்திக்கு எதிரான விமர்சனங்களை தனது முகநூல் பக்கத்தில் தட்டிவிட... விவாதப் பொறிகள் தெறிக்கத் தொடங்கியுள்ளன.

மெரின் அதில் கூறியிருப்பது என்ன?

" பெண்கள் கண்ணுக்கு இனிமை' தரும் வஸ்துவல்ல. சில பத்திரிகைகள் பெண்ணை ஒரு காட்சிப் பொருளாக சித்திரித்து,   முக அழகை வைத்து ஒரு பெண்ணின் திறமையை எடை  போடுகின்றன.  தைரியமும்  உறுதியும்  கொண்ட பெண் அதிகாரிகள்,  சிக்கலான   அதிகார வர்க்கத்திற்கு  நடுவில்,  மேனி அழகு அரசியலைத் தாண்டி  வெற்றிகரமாக செயல்படுகிறார்கள்.  அப்படியான பெண் அதிகாரிகளின் பட்டியல் இருக்கிறது.  அதேசமயம், ஐஏஎஸ்  ஐபிஎஸ்  பணியில்  அழகான ஆண்   அதிகாரிகள் பட்டியலை   யாராவது  தயாரித்து    இருக்கிறார்களா?  பெண்ணை  ஒரு பொருளாகக் காண்பதைத்   தாண்டி, மதிக்கத் தொடங்கினால்தான்  இந்தியா  வளர்ச்சி  அடைகிறது என்று சொல்லமுடியும்... இதை   உணர வேண்டிய தருணம் இது.  இந்த பதிவு  450 தடவைகளுக்கு மேல்  பகிர்வு செய்யப்பட்டுள்ளது. "லைக்' செய்தவர்கள்  ஆயிரக்கணக்கில்.

அழகான 10 ஐஏஎஸ்  மற்றும் ஐபிஎஸ் பெண் அதிகாரிகள்  என்ற பத்திரிகை செய்தியிலிருந்து  மெரினுக்குக் கிடைக்காத  முக்கியத்துவம், விளம்பரம்,  மெரினின் சொந்த  முகநூல் பதிவிலிருந்து கிடைத்திருக்கிறது.

 மெரினை  விட  உயர்ந்த  ஸ்தானத்தில் ஆந்திர  அரசின்  சிறப்பு  செயலாளராகப்  பணி  புரியும்,  இன்னொரு  ஐஏஎஸ்   அதிகாரியான  ஸ்மிதா சபர்வால், மெரின் கண்ணோட்டத்திலிருந்து வேறுபடுகிறார். "எங்களின்  அடையாளம்   எங்களை முன்னணிப் படுத்தியுள்ளது' என்று தனது முகநூல் பக்கத்தில்  அழகான 10 ஐஏஎஸ்,     ஐபிஎஸ் பெண் அதிகாரிகள்  செய்தியைப்   பகிர்ந்துள்ளார்.    இந்த முகநூல் பகிர்வு, ஸ்மிதா அந்த பத்திரிகை செய்தியை ஒரு பாராட்டாகவே எடுத்துக் கொண்டிருக்கிறார் என்பதை உறுதிப்படுத்துகிறது.

ஸ்மிதா 2001ல் இந்திய அரசுப் பணி தேர்வில் அகில இந்திய அளவில்  நான்காம்  ஸ்தானத்தைப்  பெற்றவர்.  ஆந்திராவில்  பொதுமக்கள்  குறைகளைப்  போக்கி, மக்கள் அதிகாரி  என்று  பெயர்  வாங்கியவர். அத்துடன்  முடியவில்லை  ஸ்மிதாவின்  மகாத்மியம். ஸ்மிதாவைப் பற்றி  (பார்க்கும்) கண்களுக்குக்  குளிர்ச்சி   தருபவர்  என்று மறைமுகமாக அவர்  அழகை 

 வர்ணித்து  "அவுட்லுக்'  இதழ் எழுத... ஸ்மிதா அந்த  வர்ணிப்பை எதிர்த்து, அந்த இதழ் மீது  வழக்கு  போட்டவர். அப்படிப்  பட்ட   ரோஷம் உள்ள  ஐஏஎஸ்  அதிகாரி  ஸ்மிதா.

கர்நாடகத்தின் பெண் ஐஏஎஸ் அதிகாரியான   ரோஹிணி சிந்தூரி நல்ல நிறம் .. கொள்ளை  அழகு.. என்று கர்நாடக அமைச்சர் ஒருவர்  கமெண்ட் அடித்துள்ள சம்பவத்தையும்  இங்கே  சொல்லியாக  வேண்டும்.

Story image

மத்தியப்  பிரதேச  பெண் ஐஏஎஸ் அதிகாரியான ரிஜு பஃப்னாவுக்கு   பாலியல் குறுஞ்செய்தி அனுப்பிய  அதிகாரிக்கு எதிராக  புகார்  செய்து, அவரை       பதவியிலிருந்து விலக்கி,  அத்துடன் விடாமல்   அவருக்கு எதிராக வழக்கும் தொடரச்  செய்தவர் இவர். இது 2015இல் நடந்த  சம்பவம். 

1988இல்  பரபரப்பாக  அடிபட்ட பெயர் ரூபன்  தியோல்  பஜாஜ்.  ஐஏஎஸ் அதிகாரி.  குடி போதையில்  தன்னிடம் தவறாக   நடந்து கொண்ட  ஐபிஎஸ் ஆண் அதிகாரி மீது புகார்  செய்து, வழக்கு போட்டு குற்றத்தை நிரூபித்தவர்.

 கேரளத்தில், 1999இல், நளினி நெட்டோ என்ற  ஐஏஎஸ் பெண் அதிகாரியிடம்  அமைச்சர்  தவறாக நடந்து கொண்டார்.   இந்த சம்பவங்கள், அரசு  இயந்திரத்தில் உயர்ந்த ஸ்தானத்தில்  இருக்கும் பெண் அதிகாரிகள் கூட  அழகு.. கவர்ச்சி கண்ணோட்டத்தில்  பார்க்கப்படுகிறார்கள் என்பதை உறுதி செய்கின்றன.

  பெண் அதிகாரிகளின் நிலைமை  இப்படி இருக்க,  ஒரு நடிகை சட்டமன்ற  உறுப்பினரானால், அவர்  எந்த  கண்ணோட்டத்தில்  முன்னிலைப்படுத்தப்படுகிறார்  என்று 

தெரியுமா?  

அஸ்ஸாம் நடிகை  அங்கூர் லதா டெகா.

எட்டு ஆண்டுகளாக   அஸ்ஸாம், வங்காள  மொழிப்  படங்களில்   நடித்து  வந்தாலும், அங்கூர், அஸ்ஸாம், மேற்கு  வங்காளம்  எல்லைகளுக்குள் மட்டுமே அறியப்பட்டவர். இதர  மாநிலங்களில்  அங்கூர்  பற்றி  ஒன்றுமே  தெரியாது.  ஆனால்  இந்த  மே 19 முதல்,    அங்கூர் அகில இந்திய அளவில் அறியப்படுகிறார். பாஜகவின்  சார்பாக  சமீபத்தில்  நடந்த    சட்டமன்ற  தேர்தலில்  அங்கூர் போட்டியிட்டு  வெற்றி  பெற்றார்.  அங்கூர், அஸ்ஸôம் அரசியலின்  புதிய  பரபரப்பு விஷயமாகியிருக்கிறார்.

  ஹிந்திப் பட  இயக்குநர்  ராம்  கோபால்  வர்மா, அங்கூரின் வெற்றி  கண்டு,  ""ஒரு சட்ட   மன்ற   உறுப்பினர் இப்படி  அழகாக இருப்பார்  என்றால், (மோடி  சொன்ன) நல்ல தினங்கள்   வந்துவிட்டன  என்றுதான்  சொல்ல  வேண்டும்... நன்றி அங்கூர் ... நன்றி மோடிஜி ... முதல் முறையாக  நான்  அரசியலை   நேசிக்கிறேன்..''  என்று பதிவு செய்ய, அதற்கும்  விமர்சனங்கள்   எழுந்துள்ளன.

   பெண்களுக்கு  எதிராக வரும்  செய்திகளை, செய்யப்படும்  பதிவுகளை, அணுகு முறைகளை எதிர்த்து  சமூக  தளத்தில்  கருத்துகளைப்  பதிவு செய்து  விட்டால்  தீர்வு பிறந்து  விடாது ... ரூபன்  தியோல்  பஜாஜ், ஸ்மிதா சபர்வால்,   ரிஜு பஃப்னா  போன்றோர்,  பிரச்னைக்குத் தீர்வு காண ... பிறரை எச்சரிக்கை செய்ய..  தைரியமாக எடுத்த  நடவடிக்கைகளை  கைக்கொண்டால்.. பெண்களை   அழகு ரீதியாகப் பார்க்கும் கண்ணோட்டம்  நிச்சயம்  மாறும்.. பெண்களை  குறிவைத்து  செய்யப்படும்   எல்லா வித  செயல்பாடுகளும்  குறையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.