/

பெண் என்றால் பிரச்னையா? மாணவிகளுக்கு தனி இடத்தில் தேசியப்  போட்டியா?

கல்லூரிகளில் ஒரே பெஞ்சில் மாணவரும் மாணவியரும்  கலந்து அமரக் கூடாது ... வேண்டுமென்றால் நாற்காலிகளில் அடுத்தடுத்து அமர்ந்து கொள்ளலாம்.. என்று கேரளா கல்வி அமைச்சர்

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:48 am

பிஸ்மி பரிணாமன்

கல்லூரிகளில் ஒரே பெஞ்சில் மாணவரும் மாணவியரும்  கலந்து அமரக் கூடாது ... வேண்டுமென்றால் நாற்காலிகளில் அடுத்தடுத்து அமர்ந்து கொள்ளலாம்.. என்று கேரளா கல்வி அமைச்சர்  அப்து ரப் சொல்லப் போக.. அதை எதிர்த்து கேரளம் முழுவதும் மாணவ சமுதாயத்திடமிருந்து கண்டனங்கள் எழ... கோழிக்கோடு, மலபார் கிறிஸ்டியன் கல்லூரி   மாணவ மாணவிகள் பரஸ்பரம் உணவு ஊட்டி எதிர்ப்பினைக் காட்டினர்.  ஆனால், பரூக் கல்லூரியில் மாணவ மாணவிகள் ஒரே பெஞ்சில் சேர்ந்து அமர முடியாது. ஓய்வு நேரங்களில் மாணவர்கள் அமர இளைப்பாற, தனி இடம் உண்டு. அங்கு மாணவிகள் இருக்க, உட்கார அனுமதியில்லை. 

இந்தப் பிரச்னை முழுவதாக அடங்கும் முன்... அதே போன்ற பிரச்னை தேசிய அளவில்  வேறொரு வடிவத்தில் வெடித்துள்ளது. இந்த ஆண்டு தேசிய பள்ளி விளையாட்டுப் போட்டிகள் மாணவர்களுக்கு நாசிக் நகரிலும்,  மாணவிகளுக்கு புனே நகரிலும் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், ஆர்வலர்கள் மத்தியில் பெரும் புகைச்சலை கிளப்பியுள்ளது.

Story image

கேரள விளையாட்டுக் கழகத்தின் தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்டிருக்கும் ஒலிம்பிக் வீராங்கனை அஞ்சு ஜார்ஜும் கொதித்து நிற்கிறார்:

 ""ஒலிம்பிக் முதல் சாதாரண விளையாட்டுப் போட்டிகள் வரை, ஆண்கள் பெண்களுக்கான போட்டிகள் ஒரே இடத்தில்தான் நடக்கின்றன. ஆண், பெண்களுக்கு போட்டி நடக்கும் நேரங்கள் வேறாக இருக்கும். பல விளையாட்டுப் போட்டிகளுக்காக பல விளையாட்டு அரங்கங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். அங்கு ஆண்கள் பெண்களுக்கான போட்டிகள் தனித்தனியே நடக்கும். ஆனால், ஆண்களுக்கு தனி அரங்கு, பெண்களுக்குத்  தனி அரங்கு, இடம் என்ற ஏற்பாடு இல்லை...

இப்போது இப்படியோர் வேறுபாட்டினைக் கொண்டு வந்தால் அது அசட்டுத் தனமானது.  மாணவர்களுக்குத் தனி விளையாட்டு இடம். பெண்களுக்கு வேறு தனி இடம் என்று ஒரு  தடவை நடைமுறைக்கு வந்துவிட்டால், அந்த கதை தொடர்கதையாகி நிரந்தரமாகிவிடும்.  பாதுகாப்பு கருதி இப்படி மாணவர்களுக்கு தனி விளையாட்டுப் போட்டி, மாணவிகளுக்குத்  தனி விளையாட்டுப் போட்டி என்கிறார்கள். யாருடைய பாதுகாப்பிற்காக இந்தப் பிரிவினை  பாகுபாடு என்று தெரியவில்லை''.

தேசிய நீச்சல் கோச்சான பிரதீப் குமார்: எனக்கு நினைவிருக்கிறது... நீச்சல் போட்டிகள்  மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் ராஜ்கோட்டில் வைத்து தனித்தனியாக ஒரு முறை நடத்தப்பட்டது. இந்த ஏற்பாட்டினால், கோச்சுகளும், நீச்சல் போட்டிகளை ஏற்பாடு செய்தவர்களும் அதிக நாள்கள் தங்க வேண்டியதாகி விட்டது. அது கோச்சுகளுக்கும், போட்டி நிர்வாகிகளுக்கும் அசெüகரியமாக இருந்தது. தவிர போட்டிகள் நடத்துவதற்கான செலவும் அதிகரித்தது. தேசியப் பள்ளி விளையாட்டு போட்டிகளில் அதிக புள்ளிகள் எடுக்கும் மாநிலத்தை தேர்வு செய்ய, மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் ஒரே இடத்தில் போட்டி நடத்தினால்தானே அவர்கள் எடுக்கும் புள்ளிகளைச் சேர்த்து எந்த மாநிலம் முதலாவதாக வந்தது என்று போட்டிகள்  நிறைவு பெரும் நாளிலேயே சொல்ல முடியும்! இரண்டு இடங்களில் போட்டிகள்  நடந்ததால் முடிவுகள், புள்ளிகள் தீர்மானிப்பதில் சிக்கல் குழப்பம் ஏற்படும். அதுவும்,  கால இடைவெளிவிட்டு போட்டிகள் நடத்தினால், நிச்சயம் குழப்பம்தான் மிஞ்சும்''   என்கிறார்.

ஒலிம்பிக் ஓட்ட நாயகி பி.டி. உஷா எதற்காகவும் காத்திருக்காமல் பிரதமர் மோடிக்கு உடனே எதிர்ப்பு கடிதம் எழுதியிருக்கிறார்.

 ""விளையாட்டு அரங்கில் மட்டுமே பால், நிறம், மொழி, ஜாதி, மதம், இன, வேறுபாடுகளின் அம்சங்களைப் பார்க்க முடியாது... உணர முடியாது... இப்போது இந்த பால் வேறுபாடு, விளையாட்டிலும் அறிமுகம் செய்யப்பட்டால், தேசிய விளையாட்டின்  தனித்தன்மை, முக்கியத்துவம் இல்லாது போகும்... எங்கோ எப்போதோ நடக்கும் சில  சம்பவங்கள் பள்ளி விளையாட்டு போட்டிகளின் நோக்கத்தையே பாழாக்கிவிடும்'' என்று கோபமாக உஷா சொல்கிறார்.

""ஓட்டப் பயிற்சியின் போது, ஆண்களுடன் ஓடித்தான் நான் ஓடும் வேகத்தை அதிகரிக்கக்  கற்றுக் கொண்டேன். ஒரு நிலைக்குப்பிறகு, பெண்களுக்குள் போட்டி இல்லாமல் போய் விடும்.

நம்மை விட திறமை குறைந்த பெண்களுடன் சேர்ந்து பயிற்சி செய்தால் நமது திறமை சாதுர்யத்தை உயர்த்திக் கொள்ள முடியாது. திறமைகளை மேம்படுத்த ஆண் போட்டியாளர்களுடன் பயிற்சியில் பங்கு பெற்றால்தான் முழு பலன் கிடைக்கும். மேல்நாட்டு  பெண்களுடன் தைரியமாகப் போட்டி போட முடியும். இந்த பிரிவினைக்குப் பின்னால்  என்ன காரணம், குறிக்கோள் உள்ளது என்று எனக்குத் தெரியவில்லை.

புனே விளையாட்டு மையம், இந்தியாவில் மிகச் சிறந்த விளையாட்டு மையங்களில்   ஒன்று. மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் ஒன்றாக நடத்த வசதிகள் இல்லையென்று தேசிய பள்ளி விளையாட்டு சம்மேளனம் சொல்வதில் உண்மையில்லை. ஏற்றுக்கொள்ள முடியாது. போட்டிகள் நடத்துவதில் செலவைக் குறைக்க இந்த பிரிவினை ஏற்பாடு என்கிறார்கள். இதில் எந்த லாஜிக்கும் இல்லை. இரண்டு நகரங்களில், இரண்டு போட்டிகள் நடத்துவதில் செலவு கூடுமே தவிர குறையாது.

இன்று அனைத்து துறையிலும் ஆண் பெண் என்று வித்தியாசம் பார்ப்பதில்லை. இந்த கால கட்டத்தில் நாம் பின்னுக்குப் போய்க் கொண்டிருக்கிறோம். பல போட்டிகளில் ஆண் பெண்  ஒரு சேர ஓர் அணியில் மிக்ஸ்ட் டபுள்ஸ் விளையாடுகிறார்கள். இங்கு மாணவ சமுதாயத்தைப் பால் ரீதியாக பிரித்தாளும் நோக்கத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை..  அரசாங்க அதிகாரிகளுக்கு விளையாட்டு குறித்தான விதி முறைகள் சரிவர தெரியாது.  அதற்காக இப்படியா இது குறித்து பிரதமர் மோடிக்கும், மகாராஷ்டிரா அரசுக்கும் கடிதம்  எழுதியிருக்கிறேன். என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்'' மிகுந்த  சங்கடத்துடன் உஷா தனது வாதத்தை முன் வைக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.