சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

கரடுமுரடான காட்டுக்குள் ஒரு மாற்றுக் கல்வி முயற்சி!

கல்விச் சாலை எப்படியிருக்கும் என்று நம்மனதில் நிறைய கட்டுமானங்கள் விதைக்கப் பட்டிருக்கின்றன.

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:45 am

சா. ஜெயப்பிரகாஷ்

கல்விச் சாலை எப்படியிருக்கும் என்று நம்மனதில் நிறைய கட்டுமானங்கள் விதைக்கப் பட்டிருக்கின்றன. அதை முற்றிலும் உடைத்து நொறுக்கிவிடுகிறது, தருமபுரியில் கரடுமுரடான மேடு பள்ளங்களைக் கொண்டதொரு நிலத்தில் மீனாக்ஷி நடத்தி வரும் புவிதம் பள்ளிக்கூடம்.

  வானுயர்ந்த கட்டடங்கள் இல்லை, கருங்கல்- செங்கற்களைக் கொண்டு உயர்த்தப்பட்ட பக்கவாட்டுச் சுவர்களுடன் நீளவாக்கில் வேயப்பட்ட கூரைகள்  குழந்தைகள் வரைந்து தள்ளிய (கிறுக்கிய) வண்ணச் சுவர். பக்காவான சுற்றுச்சுவர் இல்லை, சுற்றிலும் கற்றாழைச் செடிகள். வட்டமாக அமர்ந்து கற்கும் வகையிலான வகுப்பறைகள். பிளாஸ்டிக் மயமாகிவிட்ட கல்வி உபகரணங்கள் இல்லை, அங்கேயே மரங்களில் இருந்து வெட்டி எளிய வண்ணமிடப்பட்ட உபகரணங்கள். கட்டடங்களுக்கு வெளியே சிறுமண் கூட அண்டிவிடாத சிமெண்ட் தளங்கள் இல்லை, அப்படியே விடப்பட்ட மண் தரை - ஆங்காங்கே இயற்கையாக இருந்த கற்பாறைகளும் அப்படியே. அதேபோலவே விடுதி,  அதேபோலவே தண்ணீர்த் தொட்டியும்.    வளாகத்துக்குள்ளேயே இயற்கையாக விளைவிக்கப்படும் காய்கறித் தோட்டம், உடலைப் பாதுகாக்கும் அரிய மூலிகைத் தோட்டம்.

  ஆன்ட்டி... ஆன்ட்டி... எனச் சுற்றிச்சுற்றி வரும் கிராமத்துக் குழந்தைகள். அவர்களின் நா நுனியில் விளையாடும் ஆங்கிலம். வளாகத்துக்குள்ளேயே டயர் வண்டி ஓட்டலாம். என்னதான் செய்கிறீர்கள் இங்கே என்ற கேள்வியுடன் மீனாக்ஷியுடன் பேசினோம். மும்பையில் பிறந்து வளர்ந்ததற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை - மீனாக்ஷியின் தமிழ்ப் பேச்சில்.

  இனி மீனாக்ஷி...

  ""மும்பையில் படித்து வளர்ந்த நான், ஏற்றத் தாழ்வுகளுடன் இருக்கும் அந்தப் பெருநகர வாழ்க்கை ஒத்துப்போகாமல் புதுச்சேரியிலுள்ள ஆரோவில் வந்தேன். அங்கே இயற்கை வேளாண்மை தளத்தில் பணியாற்றிய உமேஷை சந்தித்தேன். அவருடன் திருமணம் முடித்து இருவரும் வந்து சேர்ந்த இடம்தான் தருமபுரி, நாகர்கூடல்.

  மலைகள் சூழ்ந்த இடத்தில் 12 ஏக்கர் நிலத்தை 1992 - இல் வாங்கினோம். கிராமத்துக் குழந்தைகளுக்கு இயற்கையுடன் கூடிய அறிவை வளர்த்துக் கொள்ளும் எளிய பள்ளிக்கூடம் எனது கனவு. 15 குழந்தைகளுக்கு மேலே வந்துவிட்டதால் எங்களின் சொந்தக் காசு போதவில்லை. பிறகு, 2000ஆவது ஆண்டில் புவிதம் ரூரல் டெவலப்மென்ட் டிரஸ்ட் தொடங்கினோம். எல்கேஜி முதல் 8ஆம் வகுப்பு வரை ஏறத்தாழ 1,000 பேர் இங்கே படிக்கிறார்கள். ஒவ்வொரு விதைக்குள்ளும் எப்படி ஒரு மரத்துக்கான வடிவம் மறைந்திருக்கிறதோ அப்படி குழந்தைகளின் மனத்துக்குள் எல்லாவற்றையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இருக்கிறது. இதைத்தான் எங்களின் கல்வி முறையின் அடிப்படையாகக் கொண்டிருக்கிறோம். ஐம்பூதங்களில் இருந்து மொழி, அறிவியல், கணிதம், சமூகவியல் ஆகியவற்றைச் சொல்லித் தருகிறோம்.

  பாடல்களைப் படிக்கிறார்கள்  கதைகளைப் படிக்கிறார்கள். அவற்றில் இருந்து கேள்விகளை அவர்களே உருவாக்கிக் கொள்கிறார்கள். கூடவே பதிலையும் தேடிக் கொள்கிறார்கள்.

  என்னதான் மாற்று முறைக் கல்வி என்றாலும் இங்கிருந்து 8ஆம் வகுப்பு முடித்துச் சென்ற பிறகு வழக்கமான கல்வி முறையில்தானே உயர்கல்வியைத் தொடர வேண்டியிருக்கிறது.

  அதற்காகவே, 7 மற்றும் 8ஆம் வகுப்புகளில் சமச்சீர்க் கல்வி முறையிலான வகுப்புகளையும், கூடவே தேர்வெழுதும் பயிற்சியையும் நேர்த்தியாகக் கற்றுக் கொடுத்து விடுகிறோம்'' என விவரிக்கிறார் மீனாக்ஷி.

  மொத்தத்தில் உணவுக்கும், மருத்துவத்துக்கும் யாருடைய துணையையும் சார்ந்திருக்க வேண்டியதில்லை என்பதுதான் புவிதத்தின் அடிப்படைக் கரு என்கிறார் அவர்.

  தேசியக் குழந்தைத் தொழிலாளர் திட்டத்தில் மீட்கப்படும் சிறார்கள், 2007ஆம் ஆண்டிலிருந்து இங்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

  பேசிக் கொண்டிருக்கும்போதே 6ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன், 2ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியுடன் வந்து புகார் ஒன்றைத் தெரிவிக்கிறான். ஆதரவற்ற அந்தச் சிறுமியை இன்னொரு மாணவர், சற்றே ஏளனமாகப் பேசுவதாகவும் ""அதைக் கண்டியுங்க ஆன்ட்டி'' என்கிறார்.

  ""இதுதான் இரு சிறாருக்கிடையே உள்ள பிணைப்பு. இதை ஏற்படுத்திவிட்டால் பல வேலைகள் குறைந்துவிடும்'' என்றும் சொல்கிறார் மீனாக்ஷி.

  அதென்னங்க, புவிதம்? என்றோம் புவி- இதமாக இருக்க வேண்டும். நாம்தான் அப்படி இருக்க விடுவதில்லையே. இது இயற்கையைப் பாதுகாக்கும் கல்விக் கூடம் என்கிறார் மீனாக்ஷி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.