நல்லகண்ணு உடல்நிலை! விஜய் விசாரிப்பு!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

கிளர்ந்தெழுங்கள் தோழர்களே! - 17: சாம்ராஜ்யங்களின் கல்லறை

"ஓசிமாண்டியாஸ்' என்ற எகிப்திய அரசன்,  கொடுங்கோலன்.

News image
Updated On :28 ஜனவரி 2024, 4:18 am

ஆர். நட​ராஜ்

"ஓசிமாண்டியாஸ்' என்ற எகிப்திய அரசன், கொடுங்கோலன். அவன் வைத்ததுதான் சட்டம். பிரம்மாண்டமான அரண்மனைகள், பொது இடங்களில் பிரமிக்கவைக்கும் சிலைகள். அதோடு அவனுடைய பராக்கிரமத்தை வெளிப்படுத்த முழு உருவச் சிலைகள். ஆனால் எதுவுமே நிரந்தரம் அல்ல. அவனது காலம் முடிந்தது. அவன் ஏற்படுத்திய சின்னங்கள் அழித்தொழிக்கப் பட்டன. அவனது முழு உருவச்சிலை மண்ணோடு மண்ணாக கால், கை ஒடிக்கப்பட்டு முண்டமாகக் கிடந்தது. இந்த நிதர்சன உண்மையை ஆங்கில கவிஞர் ஷெல்லி"ஓசிமாண்டியாஸ்' என்ற கவிதையில் விவரிக்கிறார்.

எழுதப்பட்ட உலக சரித்திரத்தில் முதல் சாம்ராஜ்யம் சுமேரியா, மெசபடோமியா, பாபிலோனியா. யூப்ரட்டீஸ், டைக்ரிஸ் என்ற இரண்டு பெரு நதிகளுக்கு நடுவேஅமைந்துள்ள இன்றைய ஈராக் மற்றும் இரான் துருக்கி, சிரியா, குவைத் நாடுகளின் சில பகுதிகளை அடக்கிய பரந்த நிலப்பரப்புடைய பிரதேசம்.

மெசபடோமியா மிகப் பழமையான நாகரிகமாகஅறியப்படுகிறது. மலைகளின் பள்ளத்தாக்கிலும் நதிகள் சூழ்ந்த நிலப்பகுதிகளிலும் காலம் காலமாக மனிதநாகரிகங்கள் வளர்ந்தன. டைக்ரிஸ், யூப்ரட்டீஸ் நடுவே மெசபடோமியா, நைல் நதி கரையில் எகிப்து, சிந்து நதி பள்ளத்தாக்கு, மஞ்சள் நதி வளத்தில் சீன நாகரீகம், கங்கை, யமுனை, பிரம்மபுத்திரா, நர்மதா, கிருஷ்ணா, கோதாவரி, காவேரி, தாமிரபரணி நதிகளால் வளம் பெற்றஇந்திய கலாசாரம் என்று உலகின் பழமையான நாகரிகங்கள்நதிகளைச் சுற்றியே வளர்ந்தன.

சுமேரியர்கள் அக்காடியர் பரம்பரையினர். எழுதப்
பட்ட சரித்திரச் சுவடுகளின்படி, மெசபடோமியா
பிரதேசத்தை கி.மு. 3100 -இல் இருந்து கி.மு. 539 வரை

கோலோச்சினர். "அக்காடியன்' பேரரசு உலகிலேயே முதல் பேரரசாகக் கருதப்படுகிறது.

கி மு 539-இல் பாபிலோனிய அரசு வீழ்ந்த பிறகுபாரசீக மன்னர்கள் போரில் வெற்றி பெற்று தங்கள் சாம்ராஜ்யத்தை நிலை நாட்டினர். மத்திய கிழக்காசிய நாடுகளை முழுமையாக உள்ளடக்கிய பரந்து விரிந்த சமஸ்தானம். பரப்பளவு 55 லட்சம் சதுர கிலோ மீட்டர். சரித்திரத்தில் இதற்கு முன்பு இந்த அளவு கொண்ட பேரரசு அமையவில்லை. மன்னர் சைரஸ், டேரியஸ் பிரசித்தி பெற்ற மன்னர்கள். அவர்கள் தான் பொதுப் பணி,கட்டமைப்புகளை அமைத்தல் போன்ற முறையானகுடிமைப் பணிகளை மேற்கொண்டனர். அதனை நிறைவேற்றவும் அரசுக் கொள்கைகளை வரையறுக்கவும்அரசுப் பணியாளர்களைத் தேர்வு செய்யும் முறையை வகுத்தனர்.

கிரேக்க மன்னன் அலெக்சாண்டர், பாரசீக மன்னன்சைரஸின் ஆட்சியையும் அவனது ஆளும் திறமையை மெச்சிய அதே நேரத்தில் பாரசீக நாட்டை கைப்பற்ற கிமு 332- இல் போர் தொடுத்து வெற்றி கண்டான்.

அலெக்சாண்டருக்குப் பிறகு கிரேக்க பார்த்தீனியர்களிடம் ஆட்சி சென்றது. ரோமாபுரிக்கும் பார்த்தீனியருக்கும் நடந்த தொடர் போரில் மெசபடோமியா பிளவு பட்டு கிழக்குபகுதிகள் கி.பி. 225- இல் சஸ்ஸானியர் அல்லது இரானிய மன்னர்கள் வசம் சென்றது. ரோமாபுரி பைசாண்டிய பேரரசு ஒருபகுதியை தக்க வைத்தது. ஏழாம் நூற்றாண்டு இஸ்லாமிய படைகள் பாலஸ்தீனம், ரோமாபுரி கிழக்கு பைசாண்டியப் பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டது.

இன்னொரு கொடுங்கோலன் ஆசியாவையே ஆள யத்தனித்த மங்கோலிய மன்னன் செங்கிஸ்கான், மகத்தான சீனப் பேரரசைப் பணிய வைத்தான். லட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தான். ஐந்தாம் நூற்றாண்டு ஹான் பரம்பரை அட்டில்லாவின் தலைமையிலான கொரில்லா படை ஐரோப்பாவின் பல இடங்களில் போர்செய்து அழித்தொழித்தது. மிகப் பயங்கரமான படை. "அடி... கொல்' என்பதை தயவுதாட்சண்யம் இன்றி வீறிடும் படையின் தலைவன் அட்டில்லா பல நாடுகளை நிலை குலையவைத்தான்.

சுமேரியா அக்காடியா, பாபிலோன் பாலஸ்தீனம் முதலிய பைசாண்டனிய சமஸ்தானங்கள் அழிந்தன. மனித உரிமைகளை முதலில் வகுத்த ஹம்முராபி,
வாழ்வியலில் உயர்ந்த குறிக்கோள்களை உருவாக்கிய மாயன் கலாசாரம், பாபிலோனிய மன்னன் நெபுகெநேசர், கிரேக்க ரோமாபுரி மன்னர்கள் எல்லாரும் வெறும் சண்டையிட்டே மாண்டனர். அந்தந்த நாட்டு மக்கள் எண்ணிலாத் துன்பமுற்றனர். ஆயினும் மனித குலம் இன்னல்களைக் கடந்து உயிர்த்தெழுந்து வளர்ந்து வருவது நம்பிக்கை அளிக்கிறது. தத்துவரீதியாகப் பார்த்தால் பேரிடர்கள், போர்கள், மாபெரும் வெற்றிகள் வாழ்க்கையில் தனி மனிதனுக்கு அப்பாற்பட்டவை.

மெசபடோமியாவில் தொடங்கி வளர்ந்த கலாசாரம், வேளாண்மையில் பல்வகை பயிர் வகைகள், கணிதம், விஞ்ஞானம், சுழித்து எழுதும் முறை, வானியல் ஆகியவற்றில் உன்னத முன்னேற்றத்திற்கு வழி வகுத்தது.

இந்திய சரித்திரத்தில் அசோகர், சந்திரகுப்த மௌரியர், அக்பர் ஆகியோர் மகத்தான சமஸ்தானங்களை உருவாக்கினர். தெற்கே பல்லவர்கள், சோழ, சேர, பாண்டியர்கள், கிருஷ்ணதேவராயர் பிரமிக்க வைக்கும் வகையில் ராஜ்ய பரிபாலனம் செய்தனர்.

அவை எல்லாம் காலச்சுவடுகளில் ஓர் அத்தியாயமாகிவிட்டது. காலம் காலமாக உலக நாடுகளை இணைத்தது வணிகம். ரோமாபுரியிலிருந்தும் அரேபியாவிலிருந்தும் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே இந்தியாவோடு வணிகம் நடந்தது. வணிகர்கள் தான் தங்கள் நாட்டின் அறிவிக்கப்படாத தூதுவர்களாக கலைகளையும் பழக்க, வழக்கங்களையும் நாட்டு நடப்புகளையும் பகிர்ந்து கொண்டனர். அவர்களோடு மத குருமார்களும் தங்கள் மதக் கோட்பாடுகளை மற்ற நாடுகளில் பரப்ப பயணித்தனர். மத்திய கிழக்கு நாடுகளில் தோன்றிய கிறிஸ்துவம், இஸ்லாமிய மதங்கள் முதலில் இந்தியாவில்தான் வேறூன்றின.

உலகின் முக்கால் பகுதி கடலால் சூழப்பட்டது. கடலை வென்றவர் உலகை ஆளலாம் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் இங்கிலாந்து ஐரோப்பிய நாடுகள் ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து கடல் வழி வணிகத்தை உயர் நிலைக்கு எடுத்துச் சென்றனர். இங்கிலாந்தில், ஐரோப்பாவில் தொழில் புரட்சி தொடங்கிய காலம். தொழில் பட்டறைகளை இயக்கவும் விரிவு படுத்தவும் மூலப்பொருள் தேவைப்பட்டன. தயார் செய்யப்பட்ட பொருட்களை வாங்கக் கூடிய சந்தையும் தேவைப்பட்டது.

பலர் கப்பல் வழி ஆசிய ஆப்பிரிக்க கண்டங்களை நோக்கிப் பயணித்தனர். அவர்களது கணக்கு தப்பவில்லை. ஏராளமான கனிமங்கள் நிறைந்த ஆப்ரிக்கா, இந்திய துணை கண்டம், எண்ணைய் கிணறுகள் நிரம்பிய மத்திய கிழக்கு ஆசிய நாடுகள் கைப்பற்றப்பட்டன.

ஸ்பெயினிலிருந்து இந்தியாவிற்கு கடல் வழியைக் கண்டுபிடிக்கச் சென்ற கொலம்பஸ் தலைமையிலான கப்பல் அமெரிக்காவில் தரை தட்டி அமெரிக்கா என்ற புதிய நாடு உருவாக உதவியது!

மேலை நாடுகள் கீழை நாடுகளை அடிமைப்படுத்திய இருள் சூழ்ந்த 17, 18, 19, 20 - நூற்றாண்டுகள்!

சங்க காலத்தில் மன்னன் போரில் வென்று கொண்டுவரும் பொருட்களை எல்லாரோடும் பங்கு போட்டுக்கொள்ளும் முறை இருந்தது. அதுபோல வென்று குடியேறியவர்கள் கொள்ளையடித்தனர். இப்போது ஜனநாயகத்திலும் அது வந்து விட்டது. ஆட்சியில் இருக்கும் எல்லாரும் பங்கு போட்டுக் கொள்ளும் முறை!
பெரிய நாடான சீனாவை ஜப்பான் 1894-95-இல் படையெடுத்து "கிங்க்' அரச பரம்பரையைப் பணிய வைத்தது. உலக சரித்திரத்தில் மற்ற நாடுகளின் மீது படையெடுக்காத நாடே இல்லை என்ற வரலாறு உள்ளது. ஆனால் எந்த நாட்டின் மீதும் படையெடுக்காத நாடு பாரத நாடு என்பதில் நாம் பெருமை கொள்ளலாம்.
இரண்டாம் உலக போர் 1945-இல் முடிவிற்கு வந்த பிறகு நாடுகள் எல்லாம் கூடி ஐக்கிய நாடுகள் சபை அமைத்து இனி வருங்காலத்தில் படையெடுப்பு தவிர்க்கப்பட வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது.

இங்கிலாந்தும் ஐரோப்பிய நாடுகளும் அடிமைப் படுத்திய ஆசிய, ஆப்பிரிக்க, மேற்கிந்திய நாடுகள் விடுதலை பெற்றன.

இரண்டாம் உலகப் போரில் தோல்வியடைந்த நாடுகள் ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி. ஜெர்மனியில் பல கட்டமைப்புகள் தொழிற்சாலைகள் தகர்க்கப்பட்டன.

ஜப்பான் நாட்டில் அமெரிக்கா அணுகுண்டு வீசி இரண்டாம் உலகப்போரை முடிவிற்குக் கொண்டு வந்தது.

தரைமட்டமான நிலையிலிருந்து இரு நாடுகளும் மீண்டு வருமா என்ற கேள்விக்குறி இருந்தது. ஆனால் இருநாடுகளும் வெகு விரைவில் முன்னேற்றப் பாதையில் பயணித்தன. அது எவ்வாறு சாத்தியமானது என்பது வீழ்ச்சியில் இருந்து எவ்வாறு மீண்டு வருவது என்பதற்கான படிப்பினையாகப் பார்க்கப்படுகிறது.

நவீன இயந்திரங்களை உருவாக்குவது உற்பத்தித்திறனைப் பெருக்குவதில் உலகப் போருக்கு முன்பே முன்னேறிய நாடு ஜெர்மனி. போரில் பல தொழிற்சாலைகள் பாழடைந்தாலும் இயந்திரங்களின் இயக்கம் அவற்றை தயாரிப்பதற்கான வழிமுறைகளின் நகல்கள் எடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டிருந்தன. அதை வைத்து புதிய இயந்திரங்களை விரைவில் தயாரிப்பதில் ஜெர்மனி முனைப்பாக செயல்பட்டது. அமெரிக்கா இதற்காக பிரத்யேக செயல் திட்டம் வகுத்து நிதி உதவி அளித்தது.

எல்லாவற்றையும் விட முக்கியமாக நாம் கற்றுக் கொள்ள வேண்டியது, ஜெர்மானிய மக்களின் அர்ப்பணிப்பான உழைப்பு. ஜெர்மனியில் தயாரிக்கும் பொருட்கள் தரமாக இருக்க வேண்டும் என்பதில் சோர்வடையாமல் கண்ணும் கருத்துமாகச் செயல்பட்டனர். ஒரு பொருளின் தரத்தைக் கணிப்பது கடினம். ஆனால் தரம் குறைந்தால் பொருள் வெளுத்துவிடும்; யாரும் சீந்தமாட்டார்கள். உலகச் சந்தையில் ஜெர்மனி தயாரிக்கும் பொருட்களுக்கு மிக பெரிய மதிப்பு வெகு விரைவில் கிடைக்கப் பெற்று சாதனை படைத்தனர் ஜெர்மானியர்கள்.

பேரிடரைச் சந்தித்த ஜப்பான் நாடும் சோதனைகளைச் சவால்களாக ஏற்று வெற்றி கண்டது. மக்களுக்குத் தேவையான சாதனங்கள், மக்கள் நுகரும் பொருட்களைத் தெரிவு செய்து அதே மாதிரியான பொருட்கள் மலிவு விலையில் தயாரிப்பது என்ற நூதன முறையில் ஜப்பானில் தயாரான பொருட்கள் மலிவு விலையில் சந்தைக்கு வந்தன. படிப்படியாக பொருட்களின் தரத்தை உயர்த்தி உலகில் மோட்டார் வாகனங்கள், நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பதில் ஜப்பான் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

ஹிட்லரின் கொடுங்கோல் ஆட்சியில் பல்லாயிரக்கணக்கான யூதர்கள் கொல்லப்பட்டார்கள். இரண்டாம் உலகப் போரில் முழுமையாகப் பாதிக்கப்பட ஓர் இனம் என்றால் அது யூதர்கள் தான். அவர்களுக்கு ஒரு தனி நாடு என்று யூதர்கள் புலம் பெயர்ந்த புராதன நாடு இஸ்ரேல்உருவானது. இஸ்ரேலிய மக்கள் பல விதமான எதிர்ப்புகளுக்கு இடையில் வளமான இஸ்ரேல் நாட்டை மேல் நோக்கி எடுத்துச் சென்றிருக்கிறார்கள்.

இந்த மூன்று நாடுகள் பரமபத வீழ்ச்சியிலிருந்து வியக்கத்தகு மாட்சிமை அடைந்ததற்கு முக்கிய காரணம், அந்த நாட்டு மக்களின் நாட்டுப்பற்று. பெரியவர்களை மதிப்பது, குடும்பங்களைக் கட்டுக்கோப்பாக காப்பாற்றுவது, "உழைப்பே உயர்வு' என்று அர்ப்பணிப்போடு பணியாற்றுவது, இளைய சமுதாயத்தின் வளர்ச்சிக்கு பாடுபடுவது போன்ற சமுதாய நல் மதிப்பீடுகளை வளர்ப்பதற்கு ஜெர்மனி, ஜப்பான், இஸ்ரேல் மக்கள் கொடுக்கும் முக்கியத்துவம் அபரிதமானது. இதுதான் இந்த நாடுகளின் வெற்றியின் இரகசியம்.

ஆட்சியாளர்கள் எப்படி இருந்தாலும் மக்கள் தங்கள் பணியைச் செவ்வனே செய்து வருவதால் தான் மனித சமுதாயம் எவ்வளவோ மோதல்களையும் மேடு பள்ளங்களையும் கடந்து உயிரோட்டத்தோடு இயங்கி வருகிறது. காலச்சுவடுகளில் சாம்ராஜ்யங்கள் தோன்றலாம்; ஒரு நிலையில் அதனுடைய பாரத்தாலேயே விழலாம். ஆனால் காலம் சுழன்று கொண்டே இருக்கும். நல்லவர்களின்நற்பணிகளால் விளையும் நன்மைகள், தீமைகளைவெல்லும்.

சென்ற வார கேள்விக்குப் பதில்: பிரெஞ்ச் நாட்டின் கட்டட நிபுணர் ரோஜே ஆங்கர் இந்தியாவும் யுனெஸ்கோவும் அங்கீகரித்த அரோவில்லை வடிவமைத்தார்.

இந்த வார கேள்வி: இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு ஜெர்மனியில் பொருளாதார அதிசயத்தை செய்த தலைவர் யார்?

(விடை அடுத்த வாரம்)


கட்டுரையாளர்:மேனாள் காவல்துறைத் தலைவர்
மேனாள் சட்டமன்ற உறுப்பினர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.