/

படிக்கும்போதே சம்பாதி!

"இளமையில் கல்' என்பது நம் எல்லாருக்கும் தெரிந்த முதுமொழி.  இன்றைய காலகட்டத்தில் "இளமையில் சம்பாதி' என்பதே புதுமொழி.  இது  இளைஞர்களை கவர்ந்து இழுக்கிறது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:49 pm

ந.முத்துமணி

"இளமையில் கல்' என்பது நம் எல்லாருக்கும் தெரிந்த முதுமொழி. இன்றைய காலகட்டத்தில் "இளமையில் சம்பாதி' என்பதே புதுமொழி. இது இளைஞர்களை கவர்ந்து இழுக்கிறது.
கல்லூரிகளில் இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்கும்போதே, படிக்கும் நேரம் போக மீதி நேரத்தில் ஏதாவது வேலை செய்து பணம் சம்பாதிக்கும் போக்கு வெளிநாடுகளில் மிகவும் பிரபலமாக உள்ளது. ஒரு சில நாடுகளைத் தவிர, பெரும்பாலான நாடுகளில் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் பகுதி நேரமாக வேலை செய்வதற்கு அனுமதிஅளிக்கப்பட்டிருக்கிறது.
கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு, இந்தியாவிலும் படிக்கும்போதே சம்பாதிக்கும் வழக்கம் பிரபலமாகி வருகிறது. மாணவர்களின் கல்விச்செலவை ஈடு செய்வதற்கு, பகுதிநேர வேலையில் கிடைக்கும் சம்பாத்தியம் கைகொடுப்பதால், குடும்பத்தின் நிதிச்சுமையைக் குறைக்க முடிவதாக தெரிவிக்கிறார்கள். இந்தியாவில் கல்விச்செலவு அதிகமாகிவருவதால், படிக்கும்போதே வேலை செய்யும் வழக்கம் வெளிநாடுகளில் மட்டுமல்ல, இங்கேயும் பிரபலமடைந்துவருகிறது.
மேலும் படிக்கும்போதே தொழில்நிறுவனங்களில் வேலை செய்வது எதிர்காலத்திற்கு தேவைப்படும் தொழில் அனுபவத்தைப் பெருக்கிக் கொள்ளும் நல்ல வாய்ப்பாக உருவெடுத்துவருகிறது.
படிப்பும் பணமும்: படிப்பைப் பாதிக்காத வேலைகளைத் தேர்ந்தெடுப்பது நல்ல பலனைத் தரும். கல்விச்செலவு தவிர, இன்றைய கால கட்டத்தில் மாணவர்களின் சுயதேவைகளை நிறைவு செய்துகொள்ளவும் வேலை கை கொடுக்கிறது. பண சம்பாத்தியமும், அனுபவ சம்பாத்தியமும் ஒரு சேர கிடைப்பதால், படிக்கும்போது வேலை செய்வதற்கு மாணவர்களிடையே அதிக வரவேற்பு காணப்படுகிறது.
படிக்கும்போதே சம்பாதிப்பதால் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. ஒருவரின் தன்னம்பிக்கையையும் அது பன்மடங்காக்கும். படிக்கும்போதே, எதிர்கால வேலை அல்லது தொழில்சூழலுக்குத் தேவைப்படும் உயர்தர ஒழுக்கம், பொறுப்புணர்வு, நேரமேலாண்மை, கட்டுக்கோப்பு, பணத்தைக் கையாளும் முறை உள்ளிட்ட பண்புகளும் சீரடையும். அதுமட்டுமல்லாது, தனிமனித ஆளுமையையும் செம்மையாக நெறிப்படுத்தப்படும். இது, எதிர்காலத்தில் வாழ்க்கைக்கான தொழிலை கட்டமைத்துக் கொள்வதற்குத் தேவையான அடித்தளத்தைப் பலமாக அமைத்து தந்துவிடும்.
பகுதி நேர வேலைவாய்ப்புகள்:
எழுத்துப் பணி: தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட எந்த மொழியாக இருந்தாலும் அதில் எழுதும் ஆர்வமும், வல்லமையும் படைத்தவராக இருந்தால், வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்க ஏராளமான வாய்ப்புகள் குவிந்துள்ளன. அறிக்கை, முகநூல் உள்ளிட்ட சமூகவலைத்தள ஊட்டமிடுதல், பின்னூட்டமிடுதல், பிளாக் பதிவுகள், செய்தி அறிக்கைகள், இணையதளப் பக்கங்கள், பொருள் விளக்கம், பெருநிறுவனங்களின் விளக்க குறிப்பேடுகள் உள்ளிட்ட பலவற்றை பல மொழிகளில் எழுதுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. வீட்டில் இருந்தபடியே இதைச் செய்து முடிக்கலாம். கணினியும், இணையவசதியும் இருந்துவிட்டால், இத்தொழிலில் நல்ல வருமானம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.
மொழிபெயர்ப்பு பணி: பன்மொழி ஆளுமை இருந்துவிட்டால், அது சார்ந்த ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன.மொழிபெயர்ப்பு, படியெடுத்தல், குரல் மொழிதல், வசனங்களை எழுதுவது போன்ற பல்வேறு பணிகள் உள்ளன. மொழியைச் சிறப்பாக கையாளத் தெரிந்த, பலமொழி கற்றவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன.
தரவுதள மேலாண்மை: தத்தமது பொருட்களைச் சந்தைப்படுத்துவதற்காக வாடிக்கையாளர்கள் பற்றிய தரவுகள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. திறனறி செல்லிடப்பேசி, தொலைக்காட்சி போன்றவை தரவுதள மேலாண்மையின் முக்கியத்துவத்தை அதிகப்படுத்திவிட்டன. ஏற்கெனவே திரட்டப்பட்ட தரவுகளைச் சீராக பராமரிப்பதும், புதிய தரவுகளைத் திரட்டி அவற்றைப் பாதுகாப்பதும்
தரவுதள மேளாண்மையின் முக்கிய அம்சமாகும். இது மாணவர்களுக்கு அதிக பகுதி நேர வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.
வாடிக்கையாளர் தொடர்பு மேலாண்மை: நிறுவனங்கள் தங்கள் பொருட்களை விற்பனை செய்த பிறகு, அது தொடர்பான வாடிக்கையாளர்களின் கருத்தறிதல், வாடிக்கையாளர்கள் உடனான தொடர்பை, உறவை மேம்படுத்தும் பணிகளில் மாணவர்கள் அதிகளவில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
சந்தைப்படுத்தல், சந்தை ஆய்வு: புதிய பொருட்களைச் சந்தையில் அறிமுகம் செய்வது, விற்பனையைப் பெருக்கும் பணிகள், பொருட்களின் மாதிரிகளை வாடிக்கையாளரிடம் கொடுத்து அவர்களின் கருத்தறிவது போன்ற சந்தைப்படுத்தல் மற்றும் சந்தை ஆய்வுப் பணிகளுக்கு மாணவர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். சில மாதங்களுக்கு நீடிக்கும் இப்பணியில் உதவி செய்ய மாணவர்களின் நேரம், திறமையை நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள ஆர்வமாக உள்ளன.
விருந்தோம்பல்: பகுதிநேர வேலைகளை மாணவர்களுக்கு வழங்குவதை நீண்ட காலமாக உணவகங்கள், சிற்றுண்டி அகங்கள் போன்றவை செய்து வருகின்றன. மாறிவரும் வாழ்க்கைபோக்கு புதிய வகையான வேலைவாய்ப்புகளைத் திறந்து வைத்துள்ளன. நவீன தேனீரகங்கள், உண்டியகங்கள், நொறுக்குத்தீனியகங்கள் தங்கள் சேவைகளில் மாணவர்களை ஈடுபடுத்தவே விரும்புகின்றன. சுற்றுலாப் பயணிகளை கவனித்துக் கொள்வது, அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வது போன்ற புதிய புதிய வேலைகள் உருவாகியுள்ளன.
நிகழ்வுகள், கண்காட்சிகள்: எந்த உற்பத்திப் பொருளாக இருந்தாலும், சேவையாக இருந்தாலும் அதை வாடிக்கையாளர்களிடையே கொண்டு போய்ச் சேர்ப்பதில் கண்காட்சிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. நுழைவுச்சீட்டு அளிப்பது, வருகையாளர்களை இருக்கையில் அமர வைப்பது, விருந்தினர்களை வரவேற்பது, நிர்வகிப்பது, கண்காணிப்பது போன்ற பலவகையான வேலைகள் கண்காட்சியில் உள்ளன. வணிக கூட்டங்கள் நடத்துவது, பெரிய அளவிலான திருமணங்களை நிர்வகிப்பது, மத, அரசியல் கூட்டங்களின் மேலாண்மை ஆகியவற்றில் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகள் உள்ளன. மாணவப் பருவத்தில் கற்க மட்டுமல்ல, சம்பாதிக்கவும் கிடைக்கும் புதிய புதிய வாய்ப்புகள் இளைஞர்களின் எதிர்கால வேலைவாய்ப்பு பரப்பை விரிவாக்கிக் கொண்டே இருக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.