அலுவலகத்தில் எப்படி நடந்துகொள்ளக் கூடாது?
மனிதர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாக இருப்பார்கள். தனிமனிதனாக ஒருவருடைய நடத்தை எந்த வகையில் அமைந்திருந்தாலும், குடும்பம், சமூகம் என்று வந்துவிட்டால் எல்லாரிடமும் சில பொதுவான நடத்தைகளை உலகம்


மனிதர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாக இருப்பார்கள். தனிமனிதனாக ஒருவருடைய நடத்தை எந்த வகையில் அமைந்திருந்தாலும், குடும்பம், சமூகம் என்று வந்துவிட்டால் எல்லாரிடமும் சில பொதுவான நடத்தைகளை உலகம் எதிர்பார்ப்பது இயல்பு.
குறிப்பாக அலுவலகங்களில் ஒருவரின் நடத்தை எவ்வகையில் அமைய வேண்டுமென்பது மிக முக்கியமாகும். அலுவலகமே தனி உலகம் போல தான் செயல்படும். வெவ்வேறு பதவிகள் அல்லது பொறுப்புகளை வகித்தாலும், அலுவலகங்களில் பணியாற்றுவோரிடம் பொதுவான சில நடத்தைகள், நடவடிக்கைகள் அல்லது அணுகு முறைகளை எதிர்பார்ப்பது வாடிக்கையானது. அது எந்த அலுவலகமாக இருந்தாலும், சில அடிப்படையான நடத்தைகள் அத்தியாவசியமானதாக அமைந்திருக்கும். அவற்றைச் சரிவர பின்பற்றும்போது,
அலுவலகப்பணிகளில் எவ்வித சங்கடங்களும், சஞ்சலங்களும் ஏற்படாது. அந்த அடிப்படை நடத்தைகளை அறிந்து, புரிந்து நடந்து கொள்பவர்களால் அலுவலகப் பணிகளில் உயர்ந்த இடத்தை அடைய முடியும்.
இன்றைய அலுவலகங்கள், வேலைத்திறனை மட்டுமே கருத்தில் கொள்ள தனி
மனித பண்பியல்புகள், மனித உறவாடுதல்களையும் கருத்தில் எடுத்துக்கொள்கின்றன. எனவே, அலுவலகங்களில் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்ற புரிதல் எல்லோருக்கும் அவசியமாகும்.
பட்டம் படித்துவிட்டு புதிய பணியாளராக அலுவலகத்தில் சேர்ந்தாலும் அல்லது பயிற்சிக்காக பணியாற்றினாலும் அலுவலகப்பணியில் வெற்றிக்கொடி நாட்டுவதற்கு ஒருவரின் அலுவலக நடத்தைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை மறந்துவிடக்கூடாது. இந்த நடத்தைகள் தன்னியல்பாக ஒருவரிடம் இல்லாவிட்டாலும், அவற்றை கற்றுக்கொள்வது மிகமிக முக்கியமாகும்.
முதலில், அலுவலகத்தில் எப்படி நடந்து கொள்ளக் கூடாது? என்பதைப் பார்ப்போம் மின்னஞ்சல்:
ஒருவருக்கு வரும் மின்னஞ்சலுக்கு பதில் எழுதும்போது "ரிப்ளை' அல்லது "ரிப்ளை ஆல்'என்றிருக்கும். அலுவலகத்தின் உயரதிகாரி பணியாளர்கள் அனைவருக்கும் அனுப்பிய மின்னஞ்சலுக்குப் பதில் எழுதும் அவசியம் இருந்தால், அதற்கான பதிலை அனுப்பியவருக்கு மட்டும் அனுப்ப வேண்டுமா? அல்லது பணியாளர் அனைவருக்கும் அனுப்ப வேண்டுமா? என்பதை முடிவு செய்துகொள்ள வேண்டும். "ரிப்ளை' என்றால் மின்னஞ்சல் அனுப்பியவருக்கு மட்டும் பதில் அனுப்பப்படும். "ரிப்ளை ஆல்' என்றால் அந்த மின்னஞ்சலைப்
பெற்றிருக்கும் அனைவருக்கும் பதில் சென்றுவிடும். உங்கள் பதில் எல்லோருக்கும் தெரியவரும் என்பதால், இது தேவையில்லாத குழப்பத்திற்கு வழிவகுக்கலாம்.
அதனால் யாருக்கு பதில் அளிக்க வேண்டுமென்பதை முடிவுசெய்து, மின்னஞ்சலுக்கு பதில் எழுதுவது நல்லது. அலுவலகரீதியான மின்னஞ்சல் தொடர்புகளை தோழமையாகவும், வேலைநிமித்தமாகவும் அமைத்துக் கொள்வது நல்லது. தனிப்பட்ட கடிதங்களாக இல்லாமல், பணி அடிப்படையிலான கடிதங்களாக அவற்றை அமைத்துக்கொள்வது பொதுவான விதியாக கொள்ள வேண்டும்.
தனிப்பட்ட பேச்சுக் கூடாது:
அலுவலகப்பணியில் ஈடுபட்டிருக்கும்போது, சக பணியாளர்களிடம் தனிப்பட்டமுறையில் பேசக்கூடாது. தனிப்பட்ட தொலைபேசி அழைப்புகளையும் எடுத்து பேசக் கூடாது. தனிப்பட்ட தொலைபேசி அழைப்புகளை அலுவலகங்களுக்கு வெளியே சென்று பேசுவது நல்லது. வேலையிடத்தில் அமர்ந்துகொண்டு தனிப்பட்டமுறையில் தொலைபேசியில் பேசுவது சக பணியாளர்களுக்கு எரிச்சலூட்டலாம். தனிப்பட்ட விவகாரங்களை அலுவலகத்தில் பேசக்கூடாது.
கோப தாபங்கள் கூடாது:
அலுவலகத்தில் நுழையும்போது கோப தாபங்கள் போன்ற தனிப்பட்ட உணர்ச்சிகளை விட்டுவிட்டு வருவது நல்லது. சக பணியாளர்களிடம் தனிப்பட்ட உணர்ச்சிகளை வெளிப்படுத்தக் கூடாது. அடக்க முடியாத கோப தாபங்களை ஆற்றுப்படுத்திக் கொள்ள தனியாக நேரம் ஒதுக்கிக் கொள்ள வேண்டும். வேலையில் ஏதாவது கோப தாபங்கள் இருந்தால், அது குறித்து கண்காணிப்பாளர்கள் அல்லது மனிதவளத்துறையிடம் தெரிவித்து பிரச்னையை தீர்த்துக் கொள்வது நல்லது. கோபங்கள், வேலையை பாழ்படுத்திவிடக்கூடாது என்பதில் கவனம் தேவை.
கேள்விக்கேட்க தயங்கக்கூடாது:
பணிநிமித்தமாக கொடுக்கப்படும் வேலைகள் தொடர்பாக ஏதாவது சந்தேகம் இருந்தால், அவை சிறுபிள்ளைத்தனமாக இருந்தாலும் பட்டென்று கேட்டுவிடுவது நல்லது. இல்லாவிட்டால் வேலையை தவறாகச் செய்து முடித்து அலுவலக எதிர்பார்ப்பை நிறைவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுவிடும். நமக்கு எல்லாம் தெரியும் என்ற மிதம் மிஞ்சிய நம்பிக்கையை விட தீங்கானது எதுவும் இல்லை. கேள்விகேட்டு சந்தேகம் போக்கிக்கொள்வது வேலையை திறமையாக செய்து முடிக்க உதவும்.
புறம்பேசக்கூடாது:
அலுவலகப்பணியில் மிகமுக்கியமாக செய்யக் கூடாதது, புறம்பேசாதிருத்தல் ஆகும். அறவே புறம்பேசாதீர்கள். உங்கள் உயரதிகாரி, சகபணியாளர் அல்லது நிறுவனத்தைப் பற்றி குறை சொல்லி புறம்பேசுவது, உங்களுக்கு நீங்களே குழிவெட்டிக் கொள்வது போல. புறம் பேசுவோரை யாரும் நம்பகத்தன்மையோடு பார்க்கமாட்டார்கள். அலுவலகரீதியான உயர்வுக்கு இது பெரும் தடையாக இருந்துவிடும்.
எமோஜிக்கள் கூடாது:
அலுவலகரீதியான மின்னஞ்சல்களை அனுப்பும்போது எமோஜிக்களை பயன்
படுத்தக்கூடாது. சம்பிரதாயமான உரையாடல்களை மட்டுமே மின்னஞ்சலில் பயன்படுத்த வேண்டும். மின்னஞ்சல்களை அறிந்தும், புரிந்தும் எழுதுவது அவசியமாகும். தொடர்ந்து பழகும்போது அலுவலகரீதியான மின்னஞ்சல்களை எப்படி எழுதுவது என்ற பயிற்சி தானாகவே கிடைக்கும்.
எதிர்த்துப் பேசக் கூடாது:
உயரதிகாரிக்கும் உங்களுக்கும் அதிக வயது வித்தியாசம் இல்லாவிட்டாலும்,
எந்தச் சூழ்நிலையிலும் அவர்களை எதிர்த்து பேசக் கூடாது. உயரதிகாரிக்கு உரிய மரியாதையைத் தருவது மிக மிக முக்கியம். உயரதிகாரியை மறைமுகமாகத் திட்டுவது
அல்லது வெறுப்பு காட்டும் உடல்மொழியை வெளிப்படுத்துவது அறவே கூடாது. உயரதிகாரிகளோடு கருத்து முரண்பாடு எழவே கூடாதா? என்றால் எழலாம். ஆனால், உங்களது கருத்துகளை எப்படி முன்வைக்கிறீர்கள் என்பது முக்கியம். குறிப்பிட்ட திட்டம் அல்லது வேலை தொடர்பாக எதிர்கருத்துகளை தெரிவிப்பதை தவிர்க்க வேண்டியதில்லை. ஆனால், எதிர்த்து அல்லது கோபத்தில் பேசுவது கூடாது.
கூடிப் பழகும்போது அலட்சியம் கூடாது:
அலுவலகப்பணியாளர்கள் சுற்றுலா அல்லது விழாக்களில் கலந்து கொள்ளும்போது இயல்பாக பேசிக் கொள்ள வாய்ப்பு உருவாகும். அப்படி கூடிப்பழகும் போதும் அலட்சியமாக பேசிவிடக் கூடாது. மனம்விட்டு பேசினாலும், மறுநாள் இருவரும் அக்கம்பக்கத்தில் அமர்ந்து வேலை செய்ய வேண்டும் என்பதால், அளந்து பேசுவதை மறந்துவிடக்கூடாது.
பதற்றம் கூடாது:
வேலையில் திறமையானவராக இருக்கும் போது இயல்பாக தன்னம்பிக்கை அதிகமாக காணப்படும். அதற்குரிய மரியாதையை எதிர்பார்ப்பதும் உண்டு. ஆனாலும் உங்கள் பணி எல்லையை மீறி எதையும் செய்யக்கூடாது. பொதுவாக கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளலாம். அதில் பதற்றம் இருக்கக்கூடாது. எல்லை கடந்து பிறரின் வேலையில் மூக்கை நுழைப்பதும் தவறு. கவனம் தேவை.
மாற்று ஏற்பாட்டை மறக்கக் கூடாது:
திரைப்படங்களை போல பணியிலும் எதிர்பாராத திருப்பங்கள், நிகழ்வுகள் இயல்பானதுதான். வாழ்க்கை மற்றும் அலுவலகத்தில் நேரும் சில எதிர்பாராத சம்பவங்களை எதிர்கொள்ள மனதை நெகிழ்வாக வைத்துக் கொள்வது நல்லது. மாறிவரக் கூடிய சூழ்நிலைகளை லாகவமாக சமாளிக்க மாற்று ஏற்பாடுகளை எப்போதும் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...