நல்லகண்ணு உடல்நிலை! விஜய் விசாரிப்பு!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

கிளர்ந்தெழுங்கள் தோழர்களே! - 27: உறையும் உரிமைகள்!

இந்திய கலாசாரத்தில் வேற்றுமையில் ஒற்றுமை இருப்பது எப்போதும் உயர்வாக பேசப்படும் கருத்து. வேறுபடுகிறோம்... மாறு படுகிறோம்,

News image
Updated On :28 ஜனவரி 2024, 5:41 am

ஆர். நட​ராஜ்

இந்திய கலாசாரத்தில் வேற்றுமையில் ஒற்றுமை இருப்பது எப்போதும் உயர்வாக பேசப்படும் கருத்து. வேறுபடுகிறோம்... மாறு படுகிறோம், வேறுபடலால் மாறுபடுதல். ஆனால்... எப்போது மேம்படுதல்? மேம்பாடு தானே பயன்பாடு? சமுதாயம் வலிமை பெற தழைக்க என்ன செய்ய வேண்டும்?    
சகிப்புத்தன்மை  நமது பண்பாட்டில் ஊறியுள்ளது. நாட்டின் முன்னேற்றம் எல்லாருக்கும் சென்று அடையாததற்குக் காரணம் எதையும் சகிக்கும் மனநிலை. நமது உரிமைகளைக் கேட்டுப் பெற தயக்கம். சாதாரணமாக அரசு அதிகாரிகளை அணுக முடியாது. ஆயிரம் கேள்விகள் கேட்பார்கள். உதவி நாடி வருபவரை அலைக்கழித்து "முடியாது' என்ற பதிலைத் தருவார்கள். மக்களின் கண்ணியம் காப்பாற்றப்படுவதில்லை. 
மனித உரிமைகளில் நான்கு தூண்கள்: உயிர்-உடமை பாதுகாப்பு, சுதந்திரம், சமத்துவம், கண்ணியம். இவைதான் எல்லா நாடுகளின் அரசியல் சாசனத்திலும் விரிவாக உறுதி செய்யப்பட்டிருக்கும்.  
துப்பாக்கி முனையில் ஆட்சியைக் கைப்பற்றிய ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான் அரசும் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்றுதான் சொல்கிறது. ஆனால் தினம் நடக்கும் துப்பாக்கி சூடு மக்கள் கொல்லப்படுவது வேறு கதை என்று சொல்கிறது! 
மனித உரிமைகள் பற்றிய விவாதம் தொடர்ந்து நடப்பதற்குக் காரணம், அதைப் பற்றிய விழிப்புணர்வு பெருகியுள்ளது. பல இடங்களில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன. ஊடகங்களின் மூலம் மனித உரிமைகள் பறிப்பு பற்றி செய்தி அதிகம் வருவதால் அதைப் பற்றிய சிந்தனை வளர்ந்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. வன்முறைக் கலாசாரம் பரவுவதற்கு காரணம், சமூக நிலைப்பாடுகள் குலையும் போது கேள்வி கேட்க  நாம் தயங்குவதே. "நமக்கேன் வம்பு?' என்று ஒதுங்குகிறோம். 
இரண்டாவது உலகப் போரில் லட்சக்கணக்கான இராணுவப் படையினரும் பொதுமக்களும் உயிரிழந்தனர். அதற்குப் பிறகுதான் உலக நாடுகள் கூடி வருங்
காலத்தில் இத்தகைய வன்முறை ஒழிக்கப்பட வேண்டும்; 
சர்வதேச அமைதிக்குப் பாடுபட வேண்டும் என்று 1945- இல் ஐக்கிய  நாடுகள் சபையை உருவாக்கினர்.  1948- ஆம் வருடம் மனித உரிமைகள் பாதுகாக்க முப்பது ஷரத்துகள் அடங்கிய அறிக்கையை திருமதி. எலியனார் ரூஸ்வெல்ட் தலைமையில் அமைக்கப்பட்ட  குழு ஐக்கிய நாடுகள் சபைக்கு அளித்தது. டிசம்பர் 10 குழு அறிக்கை அளித்த நாள் "உலக மனித உரிமை நாளாக' அனுசரிக்கப்படுகிறது.  
உலக சமூகம் பல்வேறு காலகட்டத்தில் மனித உரிமைகளை நிலை நாட்ட போராடியுள்ளது. 
1215 -ஆம் வருடம் "மாக்னா கார்டா' என்ற நீதி வழியில் மக்கள் ஆட்சி மற்றும் உரிமைகள் அடங்கிய தொகுப்பினை அப்போது கோலோச்சிய  அரசன் ஜான் முன் அளித்ததாகவும் அரசன் அதனைப் பிரகடனப்படுத்தியது உலகின் முதல் ஆவணப்படுத்தப்பட்ட  உரிமைகள் தொகுப்பு என்றும் கூறப்படுகிறது.  ஆனால் இதற்கு ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் உத்திரமேரூர் கிராமத்தில் ஜனநாயக முறையில் நிர்வாகம், மக்களின் உரிமைகளுக்கு பாதுகாப்பு, வெளிப்படையான நிர்வாகம், நடைமுறைப் படுத்தப்பட்டது என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.  
உத்திரமேரூர் சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்பட்ட கிராமம் முப்பது வார்டுகளாக பிரிக்கப்பட்டு, அதற்கு முறையாக தேர்தல் நடைபெற்றது. இரண்டு சபைகள் மேல் சபை, ஊர் பெரியவர்கள், படித்தவர்கள் இதற்குப் போட்டியிடலாம். வயது 35- இலிருந்து 
எழுபது வரை. இந்தியப் பாராளுமன்றத்தின் மேல் சபை ராஜ்ய சபாவை ஒத்தது. இரண்டாவது சபை ஊர் சபை. அதற்கு எல்லாரும் போட்டியிடலாம். அங்கத்தினர்களின் பதவி காலம் ஒரு வருடம். மூன்று முறைக்கு மேல் ஒருவர் அங்கத்தினராக இருக்க முடியாது. இன்னொரு முக்கிய வரவேற்கத்தக்க நிபந்தனை, ஏதாவது ஒரு உறுப்பினர் சரியாகப் பணிசெய்யவில்லை அல்லது ஊழலில் சிக்கினால் அல்லது, கொலை, கொள்ளை சொத்து அபகரித்தல், அரசு நிலத்தை அபகரித்தல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டால் உடனே அவரது உறுப்பினர் பதவி பறிக்கப்படும். அரசியலில் ஊழலை ஒழிக்க சிறந்த வழி இது தானே! 
அங்கத்தினர்கள் எல்லாருக்கும் பணிகள் வரையறுக்கப்பட்டன. நீர் மேலாண்மை, குளங்கள் பாதுகாப்பு,  சுற்றுப்புறச் சூழலுக்கு பெரியவர்கள் அடங்கிய முக்கியமான குழு அமைக்கப்பட்டது. இது தவிர, தொடர் மேற்பார்வையிட  ஏரிகள் வாரியம், தோட்டங்கள் வாரியம், பஞ்சாவரம் என்ற நிலைகுழு, தங்க வாரியம், கருவூலம், வரவு செலவு கணக்கு மேற்பார்வையிட என்று துல்லியமாக நிர்வாகம் இயங்கியது. 
மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டன. 
மிக சிறந்த அரசாட்சி முறை தமிழ் நாட்டில் 1220 ஆண்டுகளுக்கு முன்பு நடைமுறைபடுத்தப்பட்டது! இந்த தகவல்கள் உத்திரமேரூரில் உள்ள மூன்று கோயில் கல்வெட்டுகளின் அடங்கியுள்ளன. 
பிரதமர் மோடி   இதை பற்றி பெருமையாக புதிய பாராளுமன்றத்தின் அடிக்கல் நாட்டுவிழாவில் குறிப்பிட்டார். 
மேனாள் தேர்தல் ஆணையர்  சேஷன்   நடைமுறைப்படுத்திய தேர்தல் சீர்த்திருத்தங்களை உத்திரமேரூர்  வழிகாட்டுதலின் அடிப்படையில் அவர் மேற்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். சேஷன்  தேர்தல் ஆணையத் தலைவராக நியமிக்கப்பட்டவுடன் மனகிலேசத்துடன் இருந்தார். காஞ்சி பெரியவரிடம் ஆசி பெற அவரைச் சந்தித்தார். அப்போது காஞ்சி மகாசுவாமி தேர்தல் கமிஷன் தலைமை மிக முக்கியமான  பொறுப்பு; சீர்திருத்தங்கள் செய்ய நல்ல வாய்ப்பு உண்டு என்று உத்திரமேரூர் பஞ்சாயத்து தேர்தல் முறையைக் கூறி, அந்த கோவில்களில் கல்வெட்டுகள் உள்ளன; அதே வகையில் பணி செய்ய வேண்டும் என்று ஊக்கப்படுத்தியதாக   சேஷன்  குறிப்பிட்டுள்ளார். அதன் பயன்பாடு நாட்டுக்குக் கிடைத்தது.  அவரின் தேர்தல் சீர்திருத்தங்கள் மக்களின் பேராதரவைப் பெற்றன. அரசியல்வாதிகளின் தன்னிச்சை போக்கிற்கு கடிவாளம் போடப்பட்டது.  முன்பெல்லாம் விடிய விடிய பிரசாரம் நடக்கும். காவலர்கள் கால் கடுக்க நிற்க வேண்டும். தேர்தல் கள சத்தம் காதைப்  பிளக்கும். இவை எல்லாவற்றிற்கும் முற்றுப் புள்ளி வைத்தார் சேஷன். 
தேர்தல் செலவினத்திற்கு உச்ச வரம்பு விதிக்கப்பட்டது.  எல்லாவிதத்திலும் ஏற்றம் தரும் மாற்றம். அதே சமயம் சாதாரண மக்கள் பணியாளர்களின் உரிமைகளுக்குப் பாதுகாப்பு. 
உத்திரமேரூர்  கோயில்களில் உள்ள தேர்தல் முறை கல்வெட்டுகளின் நகல் தில்லியில் உள்ள மத்திய தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் பிரதானமாக வைக்கப்பட்டுள்ளது. 
தேசிய மனித உரிமைகள் ஆணையம் 1993 -ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. எல்லா மாநிலங்களிலும் மனித உரிமை ஆணையங்கள் இயங்குகின்றன. குடியிருப்பு வசதி, உணவுப் பாதுகாப்பு, எளிதாகக் கிடைக்கக் கூடிய மருத்துவ வசதி, கல்வி கற்பதற்கு உரிமை, பாதுகாப்பான காப்பு இவை  முக்கிய உரிமைகளாக தேசிய ஆணையம் வலியுறுத்தியுள்ளது.  
குடிசைப் பகுதிகளில்லா நகரங்கள் குடிசையில்லா கிராமங்கள் உருவாக்க வேண்டும் என்று திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. நெரிசலான ஆக்கிரமிப்பு பகுதிகளிலிருந்து குடிசைகளை அவ்வளவு எளிதாக அகற்ற முடியாது. எல்லாருக்கும்  நகருக்குள்ளேயே வீடு வேண்டும். ஆனால் அடுக்கு மாடி கூடாது. மூன்று அடுக்குகளுக்கு மேல் கட்டக்கூடாது என்ற கோரிக்கை அதற்கு சில்லரை அரசியவாதிகளின் தூண்டுதல் இந்த பிரச்னைகளால் சென்னையில் குடிசை பகுதிகளில் வீடு கட்டுவது தாமதமாகிறது.
மற்ற நகரங்களில் இம்மாதிரியான தடங்கல்கள் இல்லை. மும்பாய் தாராவி போன்ற குடிசைப் பகுதிகள்  அகற்றப்பட்டு வசதி படைத்தவர்களுக்கு அதிக விலையில் அந்தப் பகுதி விற்கப்பட்டது. அந்த லாபத்தில் ஏழைகளுக்கு குறைந்த விலையில் வீடுகள் என்ற "க்ராஸ் சப்சிடி' முறையில் திட்டங்கள் நிறைவேற்றியுள்ளார்கள். 
சென்னையில் வீடில்லாதோர் பிரச்னை அதிகம். சுமார் 950 குடிசைப் பகுதிகள் இருக்கின்றன. இதற்கு விரைவில் விடிவு காலம் பிறக்க வேண்டும். உச்சநீதிமன்றம் பத்து லட்சம் ஜனத்தொகை உள்ள நகரங்களில் இரவு தங்கலுக்கு வசதியில்லாதவர்க்கு  விடுதிகள் கட்டப்பட வேண்டும் என்ற தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி பல நகரங்களில் விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. ஓரளவு வீடில்லாதவருக்கு இரவில் பாதுகாப்பு உள்ளது. 
எந்தவொரு மனிதவுரிமை மீறல் என்றாலும் காவல்துறை  தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிர் பாதுகாப்பு முக்கியமான  உரிமை. அதற்கு காவல்துறை தான் பொறுப்பு. அது தவிர, பெண்கள், முதியோர், 
குழந்தைகள், மாற்றுத் திறனாளிகளுக்கான  உரிமைகள் பாதுகாப்பையும் காவல்துறை உறுதி செய்ய வேண்டும்.  
இந்திய அரசியல் சாசனத்தில் உயிர் பாதுகாப்பு உட்பிரிவு -21 கொடுக்கப்பட்டிருக்கிறது. எந்த ஒரு நபரையும் சட்ட திட்டத்திற்கு உட்பட்டுத்தான் கைது செய்ய முடியும். தனி நபர் சுதந்திரத்திற்கும் உயிருக்கும் பாதுகாப்பு இந்திய குடிமகனுக்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கு வந்திருக்கும் வெளிநாட்டவருக்கும் உண்டு. 
அதனால் தான் உரிமைகள் ஆணையம், "கஸ்டோடியல் கேர்'- காவலில் பராமரிப்பு விதிகளுக்கு உட்பட்டு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது. ஆனால் பல நேர்வுகளில் காவல்துறையினரால் இழைக்கப்படும் வன்முறை வெளிச்சத்திற்கு வருகிறது.  
அன்றாட காவல் பணியில் பல பிரச்னைகள் இருக்கின்றன. குற்றங்களால் பாதிக்கப்பட்டவரின் எதிர்பார்ப்பு, உடனடியாக காவல் துறையினர் குற்றங்களை புலனாய்வு செய்து கண்டுபிடிக்க வேண்டும் என்பதாக இருக்கிறது. இதனால் அதிக அழுத்தத்துடன் போலீஸ் பணி செய்கிறது. வாரத்திற்கு ஒருமுறை விடுமுறை என்று அறிவித்தாலும் பெருகி வரும் அவசரப் பணிகளில் அது ஓரளவு தான் சாத்தியப்படும். இதனால் தான் காவலர்கள் பொறுமை இழந்து நிதானமும் இழக்கிறார்கள்.   
காவலரும் ஆன்மீகவாதிகளும் ஒருவிதத்தில் ஒரே பணியையே செய்கிறார்கள். எல்லாச் சட்டமும் சமுதாய நலனுக்காகவும் நல் மதிப்பீடுகளைப் பாதுகாக்கவும் இயற்றப்படுகிறது. அதை காவல்துறை அமலாக்குகிறது. தார்மீக அமலாக்கம் என்று கூறலாம். ஆன்மீகவாதிகள் அன்பால் போதனையால் சிந்தையைத் தூண்டி அறிவுறுத்துகிறார்கள். அவர்களுக்கு கூட்டம் வருகிறது. ஆனால் அதே தார்மீக அடிப்படையில் அமலாக்கம் செய்யும் காவல்துறையைக் கண்டால் கூட்டம் ஓடுகிறது! போலீசும் அன்பால் மனித நேயத்தோடு குற்றங்களைக் களையவும், குற்றவாளிகளை கட்டுப்படுத்தவும் முற்பட்டால் மக்கள் "அடிச்சி பிடிச்சி உதச்சி குற்றத்தை கண்டுபிடிங்க' என்கிறார்கள்! காவலுக்கு சோதனை என்றால் தனிமையில் தான் வேதனையை அனுபவிக்க வேண்டும். சாதனையை மக்கள் போற்றுவதில்லை! போலீசுக்கு தர்மசங்கடமான நிலை... இருதலை கொள்ளி எறும்பு போல்! 
கதவுகள் பல. வீடு, வாசல்,கோயில் அலுவலகம், சிறைக்கு மட்டுமா கதவுகள்? ஆனால் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் சிறைதான் அடைக்கலம் என்று சமுதாயத்தை வெறுத்து வாழ்கிறார்கள். நீதியரசர் கிருஷ்ண ஐயர் கூறியது போல் மனித உரிமைகள் சிறைக் கதவுகளை ஊடுருவி சிறைவாசிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும். அதற்கு சிறைத்துறை நல்ல பல திட்டங்களை நடைமுறைப் படுத்துவது வரவேற்கத்தக்கது.  
உரிமைகள் மீது  பெருமை பாராட்டுவோம். 
விழிப்புணர்வோடு உரிமைகளை நிலை நிறுத்துவோம்.
சென்ற வாரக் கேள்விக்கு பதில்: பேஸ்புக் சமூக வலை தளம் 2004 -ஆம் வருடம் ஹார்வர்டு கல்லூரி மாணவர்கள் மார்க் சுகர்பெர்க்,எட்வர்டோ சாவரின், 
டஸ்டின் மஸ்கோவிட்ஸ், க்ரிஸ் ஹ்யூஸ் நால்வரால் தொடங்கப்பட்டது.
இந்த வாரக் கேள்வி: உத்திரமேரூர் சதுர்வேதி  மங்கலம் தேர்தல் உரிமை எந்த சாம்ராஜ்ய பேரரசனால் உருவாக்கப்பட்டது?

(விடை அடுத்த வாரம்)

கட்டுரையாளர்:

மேனாள் காவல்துறைத் தலைவர்
மேனாள் சட்டமன்ற உறுப்பினர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.