கிளர்ந்தெழுங்கள் தோழர்களே! - 26: சிந்தனையைப் புதிதாக்கு!
படிப்பு முடித்தவுடன் உடனே வேலை கிடைத்தால் எவ்வளவு நிம்மதியாக இருக்கும்?


படிப்பு முடித்தவுடன் உடனே வேலை கிடைத்தால் எவ்வளவு நிம்மதியாக இருக்கும்? இது எல்லா பெற்றோருடைய கனவு. பள்ளிப் படிப்பு முடிந்தவுடன் மேல் படிப்பிற்கு மாணவர்கள் தயாராகிறார்கள். மாணவன் என்ன பாடம் எடுத்து படிக்க விரும்புகிறான் என்பது முக்கியமல்ல; எந்த பாடப் பிரிவை நோக்கி பெரும்பாலோர் செல்கிறார்களோ அதன் பின்னே மற்றவர்களும் ஓடுகிறார்கள்! கணினி சம்பந்தப்பட்ட படிப்பு சில வருடங்கள் பிரதானமாக நாடப்பட்டது. பொறியியல், மருத்துவப் படிப்பிற்கு இணையாக காமர்ஸ் பட்டப் படிப்பு கவர்ந்துள்ளது.
பெற்றோர் கல்லூரி கல்லூரியாக படி ஏறி, கடைசியில் பெயர் தெரியாத - நேற்று தோன்றிய - வசதி இல்லாதகல்லூரியில் வயிற்றைக் கட்டி வாயைக் கட்டி சேமித்த பணத்தைக் கட்டி மாணவனைச் சேர்க்கிறார்கள். மூன்று வருடம் கழித்துத்தான் தெரிகிகிறது அந்த பட்ட படிப்பை வைத்து ஒரு வேலையும் கிடைக்காது என்று! ஆனால் அதிகமான மாணாக்கர்கள் தமிழகத்தில் உயர்கல்வி படிக்கிறார்கள் என்று நாம் பெருமைப்படுகிறோம்!
அந்த ஏட்டுக் கல்வியால் மாணவருக்கோ சமுதாயத்திற்கோ ஒரு பயனும் இல்லை. புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள், அதன் மூலம் தொழில் புரட்சி, கனரக தொழிற்சாலைகள், எரிசக்தி மூலம் மின்சாரம்உற்பத்தி , பல்நோக்கு பயன் தரும் பிரம்மாண்ட நீர் அணைகள், அணுசக்தி கண்டுபிடிப்பு, கணினி, இண்டர்நெட் மூலம் தகவல் பரிமாற்ற புரட்சி என்றுஅடுத்தடுத்து மாற்றங்கள் அதிவேகமாக உலகை வியாபித்துள்ளது. பயனுள்ள முன்னேற்றகரமான மாற்றங்களில் பல, அதே வேளையில் சுற்றுப்புறச் சூழல் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. வெப்ப நிலை அதிகரிப்பு என்று இயற்கையின் கோர தாண்டவம் உலகை அச்சுறுத்துகிறது.
அறிவுப் புரட்சி, இணைய தள வசதி ஆகியவற்றின் மூலம் வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகளுக்கிடையே இருந்த இடைவெளி சுருங்கி வருகிறது. தொழில் நுட்பப் பரிமாற்றம் மூலம் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக இந்தியா, பிரேசில், கொரியா, வியட்நாம், மத்திய கிழக்காசிய நாடுகள் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளன. மென் பொருள் தயாரிப்பதில் இந்தியர்கள் சாதனை படைத்து வருகிறார்கள்.
கணினி, அதை இயக்கும் மென் பொருள், இதன் அடுத்த பரிமாணம் செயற்கை நுண்ணறிவு. மனிதன் வடிவமைத்த இயந்திரங்கள் மிகத் துல்லியமாக மனிதனை விட சாமர்த்தியமாகவும் திறமையாகவும் இம்மியளவும் பழுதில்லாமலும் கொடுக்கப்பட்ட பணிகளைச் செய்கின்றன. செயற்கை அறிவு படைத்த இயந்திரங்கள் - ரோபோக்கள்- பலர் செய்யக் கூடிய வேலையை நொடிப் பொழுதில் செய்து முடிக்கின்றன!
ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் (ஏஐ) எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் செயல்படும் நிறுவனங்களுக்கு, தொழிற்சாலைகளுக்கு இப்போதிருப்பது போல் அதிகப் பணியாளர்கள் தேவைப்பட மாட்டார்கள். நினைத்துப் பார்க்க முடியாத அளவில் ஆள் குறைப்பு ஏற்படும்.
"அறிவுப் புரட்சி அதி வேகமாக நடைபெறுவதால் இன்றைய கண்டுபிடிப்பு வெகு விரைவில் காலாவதியாகி விடுகிறது! கல்லூரிப் படிப்பும் அப்படித்தான்' என்கிறார் பிரபல எழுத்தாளர் யுவால் நோவா ஹராரி. பட்டப் படிப்பு முடியும்போது படித்ததெல்லாம் பழையனவாகி, புதியன முளைக்கின்றன, மற்றவற்றைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு.
"இருபத்தியோராம் நூற்றாண்டின் 21 படிப்பினைகள்' என்ற தன் புத்தகத்தில் 2050 - ஆம் ஆண்டுக்குள் நிகழப்போகும் மாற்றங்கள் குறித்து விவரிக்கிறார் யுவால் நோவா ஹராரி. அவரது முதல் புத்தகம் "ஹோமோ சேபியன்ஸ்' உலக அளவில் அதிகம் விற்பனையான புத்தகங்களில் ஒன்று.
டெஸ்லா என்ற நவீன பயணிகள் வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனம் முதலில் மின்சாரத்தால் இயங்கக்கூடிய வாகனங்களைத் தயாரித்தது. இப்போது நமது நாட்டிலும் எலக்ட்ரிக் கார்கள் வந்துவிட்டன. உச்சத்தை தொடும் பெட்ரோல், டீசல் விலையினால் வரும் காலத்தில் எலக்ட்ரிக் வாகனங்கள் அதிகமாக சந்தைக்கு வரும். அரசும் இதை ஊக்குவிக்கும் விதமாக வாகன வரியைக் குறைத்திருக்கிறது. வாகனங்களுக்கு மின்னேற்றம் செய்ய வசதியாக பல தளங்கள் நெடுஞ்சாலைகளில் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
டெஸ்லா நிறுவனம் ஒரு படி மேலாக இந்த வாகனங்களை கணினி மூலமாக வாகன ஓட்டி இல்லாமல் இயக்கும் வகையில் வெற்றிகரமாக வடிவமைத்துள்ளது. மனிதர்களைப் போல் அல்லாது, கணினி மென்பொருளின் கட்டளைப்படி வாகனங்கள் சாலை விதிகளை மதிக்கும், வேகக் கட்டுப்பாடுகள் உள்ள சாலைகளில் மிதமான வேகத்துடன் இயங்கும். எதிரும் புதிருமாக வாகனங்கள் மோதும் விபத்துக்கள் இருக்காது. மது அருந்திவிட்டு தறிகெட்டு வாகனங்களை ஓட்டும் யம தர்மராஜாக்களின் அராஜகம் இருக்காது.
உலக சுகாதார கூட்டமைப்பு தொற்றுநோய், மாரடைப்பு, சர்க்கரை வியாதி, புற்று நோய் போன்ற மனித உயிரிழப்புக்கான பத்து முக்கிய காரணிகளில் சாலை விபத்தில் உயிரிழப்பு ஏழாவது இடத்தில் உள்ளது என்று அறிவித்துள்ளது. வருடத்திற்கு உலகில் பதினைந்து லட்சம் மக்கள் சாலை விபத்தில் உயிரிழக்கிறார்கள். வளர்ந்த நாடுகள் ஐரோப்பா, அமெரிக்கா நியூசிலாந்த் போன்ற நாடுகளில் விபத்துகள் வளரும் நாடுகளை ஒப்பிட்டால் குறைவு.
இந்தியாவில் 2019 -ஆம் ஆண்டு 4.49 லட்சம் வாகன விபத்துகள். அவற்றில் 1,51,113 மக்கள் உயிரிழந்தனர்.
உலகில் உள்ள வாகனங்களில் இந்தியாவில் 1% தான் உள்ளன. ஆனால் உலக உயிரிழப்பில் 11% உயிரிழப்பு நமது நாட்டில் சாலைகளில் நடக்கிறது என்பது நம்மைச் சிந்திக்க வைக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் 441 இறப்புகள், ஒரு மணி நேரத்தில் 17 சாலை சாவுகள்! இதில் 25% இருபது வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள். சாலை விபத்துக்களால் பொருளாதார இழப்பு பல கோடி ரூபாய். இதற்கெல்லாம் முடிவு கட்டும்விதமாக தானியங்கி வாகனங்கள் வருங்காலத்தில் வருவதை எதிர்நோக்குவோம்!
மருத்துவத்திலும் பல மாற்றங்கள் நிகழ இருக்கின்றன. சாதாரண ஜுரம், வயிற்றுப் போக்கு, வாயு உபத்திரவம் இதற்கெல்லாம் மருத்துவரை நாட வேண்டியதில்லை. சினிமாவில் வருவது போல் டாக்டர்கள் வீடு தேடி நோயாளிகளைப் பார்க்கும் காலம் மாறிவிட்டது. கணினி மூலமாகவே ஆலோசனை பெறலாம்.
அறுவைச் சிகிச்சை, பெரிய நோய்களுக்கு மட்டும் மருத்துவமனைக்குச் சென்றால் போதும்.அறுவைச் சிகிச்சையும் நிபுணர்களின் கட்டளைக்கு இணங்க ரோபோக்கள் செய்துவிடும், ஒரு பிசிறு இல்லாமல்!
மருத்துவ உலகில் ஆராய்ச்சி மூலம் புதிய நோய் தடுப்பு, நோய் குணப்படுத்தும் மருந்துகள், புதிய பரவக் கூடிய நோய்களின் தாக்கம் இவை எல்லாவற்றையும் செயற்கை நுண்ணறிவு மூலம் ஒருங்கிணைத்து சரியான தகவலை தாமதமின்றி மருத்துவ இணைய தளம் வழங்கவல்லதாக இருக்கும். இதன் மூலம் நவீன நகரங்களில் வசதி படைத்தவர்கள் பெறக்கூடிய சிகிச்சைக்கு இணையாக உலகில் உள்ள எந்த கடைக்கோடியிலிருந்தும் ஸ்மார்ட் போன் வழியே சிறந்த மருத்துவ உதவி பெற முடியும்.
"ட்ரோன்' எனப்படும் தானியங்கி சிறிய விமானங்கள், தாழ்ந்து பறந்து கேமரா மூலம் படம் எடுத்து, மின் அஞ்சலில் அரிய தகவல்களை உள் நாட்டு பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கும் காவல்துறைக்கும் எல்லைப் பாதுகாப்பு ராணுவத்திற்கும் அளிக்கவல்லது. கூட்டம் கூடும் இடத்தில் கண்காணிக்கவும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும் ட்ரோன்கள் பெருமளவில் உபயோகப்படுத்தப்படுகின்றன. ஆக்கிரமிப்பு பற்றிய தகவல்கள் உடனடியாக கிடைக்கப் பெற்று உரிய நடவடிக்கை எடுக்க ஏதுவாக உள்ளாட்சி துறைக்கும் ட்ரோன்கள் பெருமளவில் உபயோகப்படுத்தப்படுகின்றன. பல பணியாளர்கள் செய்வதை இத்தகைய தானியங்கி உபகரணங்கள் செய்துவிடும்.
வியட்நாம், பங்களாதேஷ் போன்ற பின் தங்கிய நாடுகள் அதிகமாக ரெடிமேட் ஆடைகளைத் தைத்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. தொழிலாளர்களுக்கான கூலி குறைவு; மற்ற கட்டமைப்பு செலவுகள் இல்லை. இதன் மூலம் பின் தங்கிய நாடுகளில் ஏழைகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. அதேசமயம் பன்னாட்டு முதலாளிகளுக்கு அதிக லாபம்! இப்போது 3 டி அச்சுகள் வந்துவிட்டன. அந்த அச்சுகளை வைத்து அளவிற்கு ஏற்றவாறு சில மணி நேரத்தில் ஆயிரம் தொழிலாளர்கள் தைக்கும் ரெடிமேட் ஆடைகளை 3டி எந்திரம் தயார் செய்ய முடியும்.
வளரும் நாடுகளில் வேலை வாய்ப்பு குறையும். வளர்ந்த நாடுகளின் பன்னாட்டு நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டும். வேலை இழந்தவர்களுக்கு வேறு வேலை எளிதாகக் கிடைக்காது.
தொழில் புரட்சி ஏற்பட்ட போது விவசாயம் செய்து கொண்டிருந்தவர்கள் நகரங்களுக்குச் சென்று தொழிற்சாலைகளில் சிறு பயிற்சிக்குப் பிறகு வேலை செய்ய முடிந்தது. தானியங்கி இயந்திரங்கள் தடையின்றி இயங்க அதிக தொழில் நுட்பம் அறிந்த நபர்களால் மட்டுமே பணி செய்ய முடியும்.
சாதாரணமாக கூடு விட்டு கூடு பாய்வது போல் வேலையை மாற்ற முடியாது. வேலையின்மை அதிகரிக்கும்; ஆட்சியாளர்களுக்கு இந்த பிரச்னை வருங்காலத்தில் சவாலாக இருக்கும்.
அதனால் தான் நிபுணர்கள் இளைஞர்களின் திறன் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். பாடத்திட்டத்தை நுணுக்கமாக ஆராய்ந்து சீர் செய்ய வேண்டும். மனப்பாடம் செய்து ஒப்பிப்பதை ஊக்கிவிக்கும் கல்வியாளர்களை வெளியேற்ற வேண்டும்.
நாம் புது யுகத்தில் இருக்கிறோம். கணினியில் ஒரு பட்டனைத் தட்டினால் தகவல்கள் வந்து குவிகின்றன. ஆசிரியர்கள் பழைய முறையில் அரைத்த மாவையே அரைப்பதில் பயனில்லை. மாணாக்கர்களின் அறிவார்ந்த சிந்தனையை வளர்க்க வேண்டும். "க்ரிடிகல் திங்கிங்'- கூர்மையான பகுத்து பார்க்கும் சிந்தனை மூலம் தான் தானியங்கி இயந்திரம் உலகில் நமது பங்களிப்பை உயர்த்த முடியும். அதற்கு ஏற்றவாறு பாடத்திட்டங்களை மாற்றி அமைக்கிறார்கள், உலகில் கல்வியாளர்கள்.
இன்னுமோர் பரிமாண மாற்றம் தகவல் பரிமாற்றம் சேகரிப்பில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பிக் டேட்டா - குவியும் தரவுகள் சேமிப்பதில் இணைய தள சூரர்கள் கூகுள், பேஸ் புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் களம் இறங்கியிருக்கிறார்கள். இலவச இணைப்பு என்ற சில எலும்புத் துண்டுகளைப் போட்டு இணைபவர்களின் சொந்தத் தகவல்களை சேமிக்கிறார்கள். நமது எல்லா நடவடிக்கைகளையும் கவனிக்கிறார்கள். நமது பேஸ் புக், ட்விட்டர் பதிவுகள் ஆராயப்பட்டு நமது விருப்பு, வெறுப்புகளைக் கணிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் நமது சிந்தனையை ஆட்கொள்கிறார்கள். தரவு பகுப்பாய்வு என்பது மிக பெரிய விஞ்ஞானமாக வளர்ந்து வருகிறது.
ஜார்ஜ் ஆர்வெல் என்ற எழுத்தாளர் "1984' என்ற புத்தகத்தில் நாட்டின் ஆட்சியாளர்கள் எப்படி மக்களின் சுய முயற்சி, சிந்தனையை குலைத்து தம் வயப்படுத்தி அடிமைகளாக்குகிறார்கள் என்பதை ஒரு சாமானியனின் வாழ்க்கை மூலம் சித்திரித்திருப்பார்.
அவர் அந்த புத்தகத்தை 1949- இல் எழுதினார் 1984 நடக்கப்போவதை வைத்து!அது இப்போது இணையதளத்தில் தனிநபர் தகவல் அபகரிப்பு மூலம் மக்கள் அடிமைப்படுத்தப்படுகிறார்கள்! பேஸ்புக்கில் இணைந்த மக்கள் எண்ணிக்கை 300 கோடி! தேர்தல் நிபுணர்கள் இந்த தகவல்களை விலைக்கு வாங்கி, மக்களை அரசியல் கட்சிகள் தம் வயப்படுத்த எத்தகைய தகவல்களை - அதுவும் எதிர்மறை கருத்துகளை - உண்மையை மறைத்து பரப்ப வேண்டும் என்ற ஆலோசனை வழங்குகிறார்கள்."1984' புத்தகத்தில் வருவது போல் மக்கள் ஆட்டு மந்தைகள் போல் சுய சிந்தனையின்ன்றி இந்த வலையில் வீழ்கிறார்கள்!
"பதவி வந்தால் பணிவு வர வேண்டும் என்பார்கள். ஆனால் பதவி கிடைத்தவுடன் கையில் சுத்தி கிடைத்தது போல் அலைகிறார்கள்.எதை பார்த்தாலும் ஆணி போல் தெரிகிறது. ஓங்கி அடிக்க தோன்றுகிறது ! நேரமும் இருப்பதில்லை, உண்மையைப் புரிந்து கொள்ள! தலைவர்
களிடம் நல்லனவற்றை அண்ட விடாமல் கூட இருக்கும் உதவியாளர்கள் தடுப்பது எல்லா நாடுகளிலும் தலைவர்கள் எதிர்கொள்ளும் சவால்'' என்கிறார் யுவால் நோவா ஹராரி தனது புத்தகத்தில்.
புது யுகத்தை நோக்கி முன்னேறும் இளைஞர்கள் எந்த வலையிலும் சிக்காமல் சுய சிந்தனையை வளமாக்கி நலம் பெற வேண்டும்.
சென்ற வாரக் கேள்விக்கு பதில்: ஐக்கிய நாடுகள் சபை நவம்பர் 25- ஐ பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு நாளாக டிசம்பர் 17 ,1999 -ஆம் ஆண்டு அறிவித்தது.
இந்த வாரக் கேள்வி: பேஸ்புக் சமூக வலை தளம் எந்த வருடம், யாரால் நிறுவப்பட்டது?
(விடை அடுத்த வாரம்)
கட்டுரையாளர்:
மேனாள் காவல்துறைத் தலைவர்
மேனாள் சட்டமன்ற உறுப்பினர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...