/

கணிதமும் வரலாறும் சங்கமித்த நிபுணர்!

மார்க்சிய வரலாற்றறிஞராகப் போற்றப்படுபவர் டி.டி. கோசாம்பி என்று அனைவராலும் அறியப்படும் தாமோதர் தர்மானந்த கோசாம்பி.

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:17 pm

வ.மு. முரளி

மார்க்சிய வரலாற்றறிஞராகப் போற்றப்படுபவர் டி.டி. கோசாம்பி என்று அனைவராலும் அறியப்படும் தாமோதர் தர்மானந்த கோசாம்பி. அவர் ஒரு கணிதவியல் நிபுணர், புள்ளியியல் மேதை, நாணயவியல் அறிஞர், தொல்லியல் ஆர்வலர் என்பது பலரும் அறியாத தகவல்.

போர்ச்சுக்கல் ஆதிக்கத்திலிருந்த கோவாவில், கோஸ்பென் என்னுமிடத்தில் 1907 ஜூலை 31-இல் பிறந்தார் தாமாதர். இவரது தந்தை, புகழ்பெற்ற பெüத்த தத்துவ மேதையும், விடுதலைப் போராட்ட வீரருமான தர்மானந்த கோசாம்பி.

அமெரிக்காவின் கேம்பிரிட்ஜில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பணி புரிய தந்தை சென்றபோது அவருடன் தாமோதரும் மசாசூசெட்ஸ் சென்றார் (1918). அங்கு கிராமர் பள்ளியிலும் கேம்பிரிட்ஜ் லட்டின் பள்ளியிலும் பயின்றார். 1924-இல் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்புக்காகச் சேர்ந்தார். ஆனால் படிப்பைத் தொடர முடியாத சூழல் ஏற்பட்டது.

அவரது தந்தை குஜராத் பல்கலைக்கழகப் பணிக்காக இந்தியா திரும்பியதால், அவருடன் தாமோதரும் நாடு திரும்பினார். 1926-இல் மீண்டும் அமெரிக்கா சென்ற தாமோதர், இடைநிறுத்திய படிப்பைத் தொடர்ந்து, கணிதத்தில் இளநிலைப் பட்டம் பெற்று (1929) தாயகம் வந்தார்.

காசியிலுள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் கணிதம், ஜெர்மன் மொழி கற்பிக்கும் ஆசிரியராகச் சேர்ந்த தாமோதர், அங்கு கணிதவியல் ஆய்வுகளிலும் ஈடுபட்டார். அவரது முதல் கணித ஆய்வேடு (Precessions of an Elliptic Orbit) 1930-இல் வெளியானது.

1931-இல் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் வாய்ப்பு தாமோதரைத் தேடி வந்தது. அதையேற்று அங்கு சென்று பணிபுரிந்தார். அங்கு கணிதம் (Differential Geometry, Path Spaces)தொடர்பான எட்டு ஆய்வேடுகளை வெளியிட்டார்.

1933-இல் புனாவிலுள்ள பெர்கூஸன் கல்லூரியில் சேர்ந்த தாமோதர் 12 ஆண்டுகள் அங்கு கணிதம் கற்பித்தார்.

கல்லூரியில் பணிபுரிந்தபோதும் தாமோதரின் ஆராய்ச்சிகள் தொடர்ந்தன. வரைபடங்களை ஆராய்ந்து 1944-இல் அவர் வெளியிட்ட ஆய்வேடு (The Estimation of Map Distance from Recombination Values) "கோசாம்பியின் வரைபட செயல்பாட்டுக் கொள்கை' என்று புகழ் பெற்றது.

புள்ளியியலிலும் தாமோதரின் ஆய்வுகள் புகழ் பெற்றவை. செங்குத்தான உருமாற்றம் (Proper Orthogonal Decomposition - POD) என்ற அவரது புள்ளியியல் கருத்தாக்கம் (1943) அத்துறையில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது.

இதனிடையே தாமோதரின் கவனம் வரலாற்று ஆய்வில் திரும்பியது. இதற்காக அவர் சமஸ்கிருதம் கற்றுக் கொண்டார். சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட பல மூல நூல்களை அவர் ஆராய்ந்தார். தவிர அவரது அரசியல் கண்ணோட்டமும் மாறியது. தாமோதர் மார்க்சியக் கோட்பாட்டில் காதலுற்றார். மார்க்சிய ஆய்வு அணுகுமுறைகளின் மீது அவரது கவனம் குவிந்தது.

மும்பையிலுள்ள டாடா அடிப்படை அறிவியல் நிறுவனத்தை (TIFR) நிறுவிய விஞ்ஞானி ஹோமி ஜஹாங்கீர் பாபா, தாமோதரின் திறமையை உணர்ந்து அவரை தமது நிறுவனத்தில் இணையுமாறு அழைத்தார். அதையேற்றுச் சென்ற தாமோதர் கோசாம்பி, அங்கு கணித ஆய்வுகளில் ஈடுபட்டார் (1945).

இதனிடையே பண்டைய சமஸ்கிருத அறிஞரான பர்த்ருஹரியின் சுபாஷிதங்களைத் தொகுத்து நூலாக வெளியிட்டார் (1948).

நாடு சுதந்திரம் பெற்றவுடன், யுனெஸ்கோ உதவியுடன், அப்போதுதான் உருவாகிவந்த கணிப்பொறியியலில் ஆய்வு நடத்த பிரிட்டனுக்கும் அமெரிக்காவுக்கும் சென்றார் (1948- 1949). லண்டனில் அவர் இருந்தபோது புகழ்பெற்ற இந்தியவியல் அறிஞரும் வரலாற்றாய்வாளருமான ஏ.எல்.பாஷத்துடன் நட்புறவு ஏற்பட்டது. அவரது தொடர்பால், தாமோதரின் வரலாற்று ஈடுபாடு மேலும் பெருகியது.

1949-இல் சிகாகோ பல்கலைக்கழகத்தில் வடிவியல் பேராசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பு தாமோதருக்குக் கிடைத்தது. அதே ஆண்டில், நியூஜெர்ஸியிலுள்ள பிரின்ஸ்டன் கல்வி மையத்தின் உயராய்வுக் குழுவிலும் இரு மாதங்கள் பணிபுரிந்தார்.

பிறகு நாடு திரும்பிய தாமோதர், உலக அளவில் பனிப்போருக்குப் பிந்தைய ஆயுதப் போட்டியால் உலக அமைதி சீர்குலைவதைத் தடுக்க பல அமைதிப் பணிகளில் ஈடுபட்டார்; உலக அமைதி இயக்கத்தில் உறுப்பினராகச் சேர்ந்து, அணு ஆயுதத்துக்கு எதிரான பிரசாரங்களிலும் ஈடுபட்டார்.

இந்தியாவில் அணு உலைகளை நிறுவ எதிர்ப்புத் தெரிவித்த தாமோதர், சூரிய சக்தியை மாற்று எரிசக்தியாகப் பயன்படுத்தலாம் என்று வலியுறுத்தினார்.

1962-இல் டாடா ஆய்வு நிறுவனத்திலிருந்து விலகினார்; அதன் பிறகு தீவிரமான வரலாற்றாய்வுகளில் ஈடுபடத் துவங்கினார்.

வரலாறு என்பது மன்னர்கள், வீரர்களின் வாழ்க்கை நிகழ்வுகளின் தொடர்ச்சியல்ல, அக்கால மக்களின் வாழ்க்கை நிலையை சமூக, பொருளாதார அடிப்படையில் ஆராய்வதாகும் என்பது டி.டி.கோசாம்பியின் கோட்பாடு.

அந்த அடிப்படையில், "இந்திய வரலாறு-ஓர் அறிமுகம்' (1956) என்பது உள்ளிட்ட பல வரலாற்று நூல்களை கோசாம்பி எழுதினார். அவையே இந்திய வரலாற்று ஆய்வில் புதிய திசையைக் காட்டிய நூல்களாகும்.

மத அடையாளங்கள், சடங்குகள், ஆசாரங்கள் போன்றவை சமூக வளர்ச்சியின் சித்திரத்தைக் காட்டுபவை என்று கூறுவார் கோசாம்பி. தனது "தொன்மமும் உண்மையும்' (1962) என்ற நூலில் இந்து தெய்வங்களை இந்தியாவின் சமூக வளர்ச்சி பற்றி ஆராய்வதற்கான கருவியாக அவர் பயன்படுத்துவதைக் காண முடியும்.

பண்டைய இந்தியாவின் வரலாற்றை மார்க்சியக் கண்ணோட்டத்தில் மீளாக்கம் செய்த தாமோதர், "பண்டைய இந்தியாவின் பண்பாடும் நாகரிகமும்' என்ற நூலை 1965-இல் வெளியிட்டார். இன்று தாமோதர் தர்மானந்த கோசாம்பியின் அடியொற்றி இடதுசாரி சரித்திர ஆய்வாளர் குழு உருவாகியுள்ளது.

அவரது நலம் நாடிய நண்பர்களது முயற்சியால், தொழிலக, அறிவியல் ஆராய்ச்சிக் கூட்டமைப்பின் (CSIR) முதுநிலை ஆய்வாளராக தாமோதர் 1964-இல் நியமிக்கப்பட்டார். அந்தச் சமயத்தில் அவரது ஆய்வேடுகள் பல வெளியாகின.

இவ்வாறாக, பல துறைகளில் தனது ஆய்வைச் செலுத்திய டி.டி.கோசாம்பி, 1966 ஜூன் 29-இல் புனாவில் காலமானார். இறுதிக்காலத்தில் அவர் எழுதிய குழந்தைகளுக்கான கதைகள் பல, பிறகு நூல்களாக வெளியாகின.

அவருக்கு 2008-இல் நூற்றாண்டு நினைவு தபால்தலையை இந்திய அரசு வெளியிட்டது. டி.டி.கோசாம்பியின் வரலாற்று அறிவின் செழுமைக்கும் தெளிவுக்கும் அவரது கணித ஞானம் துணை புரிந்தது. தேடலின் தொடர் வடிவமாகவே அவரது வாழ்க்கை முழுவதும் அமைந்திருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.