/

"இஸ்ரோ'வை வளர்த்தெடுத்த இனிய தலைவர்

விண்வெளி ஆராய்ச்சியில் இன்று இந்தியா சிறந்து விளங்குகிறது. இதற்கு வித்திட்ட இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை (இஸ்ரோ) நேர்த்தியான அமைப்பாக வளர்த்தெடுத்தவர் பேராசிரியர் சதீஷ் சந்திர தவான்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:32 pm

வ.மு. முரளி

விண்வெளி ஆராய்ச்சியில் இன்று இந்தியா சிறந்து விளங்குகிறது. இதற்கு வித்திட்ட இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை (இஸ்ரோ) நேர்த்தியான அமைப்பாக வளர்த்தெடுத்தவர் பேராசிரியர் சதீஷ் சந்திர தவான்.

காஷ்மீரின் ஸ்ரீநகரில் 1920, செப். 25-இல் பிறந்தவர் சதீஷ் தவான்.

லாகூரிலுள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. கணிதம், பி.எஸ்சி. இயற்பியல் பட்டங்களையும், எம்.ஏ. ஆங்கிலம், பி.இ. இயந்திரவியல் பட்டங்களையும் பெற்ற தவான், மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றார். அங்கு மினசோட்டா பல்கலைக்கழகத்தில் விண்வெளிப் பொறியியலில் எம்.எஸ். பட்டமும் (1947), கலிபோர்னியா தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளிப் பொறியியலில் பி.இ. பட்டமும் (1949) பெற்றார்.

பிறகு, அங்கேயே, விண்வெளி விஞ்ஞானி ஹான்ஸ் டபிள்யூ. லீப்மென் வழிகாட்டலில் முனைவர் பட்ட ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். விண்வெளிப் பொறியியல், கணிதம் ஆகிய துறைகளில் இருவேறு முனைவர் பட்டங்களை ஒரே நேரத்தில் (1951) பெற்றார் தவான். இவ்வாறு பல துறைகளில் அவர் பெற்ற தேர்ச்சி அவரது வாழ்க்கை முழுவதும் உறுதுணையாக இருந்தது.

பாய்ம இயக்கவியலில் (Fluid Dynamics) மிகுந்த ஆர்வம் கொண்ட தவான், பாய்ம இடைப்படலங்கள் (Boundary layers), பாய்மக் கொந்தளிப்பு (Turbulence) குறித்த விரிவான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்.

1951-இல் பெங்களூரிலுள்ள இந்திய அறிவியல் கல்வி மையத்தில் (IISc- Indian Institue of Science) முதுநிலை அறிவியல் அலுவலராகப் பணியில் சேர்ந்தார் தவான். அங்கு பேராசிரியராகவும் விண்வெளித் துறையின் தலைவராகவும் 1955-இல் உயர்ந்த தவான், விண்வெளி அறிவியலை மாணவர்களுக்குப் போதிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.

1962-இல் அந்நிறுவனத்தின் இயக்குநராக உயர்ந்தார் தவான். அப்போது அவருக்கு வயது 38 மட்டுமே. அன்றுமுதல் சுமார் 18 ஆண்டுகள்- 1981 வரை, அதன் இயக்குநராக தவான் பணியாற்றினார்.

இதனிடையே விக்ரம் சாராபாயால் உருவாக்கப்பட்ட இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO- Indian Space Research Organisation - இஸ்ரோ) தலைவராக பொறுப்பேற்கும் வாய்ப்பு தவானிடம் வந்துசேர்ந்தது. அதையேற்று, 1972-இல் இஸ்ரோவின் தலைவராகப் பொறுப்பேற்ற தவான், 1984 வரை அதை திறம்பட நிர்வகித்ததுடன், நாட்டின் மிகச் சிறந்த நிறுவனமாக அதை வலுப்படுத்தினார்.

பெங்களூரிலுள்ள தேசிய விண்வெளி ஆய்வகத்தின் தலைவராகவும் (1984- 1993), இந்திய விண்வெளி ஆணையத்தின் தலைவராகவும் (1972- 2002) தவான் பொறுப்பு வகித்திருக்கிறார்.

இஸ்ரோவின் தலைவராக தவான் பொறுப்பேற்றபோது, பிரதமரின் நேரடிப் பார்வையின் இயங்கும் விண்வெளித் துறையின் கீழ் அதைக் கொண்டு வந்தார். அதற்கு அப்போது பலத்த எதிர்ப்பு எழுந்தது. ஆனால், அரசு நிறுவனமாக மாறினாலும், நிதி ஆளுகை, திட்டமிடலில் சுதந்திரத்தைப் பெற்ற தவான், அதை மிகுந்த உயரத்துக்குக் கொண்டு சென்றார். இஸ்ரோவின் தற்போதைய அசுர வளர்ச்சி தவானின் தொலைநோக்குப் பார்வைக்குச் சான்றாக மிளிர்கிறது.

இந்திய விஞ்ஞானிகளின் திறமை மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்த தவான், உள்நாட்டிலேயே ராக்கெட், செயற்கைக்கோள்களை வடிவமைக்கும் திட்டங்களை பல கட்டங்களாக வடிவமைத்து அவற்றை சாதித்தும் காட்டினார்.

இந்திய தேசிய செயற்கைக்கோள் திட்டம் (INSAT- Indian National Satelite System), இந்திய தொலையுணர்வு செயற்கைக்கோள் திட்டம் (IRS- Indian Remote Sensing) ஆகியவற்றை வடிவமைத்த தவான், ராக்கெட்கள், செயற்கைக்கோள்களை உருவாக்குவதில் உள்நாட்டு நிறுவனங்களையே சார்ந்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதன் விளைவாக, இன்று ராக்கெட் தயாரிப்புக்குத் தேவையான அனைத்து பாகங்கள், கருவிகளையும் உற்பத்தி செய்யும் நூற்றுக்கணக்கான துணை நிறுவனங்கள் தனியார் துறையில் வளர்ச்சி பெற்றுள்ளன.

இஸ்ரோவின் தலைவராக தவான் பொறுப்பேற்றபோது, திருவனந்தபுரத்தில் அப்போதுதான் உருவாக்கப்பட்டிருந்த விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் (Vikram Sarabhai Space Centre -VSSC) சரியான தலைமையின்றி ஆராய்ச்சிப் பணிகள் முடங்கியிருந்தன. அப்போது அணுசக்தித் துறையில் பணியாற்றிவந்த விஞ்ஞானி பிரம்மபிரகாஷை அழைத்துவந்து, அதன் தலைவராக தவான் நியமித்தார்.

சதீஷ் தவான், பிரம்மபிரகாஷ் ஆகிய இரு விஞ்ஞானிகளின் தலைமையில், திருவனந்தபுரம் விண்வெளி ஆராய்ச்சி மையம் எழுச்சி

பெற்றது. அங்குதான் இளம் விஞ்ஞானி அப்துல் கலாம் தலைமையில் செயற்கைக்கோள் ஏவுகலன்- ராக்கெட் (SLV-3) உருவாக்கும் திட்டமும், மற்றொரு இளம் விஞ்ஞானி யு.ஆர்.ராவ் (பின்னாளில் இஸ்ரோ தலைவர்) தலைமையில் "ஆரியபட்டா' என்ற செயற்கைக்கோள் உருவாக்கும் திட்டமும் செயற்படுத்தப்பட்டன.

நாட்டின் முதல் செயற்கைக்கோளான "ஆரியபட்டா' 1975-இல் ருஷ்ய உதவியுடன் விண்ணில் செலுத்தப்பட்டது. அதேபோல, இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட முதல் ராக்கெட்டான எஸ்எல்வி-3, "ரோகிணி' செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாகச் செலுத்தியது.

இஸ்ரோவின் வளர்ச்சி எந்தத் திசையில் இருக்க வேண்டும் என்பதில் தெளிவான பார்வை தவானுக்கு இருந்தது. ராக்கெட் தொழில்நுட்பத்தில் அடுத்தகட்டமான துருவப்பாதையில் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தும் பிஎஸ்எல்வி, புவிநிலை இடைப்பாதையில் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தும் ஜிஎஸ்எல்வி ஆகியவற்றை முன்கூட்டியே திட்டமிட்டவர் அவர்.

விண்வெளிப் பொறியாளர், ராக்கெட் விஞ்ஞானி ஆகிய நிலைகளை விட, தான் ஓர் ஆசிரியர் என்பதையே அவர் பெருமையாகக் கருதி வந்தார். சிறந்த நிறுவனத் தலைவராகவும், தேசிய சிந்தனையாளராகவும் விளங்கிய அவருக்கு பத்மபூஷண் விருதும் (1971) பத்மவிபூஷண் விருதும் (1971) வழங்கி இந்திய அரசு கெüரவித்தது.

2002, ஜனவரி 3-இல் சதீஷ் தவான் மறைந்தார். நாட்டின் வளர்ச்சியில் தவானின் சிறந்த பங்களிப்பைப் போற்றும் வகையில், ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள ராக்கெட் ஏவுதளத்துக்கு "சதீஷ் தவான் விண்வெளி மையம்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.