மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஏணிப் படிகளில் மாந்தர்கள்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 'திருவெண்காடு' என்றவுடனேயே ஸ்ரீசுவேதாரண்யேஸ்வரர் பெரிய கோயில்தான் நினைவுக்கு வரும்.

News image
Updated On :15 மார்ச் 2026, 9:52 am

சுஜாதா மாலி

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 'திருவெண்காடு' என்றவுடனேயே ஸ்ரீசுவேதாரண்யேஸ்வரர் பெரிய கோயில்தான் நினைவுக்கு வரும். இதற்கு அடுத்தபடியாக நினைவுக்கு வருபவர் சிவன் சார். காஞ்சி மகா பெரியவரின் பூர்வாசிரம இளைய சகோதரரான இவர், தனது வாழ்நாளின் பெரும் பகுதியை திருவெண்காட்டில் கழித்தவர். இவருடைய 'ஏணிப் படிகளில் மாந்தர்கள்' என்ற நூல் பிரபலமானது.

இந்த அருளாளரின் தொண்டர்கள் ஒன்றிணைந்து 'ஸ்ரீ சிவசாகரம்' எனும் அறக்கட்டளையை 'ஸ்ரீ சிவன் சார் சமஸ்தானம்' என்கிற அமைப்பின்பெயரில் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து அவரது ஆத்மார்த்த சிஷ்யர் திருவெண்காடு ஸ்ரீ சுப்ரமணியன் என்கிற சுப்புணி அண்ணாவிடம் பேசியபோது:

'ஸ்ரீ சிவன் சார் தமது 'ஏணிப்படிகளில் மாந்தர்கள்' நூலில் குறிப்பிட்டுள்ள பல விஷயங்களை லாப நோக்கமின்றிச் செயல்படுத்த வேண்டும் என்பது எங்கள் எண்ணம். அவர் சொல்லியிருக்கிற மூவித தர்மயக்ஞங்களின் அடிப்படையில் சமூக நலன், ஆன்மிகச் சேவையின் அடிப்படையில் ஏறக்குறைய கடந்த பத்து ஆண்டுகளாக நலப்பணிகளைச் செய்து வருகிறோம்.

கோயில் பணிகள்: 'தேவயக்ஞம்' எனும் கோயில் பணியில், நலிவடைந்த நூற்றுக்கணக்கான கோயில்களுக்கு மாதம்தோறும் விளக்கு எரியச் செய்வதற்கான எண்ணெய் டின்களை வழங்குகின்றோம். சிவன் கோயில்களில் சிதிலமடைந்த கல்திருமேனிகளுக்குப் பதிலாக புதியவற்றை அமைத்துக் கொடுக்கிறோம். கிராமக் கோயில்களுக்கும் இத்தகு விதத்தில் புது கல்திருமேனிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

வயல்வெளிகளில் கேட்பாரற்றுக் கிடக்கும் வானம் பார்த்த லிங்கங்களுக்கு மேற்கூரையை அமைத்துத் தருகிறோம். காவிரி டெல்டா மாவட்டங்களில் இதுவரை 680 லிங்கங்களுக்கு மேற்கூரையை அமைத்திருக்கிறோம். இவற்றுக்கான எண்ணெய் கைங்கர்யமும் தொடர்ந்து செயல்படுத்தப்படுகிறது.

இயற்கையைக் காத்தல்: இரண்டாவதாக, 'பூத யக்ஞம்' எனும் இயற்கையைக் காப்பதால் அதைப் போற்றுவதாகும். கோயில்கள், புனிதமான இடங்களில் நந்தவனங்கள் அமைத்துப் பராமரித்து வருகிறோம். எழுநூறுக்கும் மேற்பட்ட கோயில்களில் பூஜைகளுக்குத் தேவையான பூக்கள், மூலிகைகள், மரக்கன்றுகளை நட்டுப் பராமரிக்கின்றோம். இதனால் கிருமிகள் பரவாமல் சுற்றுச்சூழல் வளத்தைக் காத்திடும் வகையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடிகிறது.

திருவண்ணாமலை அருகேயுள்ள பர்வத மலையில் இதுவரை 55 கோடி விதைகளை நட்டு, பயனுள்ள விருட்சங்களை உருவாக்கி இருக்கிறோம். இதற்காக விதைக்குழிகள், விதைகளை ஊன்றுதல், பராமரித்தல் உள்ளிட்ட பணிகளைச் செய்வதற்காகவே ஐம்பது பேர் கொண்ட குழுவினர் உள்ளனர். பர்வத மலையில் பசுமையான மருத்துவத் தன்மை உடைய மரங்களின் காற்று உலவிடும்படியான சூழலை ஏற்படுத்தி இருக்கின்றோம். 'கோசம்ப்ரக்ஷணம்' என்கிற பசு பாதுகாப்பு நலத் திட்டங்களையும் விரிவாக்கும் எண்ணத்தில் உள்ளோம்.

சமூகப் பணிகள்: மூன்றாவதாக, 'பித்ரு யக்ஞம்' எனும் சமூகப் பணிகள். ஆதரவில்லாத முதியோருக்கு மருத்துவம், அவசியத் தேவைகளை அளித்து உதவிடுதல், வறுமையால் வாடுபவர்களுக்கு அவரவர் முறைப்படி இறுதிக் காரியங்களைச் செய்வதற்கான உதவிகள், வாரணாசி அல்லது கயை யாத்திரைகளுக்கான உதவிகள் உள்ளிட்டவற்றை மேற்கொள்கிறோம். தன்னார்வலர்களும் உதவுகின்றனர்.

இதரப் பணிகள்: கோயில்களில் காலையில் கோலமிடவேண்டும் என்கிற வகையில் ஆங்காங்கே தன்னார்வல பெண்களை ஈடுபடுத்தி இருக்கிறோம். இதற்கான அரிசி மாவு உள்ளிட்டவற்றை நாங்களே அளித்து விடுவோம். மார்கழி மாதத்தில் பெண்களுக்கு புடவை அளிக்கிறோம். பின்தங்கிய பகுதிகளில் பயிலும் பள்ளிச்சிறுவர்களுக்கு அறநெறி நூல்கள், கல்வி உபகரணங்களை அளிக்கிறோம்.

சிவன் சார் தனது இறுதிக்காலத்தில் விருப்பத்துடன் தங்கியிருந்த இடத்தில், அவருக்கான கற்றளியை அமைத்திடும் பணி நடைபெறுகிறது. ஆச்சார்யார்கள் அதிஷ்டானத்துக்கு அருகிலேயே இந்தக் கோயில் அமைவது சிறப்பாகும். இங்கு வியாழக்கிழமைதோறும் அன்னதானம் செய்ய உள்ளோம். அவர் எடுத்துரைத்த தத்துவங்களை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதே எங்கள் தலையாய நோக்கம். அவரது 'ஏணிப்படிகளில் மாந்தர்கள்' எனும் நூலை அனைவரும் அறியும்படி பரப்புவதும் எங்களது திட்டம்' என்கிறார் சுப்ரமணியன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.