/

பாலிவுட் ஸ்பெஷல்!

நாளுக்கு நாள் படபடவென வளர்ந்து வரும் ஏ 1   தொழில்நுட்பம் மனிதர்களின் குரல்களை அப்படியே உருவாக்குவது, முகங்களை விடியோவில் போலியாக மாற்றுவது எனப் பல க்ரைம் வேலைகளை மிகச் சாதாரணமாகச் செய்து வருகிறது.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 1:27 pm

டெல்டா அசோக்


அச்சுறுத்தும் ஏ 1 தொழில்நுட்பம் !

நாளுக்கு நாள் படபடவென வளர்ந்து வரும் ஏ 1   தொழில்நுட்பம் மனிதர்களின் குரல்களை அப்படியே உருவாக்குவது, முகங்களை விடியோவில் போலியாக மாற்றுவது எனப் பல க்ரைம் வேலைகளை மிகச் சாதாரணமாகச் செய்து வருகிறது.

ஏ 1 பல்வேறு வகையில் வேலைகளை எளிமைப்படுத்தி உதவியாக இருந்தாலும், அதன் வளர்ச்சி உண்மை எது, போலி எது, என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அச்சுறுத்தத் தொடங்கியிருக்கிறது. இதுபோன்று தொழில்நுட்பத்தில் இருக்கும் வாய்ப்புகளைத் தவறாகப் பயன்படுத்தி பெண்களைத் தவறாகச் சித்திரிப்பது,  பிரபலங்களின் முகங்களை ஆபாசமாகச் சித்திரித்து விடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வது, குரல்களை மாற்றுவது எனப் பல குற்றச் செயல்களில் சிலர் ஈடுபடுகின்றனர்.

சமீபத்தில் ராஷ்மிகா மந்தனா லிஃப்ட்டிலிருந்து வெளியே வருவது போன்ற போலி விடியோ வைரலாகி,  சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க,  நடிகை கத்ரீனா கைஃபின் போலி விடியோவும் வைரலானது.  தற்போது நடிகை கஜோல் தயாராகி வெளியே கிளம்புவது போன்ற போலி விடியோ ஒன்று வெளியாகி மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

பொதுவாகவே ரீல்ஸ் டிரெண்டில் இது பிரபலமானது. அதாவது ஒருவர் எப்படி தன் அலுவலகத்துக்கோ, ஷாப்பிங்குக்கோ தயாராகி வெளியே கிளம்புகிறார், என்னென்ன உடைகள் அணிகிறார், எந்தெந்த மேக்கப் சாதனங்களை உபயோகிக்கிறார் என்பதை எல்லாம் விரிவாகச் சொல்லுவார்.  இதன் மூலம் அந்தந்த உடை நிறுவனங்கள், மேக்கப் சாதனத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு விளம்பரம் கிடைக்கும். இதற்காக அவருக்கு  பணமும் கொடுக்கப்படும். அத்தகைய விடியோ ஒன்றில்தான் கஜோலின் முகம் மாற்றப்பட்டுள்ளது. இப்படி நாளுக்கு நாள் பிரபலங்கள் மட்டுமல்லாமல் பல சாமானியப் பெண்களின் போலி விடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகிக் கொண்டேதான் இருக்கின்றன.  

வெடித்த சர்ச்சை!

ராஜா கிருஷ்ண மேனன் இயக்கத்தில் இஷான் கட்டார், மிருணால் தாக்கூர், பிரியன்ஷு பைன்யுலி உள்ளிட்டோர் நடிப்பில் ஹிந்தியில்  ஓ.டி.டி. தளத்தில் வெளியாகியுள்ளது 'பீப்பா' திரைப்படம்.

1971-இல் நடந்த இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரில் கிழக்குப் பகுதியில் 45-ஆவது டேங்க் ஸ்குவாட்ரனில் போர் செய்த ராணுவ வீரரான பிரிகேடியர் பல்ராம் சிங் மேத்தாவைப் பற்றிய கதை இது. தேசத்துக்காகப் போராடும் பிரிகேடியரின் தேசப்பற்று, குடும்பம், காதல் எனப் போர்க்களத்தில் நடக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

அவ்வகையில், கவிதை, பாடல்கள், இசை மூலம் விடுதலை உணர்வை வங்காள மக்களிடம் கிளர்ந்து எழச் செய்த கவிஞரும், எழுத்தாளருமான கசி நஸ்ருல் இஸ்லாமின் பாடல் வரிகளை  ரஹ்மான்  புதிய மெட்டுடன் இசையமைத்துள்ளார். இதற்குத்தான் தற்போது எதிர்வினை கிளம்பியுள்ளது. 
 பாடலின் மெட்டுகளை அனல் பறக்கும் விடுதலை உணர்வுடன் இயற்றியிருப்பார் புரட்சிக் கவிஞர் கசி நஸ்ருல் இஸ்லாம். அவரது பாடல்களும், கவிதைகளும் வங்காள மக்களிடையே இன்றுவரை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. ஆனால், ரஹ்மான் அதை மெல்லிய மெட்டுகளால் இசையமைத்து கசி நஸ்ருலின் பாடலில் இருக்கும் விடுதலையுணர்வை மென்மையாக்கிவிட்டார் என்று வங்காளத்தைச் சேர்ந்த பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இதுகுறித்துப் பேசிய கசி நஸ்ருல் இஸ்லாமின் குடும்பத்தினரும் இதே விமர்சனங்களை முன்வைத்து,  இப்பாடலை நீக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். 

இந்தச் சர்ச்சைகளுக்கு விளக்கமளித்துள்ள படத் தயாரிப்பு நிறுவனமான ராய் கபூர் பிலிம்ஸ், 'கவிஞர் கசி நஸ்ருல் இஸ்லாமின் கவிதை, பாடல், இசை மீது பெரிய மரியாதை வைத்திருக்கிறோம். அதனால் அவரின் பாடலைப் படத்தில் இடம்பெறச் செய்தோம்.  வங்கதேசத்தின் விடுதலைக்காகவும், நீதிக்காகவும் போராடியவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவே இப்பாடலை அமைத்தோம். இப்பாடலைப் பயன்படுத்துவதற்காகக் கசி நஸ்ருல் இஸ்லாமின் மனைவியான மறைந்த கல்யாணி கசி,  அவரது பேரன் அனிர்பன் கசி இருவரிடமும் அனுமதி பெற்று இப்பாடல் தொடர்பான உரிமத்தை ஒப்பந்தம் செய்துகொண்டோம். மெட்டுகளை மாற்றுவதற்கான அனுமதி குறித்தும் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிட்டிருந்தோம்.  கசி நஸ்ருலின் பாடல் மீது உங்களுக்கு இருக்கும் நெருக்கத்தையும், உணர்வுகளையும் எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது. கலையை ரசிப்பது என்பது அவரவர் அகநிலை சார்ந்த ஒன்று. அந்தப் பாடலுக்கு நாங்கள் கொடுத்த இந்தப் புதிய வடிவம் உங்களைக் காயப்படுத்தியிருந்தால் நாங்கள் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம்' என்று கூறியுள்ளனர்.

இருப்பினும், கவிஞர் கசி நஸ்ருலின் பாடலில் இருக்கும் அனல் பறக்கும் மெட்டுகளையும், விடுதலை உணர்வையும் ரஹ்மான் மென்மையாக்கி அதன் தன்மையை மாற்றிவிட்டார் என்று ஒரு தரப்பினரும், மற்றொரு தரப்பினர் புகழ்பெற்ற பாரம்பரியமிக்கப் பாடலை புதிய மெட்டுகளுடன் அமைத்தது கசி நஸ்ருலின் அவர்களுக்கு மரியாதையைத்தான் சேர்க்கும். அதன் விடுதலையுணர்வு என்றும் மாறாது என்று மற்றொரு தரப்பினரும் விவாதித்து வருகின்றனர். 

தேர்தலில் போட்டி !

பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்திலிருந்து போட்டியிடத் திட்டமிட்டுக் காய் நகர்த்தி வருகிறார். தனது 'தேஜஸ்' படத்தை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு பிரத்யேகமான முறையில் திரையிட்டும் காட்டியிருக்கிறார்.இதைத் தொடர்ந்து, கங்கனா துவாரகாவில் உள்ள கிருஷ்ணர் கோயிலில் வழிபட்டார். 
சாமி கும்பிட்டுவிட்டு வெளியில் வந்த கங்கனா ரணாவத்திடம் 'மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவீர்களா?' என்று பத்திரிகையாளர்கள் கேட்டனர். அதற்குப் பதிலளித்த அவர், 'கிருஷ்ணரின் ஆசீர்வாதம் இருந்தால் போட்டியிடுவேன். இது ஒரு புனித நகரம்.   நான் எப்போதும் கிருஷ்ணரைக் காண துவாரகா வர முயற்சி செய்வேன். வேலையிலிருந்து எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் நான் இங்கே வந்து விடுகிறேன்.' என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.