தமிழுக்கு வரும் ரீமேக் சினிமாக்கள் !
ஒரு படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றால் அந்தப் படத்துக்கான ரீமேக் உரிமையைப் பெற, பிற மொழித் தயாரிப்பாளர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவும்.


ஒரு படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றால் அந்தப் படத்துக்கான ரீமேக் உரிமையைப் பெற, பிற மொழித் தயாரிப்பாளர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவும். சில படங்கள் வெளியாகும் முன்னரே, ரீமேக் உரிமை விற்கப்பட்டிருக்கும்.
தெலுங்கு, ஹிந்தியில் வெளியாகி ப்ளாக் பஸ்டர் ஹிட்டான படங்கள் தமிழில் ரீமேக்காகிக் கொண்டிருக்கின்றன. அந்தப் படங்கள் தவிர, இனி வரும் காலங்
களில் ரீமேக்காக இருக்கும் மற்ற மொழிப் படங்களில் பட்டியல் இது!
ஜெர்ஸி
கௌதம் தின்னனூரி இயக்கத்தில் நானி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான டோலிவுட் ப்ளாக்பஸ்டர்களில் ஒன்று. ஒரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட இந்தக் கதையில் அப்பா - மகன் உறவை நேர்த்தியாகச் சொல்லியிருப்பார்கள். இந்தப் படம் தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. ஹிந்தியில் அதே இயக்குநர் இயக்க, ஷாகித் கபூர் - ராஷ்மிகா மந்தனா நடிக்கின்றனர். தமிழில் "ஒரு நாள் கூத்து', "மான்ஸ்டர்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்க விஷ்ணு விஷால் - அமலா பால் நடிக்க இருக்கின்றனர்.
அந்தாதுன்
ராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே ஆகியோர் நடித்து சூப்பர் ஹிட்டான படம் "அந்தாதுன்'. பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக வரும் ஆயுஷ்மானுக்கு தேசிய விருது கிடைக்க இந்தப் படம்தான் காரணம். மர்டர் மிஸ்ட்ரி ஜானர் என நமக்கு தோன்றினாலும் காதல், காமெடி என அனைத்து உணர்வுகளையும் கடத்தி கைத்தட்டல் அள்ளியது "அந்தாதுன்'. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை தியாகராஜன் வாங்கி இயக்கியுள்ளார். பிரஷாந்த், சிம்ரன் என நட்சத்திர பட்டாள நடிப்பில் படம் கிட்டத்தட்ட தயார் நிலையில் உள்ளது. தீபாவளிக்கு முன்னரே திரை காணலாம் படம்.
பதாய் ஹோ
"அந்தாதுன்' படத்தை முடித்துவிட்டு அடுத்த படத்தில் செம வித்தியாச தோற்றம் கொடுத்து அசத்தினார் ஆயுஷ்மான் குரானா. அமித் ஷர்மா இயக்கத்தில் முழுக்க முழுக்க காமெடிப் படமாக வெளியான "பதாய் ஹோ'வைக் கொண்டாடியது பாலிவுட். நாயகன் மட்டுமல்லாமல் அதில் நடித்த எல்லோரும் கவனிக்கப்பட்டார்கள். பல காமெடி கதைகள் நமக்கு பழக்கப்பட்டதாக இருந்தாலும் இந்தப் படம் பேசப்பட்டதற்குக் காரணம், இதில் இயக்குநர் ஹியூமரை அணுகிய முறை. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை போனி கபூர் வைத்துள்ளார். இந்தப் படத்தின் ரீமேக்கில் தனுஷ் நடிக்கலாம்.
ரங்கஸ்தலம்
சுகுமார் இயக்கத்தில் ராம்சரண், சமந்தா, ஆதி ஆகியோர் நடித்து ரூ.100 கோடி வசூல் சாதனை படைத்த படம் "ரங்கஸ்தலம்'. அதிகாரத்தில் இருந்துகொண்டு அநியாயம் செய்யும் தலைவனை தட்டிக் கேட்கும் ஆக்ஷன் படம் இது. இந்தப் படத்தின் பெயரைச் சொன்னதும் தேவி ஸ்ரீ பிரசாத்தின் "ரங்கம்மா மங்கம்மா' பாடல்தான் நினைவுக்கு வரும். அந்தளவுக்கு அது சூப்பர் டூப்பர் ஹிட். கடந்த ஆண்டு சிறந்த சவுண்ட் டிசைனிங் பிரிவில் தேசிய விருது பெற்றது. செவித்திறன் குறைபாடுள்ள கிராமத்து இளைஞனாக ராம்சரண் நடித்தது அனைவருக்கும் பிடித்திருந்தது. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கை லிங்குசாமி இயக்க, ராகவா லாரன்ஸ் நடிக்கவிருக்கிறார். இதற்கான ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தில் இருக்கிறது.
எவரு
"தி இன்விஸிபிள் கெஸ்ட்' என்ற ஸ்பானிஷ் படத்தின் தழுவலாக எடுக்கப்பட்ட படம் "பத்லா'. மிஸ்ட்ரி த்ரில்லர் பாணியில் வெளியான இப்படத்தில் அமிதாப் பச்சனும் டாப்ஸியும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இருக்கையின் நுனியில் அமர்ந்து பார்க்கவைக்கும் அளவுக்கு த்ரில்லிங் நிறைந்த இப்படத்தை ஷாரூக் கான் தயாரித்திருந்தார். அதே ஸ்பானிஷ் படத்தின் தழுவலாக சின்னச் சின்ன மாற்றங்களுடன் வெளியானது டோலிவுட்டின் "எவரு'. அத்வி ஷேஷ், ரெஜினா கஸாண்ட்ரா, நவீன் சந்திரா ஆகியோர் நடித்திருந்தனர். குறைந்த பட்ஜெட்டில் தயாரான இந்தப் படம் வசூலிலும் விமர்சனத்திலும் பெரிய இடத்தைப் பிடித்தது. இந்தக் கதையின் தமிழ் வெர்ஷனில் நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம்.
ஓ பேபி
சமந்தா நடிப்பில் தெலுங்கில் வெளியான படம், "ஓ பேபி'. தென் கொரியப் படமான "மிஸ் கிரானி' படத்தின் ரீமேக்தான் இப்படம். இந்தப் படத்தில் பாட்டியாக லட்சுமியும் பேத்தியாக சமந்தாவும் நடித்திருக்கிறார்கள். 10 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம், தெலுங்கில் ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. முக்கியமாக படத்தின் ரிலீஸ் சமயத்தில் சமந்தாவின் ரசிகர்கள் 60 அடி உயரத்துக்கு கட்அவுட் வைத்திருந்தனர். குறிப்பாக, தெலங்கானா முன்னாள் கவர்னர் நரசிம்மன் இந்தப் படத்தைப் பார்க்க விரும்பினார். இதையடுத்து, அவரின் குடும்பத்துக்கும் ஸ்பெஷல் ஸ்க்ரீனிங்கில் இப்படத்தை திரையிட்டுக் காட்டினார். இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்ய பேச்சுக்கள் நடக்கின்றன. ஆனால், தற்போது பாலிவுட் சினிமாக்களில் மட்டுமே சமந்தா கவனம் செலுத்தி வருவதால், சமந்தா இடத்தில் யார்....? என்ற பேச்சுக்கள் நடந்து வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...