உடல் ஆரோக்கியத்துக்கு தேன் எந்த வகைகளில் எல்லாம் உதவுகிறது என ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதா? தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.
ரவீந்திரன்,
துடியலூர், கோவை.
பொதுவாக தேன் உடலுக்கு வறட்சி தரும். உடலில் அதி நுட்பமான பகுதிகளிலும் எளிதில் ஊடுருவிப் பாய்வதால் சிறந்த மருந்து பொருள். சீக்கிரத்தில் செரிக்கும். பசியைத் தூண்டும். உணவைச் செரிக்கச் செய்யும். உடலிற்கு அழகு, பொலிவு, வலிவு, புஷ்டி, சூடு தரும் ஜீவ சத்துள்ள உணவுப் பொருள்.
வாயிலிட்டு குலுக்கித் துப்ப, வாய்ப்புண்ணை ஆற்றிவிடும். உணவுக்குப் பிறகு, தண்ணீருடன் தேன் கலந்து சாப்பிட, உடல்சூடு அதிகமாகி கொழுப்பு கரைந்து வெளியாகும் என்பதால், உடல் பருமன் உள்ளவர்களுக்கு ஏற்ற பானமாகும். ரொட்டி, சத்து மாவு முதலிய வறண்ட உணவுகளுடன் தேன் சேர்த்துச் சாப்பிடுவது உடலுக்குப் புஷ்டி தரும். உடல் கனத்தைக் குறைக்க விடியற்காலையில் தேன் கலந்த தண்ணீர் பருகுவது நல்லது.
உடல் சூட்டைக் குறைக்க, காய்ச்சி சூடு ஆறிய பாலுடன் தேன் கலந்து சாப்பிடுவது உபகாரம். உடல் பருக்க தேனை ஆடைத் தயிருடன் சாப்பிடுவது நல்லது.
சீரகம், சோம்பு, மிளகு, திப்பிலி, நெல்லி முதலியவற்றைத் தேனில் ஊற வைத்துப் பாதுகாத்து, அவ்வப்போது ஒவ்வொன்றாக மென்று சாப்பிடலாம். மிளகு, உடல்வாயு வலியைக் கண்டிக்கும். திப்பிலி சளியை அகற்றும். சோம்பு வயிற்று வாயுவை நீக்கும். சீரகம் செரிக்கச் செய்யும். நெல்லிக்காய் வலுவூட்டும்.
காங்கை எனும் உடற்சூடு அதிகமுள்ள குழந்தைகள் உடல் மெலிந்து காணும். உடல் புஷ்டியடையாது. எப்போதும் சிடுசிடுவென்றிருக்கும். நல்ல பசு நெய் அல்லது எறுமை நெய் 50 மி.லி. தேன் 25 மி.லி., இரண்டையும் கலந்து வைத்துக் கொண்டு கால்- அரை ஸ்பூன் அளவு தினம் மூன்று, நான்கு வேளை இரு உணவு வேளைகளுக்கும் இடையே கொடுத்து வர உடல் புஷ்டி அடையும். உடல் வலுவாகும். காங்கை, சிடுசிடுப்பு நீங்கும்.
1-2 மாத குழந்தைகளுக்குக் கூட அவ்வப்போது 3 -4 சொட்டு நெய்யும், 1- 2 சொட்டு தேனும் மத்தித்துக் கொடுக்க சிசு ஆரோக்கியமாக வளரும். நெய்யின் அளவில் பாதி தேன் இருந்தால் போதுமானது.
சம அளவில் நெய் - தேன் சேர்ப்பது தவறு. தேனும் சில நிலைகளில் விஷமாக வேலை செய்யும். சூடாக உடல் இருக்கும்போது சாப்பிடக் கூடாது. காய்ச்சல் மிகுந்த நிலை, கடும் வெயிலில் காய்ந்திருக்கும்போது, வெயில் நேரத்தில் சாப்பிடுவது நல்லதல்ல. மணத்தக்காளிக் கீரை, தக்காளி இவற்றுடன் தேன் சாப்பிடக் கூடாது.
ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள், புளிக்காத கடைந்த மோர், பழரசம், நெல்லிக்காய்ச் சாறு இவற்றில் ஒன்றுடன் தினம்தோறும் தேன் சேர்த்துச் சாப்பிட்டு வருவது மிக நல்லது.
இஞ்சியைச் சிறு தண்டுகளாக்கித் தேனில் ஊறப் போட்டு வெயிலிலிட்டு வைத்திருக்கலாம். நல்ல பசியைத் தூண்டி, கடினமான உணவையும் எளிதில் செரிக்கச் செய்யும். வயிற்று உப்புசம், வயிற்றில் கனம், பசி மந்தம், அசதி, தலைசுற்றுதல், மனத் தெளிவின்மை நீங்கும்.
திரிகடுகம் எனும் சுக்கு, மிளகு, திப்பிலியின் சேர்க்கை மருந்து, தூளாக விற்கப்படுகிறது. இதனுடன் தேன் கலந்து காலை உணவுக்குப் பிறகு சாப்பிட, தொண்டை, மார்புச் சளி முறிந்து வெளியாகும். திரிபலை எனும் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காயின் சேர்க்கையிலான சூரணத்துடன் தேன், நெய் கலந்து இரவில் படுக்கும் முன் சாப்பிட்டு வர, கண் நோய்களுக்கு அருமருந்தாகும்.
தேன் சுத்தமானதாக இருந்தால், கரண்டியிலிட்டுக் காய்ச்சினால் இளகி நீர்க்கும். பாகானால் கெட்டியாகும். ஆற வைத்தால் தேன் பழைய நிலையை அடையும்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!

வெளிநாட்டு வாக்காளர்களை ஏன் வந்தாய் என்றா கேட்க முடியும்? வடிவேலு பேச்சு
15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி

தொடர் தோல்வி எதிரொலி: செல்ஸி அணியின் பயிற்சியாளர் நீக்கம்!
வீடியோக்கள்

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை


