ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: ஆரோக்கியம் மேம்பட!
ரத்த சோகை உபாதையால் பாதிக்கப்பட்ட தாய் வயிற்றில் 2003 - இல் நான் பெங்களூருவில் பிறந்தேன். பிறக்கும்போது இருதயத்தில் சிறு ஓட்டை இருந்தது. வசதிகள் இருந்தும் சரியான மருத்துவம் செய்யவில்லை.


ரத்த சோகை உபாதையால் பாதிக்கப்பட்ட தாய் வயிற்றில் 2003 - இல் நான் பெங்களூருவில் பிறந்தேன். பிறக்கும்போது இருதயத்தில் சிறு ஓட்டை இருந்தது. வசதிகள் இருந்தும் சரியான மருத்துவம் செய்யவில்லை. பின் திருவாரூர் வந்து நோய்க்கு மருத்துவம் செய்து கொண்டு படித்து வருகிறேன். குளிர்காற்று, குளிர்பானங்கள், புளிப்பு, காரம், எண்ணெய்ப் பண்டங்கள் ஒத்துக்கொள்ளாமல் அடிக்கடி காய்ச்சல், தோல்வியாதி, சளி, மயக்கம், மூச்சுத்திணறல், ஞாபகசக்தி குறைவு போன்ற உபாதைகளால் அவதியுறுகிறேன். இவை அனைத்தும் குணமாகி உடல் வலிமை பெற விரும்புகிறேன். இதற்கு ஆயுர்வேத மருந்துகள் உள்ளனவா?
பி.அஸ்வின் கணேஷ், திருவாரூர்.
ரத்த சோகை உள்ள தாய் வயிற்றில் பிறந்து, இருதயத்தில் ஓட்டையுடன் பெங்களூருவில் வளர்ந்த தங்களுக்கு, இவை ஒன்றோடு ஒன்று தொடர்பிருப்பதால், நீங்கள் குறிப்பிடும் உபாதைகள் இந்தச் சிறுவயதிலேயே தலைதூக்குகின்றனவோ என்ற சந்தேகம் எழுகிறது. ரத்த அணுக்கள் குறைபாடு, குளிர்ந்த பிரதேசத்தில் வளர்ச்சி, இருதயம் வழியாக ரத்த ஓட்டம் சீராகச் செல்ல முடியாமை போன்ற ஒன்றுக்கொன்று தொடர்புடைய காரணங்களால் வயிறு, தோல், நுரையீரல், மூளை ஆகிய பகுதிகளின் சீரான செயல்பாடுகளில் தொய்வு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
சகல ஜீவராசிகளுக்கும் வயிற்றிலுள்ள செரிமான கேந்திரத்தின் மூலமாகத்தான் உடல் வலுவும், வலிவினால் ஆரோக்கியமும் நிலைநிறுத்தப்படுகின்றன. அதனால் வலுவைக் கூட்டுவதற்கான அடிப்படை ஆதாரம் செரிமான கேந்திரந்தான். அதை இந்த இளம் வயதிலேயே நன்கு பாதுகாக்கத் தவறினால், பின் விளைவுகள் பெரும் அளவில் ஏற்பட வாய்ப்பிருக்கின்றன. அதனால் செரிப்பதற்குக் கடினமான உணவுப் பொருள்களை நீங்கள் தவிர்க்க வேண்டும்.
உண்ணும் உணவை ஜீரணம் செய்வதற்கு உதவும் கறிவேப்பிலை, சுக்கு, கடுக்காய் ஆகியவற்றின் சேர்க்கையினால் கஷாயம் தயாரித்து காலை, மாலை வெறும் வயிற்றில் சுமார் 48 நாள்கள் சாப்பிடவும். வயிற்றின் அமிலச் சுரப்பை மேம்படுத்தும் இம்மருந்துகளால், உணவின் சத்தானது நன்கு உடலில் சேர்க்கப்பட்டு, உடல் வலுவும் ஆரோக்கியமும் மேம்படுத்தப்படுகின்றன.
கறிவேப்பிலை 6 பங்கு, கடுக்காய்த் தோல் 4 பங்கு, சுக்கு 2 பங்கு ஆகியவற்றை 1 லிட்டர் தண்ணீருடன் காய்ச்சி, கால் லிட்டராக வற்றியதும் வடிகட்டி, காலையில் 125 மி.லி. , மாலையில் இளஞ்சூடாக 125 மி.லி. என வெறும் வயிற்றில் சாப்பிடவும். இந்துப்பு,
வெல்லம், தேன் போன்றவற்றைச் சிறிது சேர்த்தும் சாப்பிடலாம். இதனால் உடல் எரிச்சல், காய்ச்சல், நீர் வேட்கை, வயிறு சம்பந்தமான பசியின்மை, செரிமானமாகாமல் உண்ட உணவு மலத்தில் வெளியேறுதல் போன்ற உபாதைகள் குணமாகும்.
நல்ல உடல் வலுவோடு இருக்க வேண்டிய வயதில் உள்ள தங்களுக்கு உடலில் இத்தனை உபாதைகள் தலைதூக்குவதை எண்ணும்போது கவலையாக உள்ளது. மேற்குறிப்பிட்ட கஷாயத்தை அருந்துவதால் ஏற்படும் அமிலச் சுரப்புகளின் வழியாக, உணவின் சத்தானது, உடலில் நன்கு சேர்க்கப்பட்டு, எதையும் செரிக்கும் சக்தியை நீங்கள் பெற்றுவிட்டால், அதன் பிறகு ஆயுர்வேத மருந்துகளாகிய சியவனப்பிராசம் எனும் லேகியத்தை காலையில் பத்துகிராம் வெறும் வயிற்றிலும், ப்ராம்ஹ ரசாயனம் எனும் லேகியத்தை மாலையில் வெறும் வயிற்றில் பத்துகிராம் அளவிலும் தொடர்ந்து 3-6 மாதங்களுக்குச் சாப்பிடலாம். உடல் வலுவானது கூடி ஆரோக்கியத்தின் சுகத்தை நீங்கள் அனுபவிக்கலாம்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...