டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: விடுதி உணவால் செரிமான பிரச்னை!

நான் தற்சமயம் சென்னையில் தங்கி வேலை பார்த்து வருகிறேன். விடுதி உணவால் செரிமான பிரச்னை மற்றும் வயிற்றுவலியால் தொடர்ந்து அவதிப்பட்டு வருகிறேன். மாதவிடாய் நாட்களில் மிகவும் சோர்வாக உள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:57 pm

எஸ். சுவாமிநாதன்

நான் தற்சமயம் சென்னையில் தங்கி வேலை பார்த்து வருகிறேன். விடுதி உணவால் செரிமான பிரச்னை மற்றும் வயிற்றுவலியால் தொடர்ந்து அவதிப்பட்டு வருகிறேன். மாதவிடாய் நாட்களில் மிகவும் சோர்வாக உள்ளது. வயிற்றுவலி, பின் குறுக்கு வலி கடுமையாக இருப்பதால் அன்றாட பணிகளைக் கூட செய்ய இயலவில்லை. தலையின் முன்புறம் முடி அதிகமாகக் கொட்டுகிறது. 8 மணி நேரம் தொடர்ந்து கணினி முன் வேலை செய்வதால் கண் எரிச்சல், கருவளையம் உருவாகிறது. மேற்கண்டவற்றுக்கு ஆயுர்வேதத்தில்
ஏதேனும் வழிமுறைகள் உள்ளனவா?

-க.சங்கீதா, சென்னை.

விடுதி உணவால் வயிற்றிலுள்ள பாசகம் எனும் பித்தம் கெட்டுவிடக்கூடும். அது கெட்டுவிட்டால், உடலின் பல பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லவேண்டிய உணவின் சத்தான பகுதியானது சரி வர பிரிக்கப்படாமல், குப்பையாகவே இருக்க வேண்டிய நிலை உருவாகும். அதனால் தான் நம் முன்னோர் உணவிற்கு மிகவும் முக்கியத்துவம் அளித்திருந்தனர். காலை உணவில், டால்டா, மைதா, எண்ணெய் ஆகியவற்றின் அதிக கலப்புள்ள உணவுப் பொருட்களை நீங்கள் முற்றிலுமாக தவிர்க்க வேண்டிய அவசியமிருக்கிறது. அவற்றால் நிறைய செரிமானக் கோளாறுகளும், வயிற்றில் வாயுவின் தேக்கமும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. இளம்வயதின் காரணமாகவோ, வேலைக்கு அவசரமாக போக வேண்டிய நிர்பந்தத்தாலோ, பலரும் இதைப் பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல், கிடைப்பதைச் சாப்பிட்டு , பின்னால் அவதியுறுவது இக்காலங்களில் அதிகமாகக் காணப்படுகிறது.

வில்வாதி லேஹ்யம், அஷ்டசூரணம், தசமூலாரிஷ்டம் போன்ற சில ஆயுர்வேத மருந்துகள், உங்களுடைய செரிமானக் கோளாறுகளை விரைவில் மாற்றித் தருபவை. அவற்றை மருத்துவர் ஆலோசனைப்படி நீங்கள் அவசியம் சாப்பிட வேண்டியவை. குடலில் தேங்கும் அழுக்குகளை அகற்றுவதில் சிறப்பானவை. விடுதி உணவையும் செரிக்க வைத்து உடலை நிலை நிறுத்த உதவுபவை.

மாதவிடாய் நாட்களில் ஏற்படும் சோர்வு, பல தடவையும் சுரப்பிகளைச் சார்ந்ததும், பின்னர் சரியாக்கக் கூடிய உணவினாலும் மருந்தினாலும் தன் நிலைக்குத் திரும்புவதாகவும் இருப்பதால், உணவை வெது வெதுப்பாகச் சாப்பிடுவதை நீங்கள் வழக்கமாக்கிக் கொண்டு, எளிதில் செரிமானமாகும் உணவையே சாப்பிடுதல் நலம். தலைக்கு வாரமிரு முறை நல்லெண்ணெய்யோ மூலிகைத் தைலமோ தேய்த்துக் குளிப்பது, மாதவிடாய் சீராக வெளியேறவும் வயிற்றுவலியையும் குறைக்க உதவும். வார இறுதியில் வீட்டிற்குச் செல்ல முடியுமானால் வெந்தயம், நல்லெண்ணெய், உளுந்து, கறுப்பு எள்ளு போன்றவற்றை அதிகம் சேர்த்துக் கொள்வதுடன் , நல்லதொரு ஓய்வையும் நீங்கள் எடுப்பதும் நலமே. 

தலைமுடி உதிர்தலுக்கு வேலைப் பளு, மூளையும் மனமும் சோர்வுறும் அளவிற்கு பணிச் சுமை கூடுதல், சத்தான உணவு சேராமை, எதிர்காலம் பற்றிய கவலை, அடிக்கடி விசனப்படுதல் போன்றவை காரணமாகலாம். தேனில் ஊறிய நெல்லிக்கனிகளை காலை உணவிற்கு முன் ஒன்றிரண்டு சாப்பிட்டு வரலாம். எலும்பினுடைய கழிவான முடியை, எலும்புச்சத்து கூடும் வகையிலான பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, சாரப் பருப்பு, பேரீச்சம்பழம், அக்ரோட்பருப்பு, அத்திப்பழம் போன்றவற்றை நீங்கள் சிறிய அளவில் ஒரு நாளில் இரு முறை சாப்பிட்ட பிறகு, சிறிது சூடான பால் அருந்தலாம். எலும்புகளின் அடர்த்தியை இவை கூட்டித் தருவதுடன், முடிவளர்ச்சியையும் அதிகரிக்கும். 

கண்கள் சோர்வடையும் வகையில் 8 மணி நேரம் தொடர்ந்து கணினி முன் வேலை செய்வதால் ஏற்படும் கண் எரிச்சல், கரு வளையம் போன்றவற்றைத் தவிர்க்க, வாயில் நீர் நிரப்பி உப்பச் செய்து, கண்களை மூடி அதன் மேல், பானையிலுள்ள குளிர்ந்த நீரை தெளித்துக் கொள்ளுதல், நந்தியாவட்டைப் பூக்கள், முருங்கைப் பூக்கள், ரோஜா இதழ்கள் ஆகியவற்றில் ஒன்றை குளிர்ந்த நீரில் நனைத்து கண்களின் மேல் வைத்து மிருதுவான துணியால் கட்டி, சிறிது நேரம் வைத்திருத்தல், பொன்னாங்கண்ணி கீரை, முருங்கைக் கீரை, கேரட், பால், நெய், தேன், வெண்ணெய் போன்ற உணவு வகைகளை, வீட்டிற்குச் செல்லும் போது சமைத்து உண்ணுதல், திரிபலை எனும் ஆயுர்வேத சூரண மருந்தை 5 கிராம் எடுத்து, 7 ணீ மி.லி. உருக்கிய த்ரை பலக்ருதம் எனும் நெய் மருந்து கலந்து, 5 மி.லி. தேனும் குழைத்து இரவில் படுக்கும் முன் சாப்பிடுதல், காரம், புளி, உப்புச் சுவைகளைக் குறைத்தல், பசுமை நிறைந்த புல்தரை, பசுமையான நெல் விளைந்துள்ள நிலம், அவற்றின் நறுமணம் நிறைந்த பகுதிகளை அடிக்கடி காணுதல், இரவில் கண் விழித்திராமல் படுத்துறங்குதல் போன்றவை நன்மை தரக் கூடியவை.

உடலெங்கும் எண்ணெய் தடவி, வியர்வை வரவழைத்து, பேதி மருந்து சாப்பிட்டு குடலைச் சுத்தப்படுத்துதல், எனிமா எனும் வஸ்தி சிகிச்சை முறை, மூக்கினுள் மருந்துவிட்டு தலைப் பகுதியை சுத்தப்படுத்தும் சிகிச்சை, நெற்றியில் ஊற்றும் "சிரோதாரா', தலையில் எண்ணெய் நிரப்பும் "சிரோவஸ்தி', கண்களின் வெளிப்புறம் உளுந்து மாவு வரம்பு கட்டி, கண்ணின் உள்ளே மூலிகை நெய் நிரப்பும் "தர்ப்பணம்' எனும் சிகிச்சை முறை, முகாலேபம் எனும் முகத்தை அழகுறச் செய்யும் ஆயுர்வேத வைத்திய முறை போன்றவை தங்களுக்கு நல்ல பலனையளிக்கக் கூடியவை.

(தொடரும்) 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.