திரைக்கதிர்
லிங்கா'வின் தோல்வி, அதன் பின்னான சர்ச்சைகள், பேச்சுவார்த்தைகள் என ரஜினியின் வட்டாரம் தொடர் சலசலப்புகளைச் சந்திக்க, இனி வரும் படங்கள் சற்று வித்தியாசமாக இருக்க வேண்டும் என நண்பர்களிடம் மனம் விட்டு பேசி வந்தார் ரஜினி.


லிங்கா'வின் தோல்வி, அதன் பின்னான சர்ச்சைகள், பேச்சுவார்த்தைகள் என ரஜினியின் வட்டாரம் தொடர் சலசலப்புகளைச் சந்திக்க, இனி வரும் படங்கள் சற்று வித்தியாசமாக இருக்க வேண்டும் என நண்பர்களிடம் மனம் விட்டு பேசி வந்தார் ரஜினி. இருந்தும், ஷங்கர் போன்ற ஆளுமைகள்தான் ரஜினியின் மார்க்கெட்டுக்கு ஏற்றாற் போல் படம் கொடுக்க முடியும் என்பது பலரின் கருத்தாக இருந்தது. ரசிகர்களும் அதை எதிர்பார்த்திருந்த வேளையில், "அட்டக்கத்தி', "மெட்ராஸ்' படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனி முத்திரை பெற்ற ரஞ்சித்தை தனது அடுத்த பட இயக்குநராக தேர்வு செய்திருக்கிறார் ரஜினி. நட்சத்திர பிம்பத்தை தவிர்த்து வெகு ஜன திரைப்படங்கள்தான் இப்போதைய சினிமா என்பதை உணர்ந்ததாலேயே ரஜினி இந்த முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது. ரஞ்சித்திடம் கதையின் லைன் கேட்ட ரஜினி, ""இதை இன்னும் விரிவாக கொண்டு வாருங்கள்'' என்று சொல்லியிருக்கிறார். காத்திருந்தது போல முழுக்கதையும் சொல்லப்பட, அந்த இடத்திலேயே 45 நாள்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார் ரஜினி.
-------------------------------------
ஒரு கோடி முதலீடு போட்டால் நான்கு மடங்கு லாபம் என்கிறது பேய் பட வட்டாரங்கள். இதனால் சமீப கோலிவுட்டில் வாரத்துக்கு ஒரு பேய் படம் என்பது வழக்கமாகி விட்டது. பெரும் எதிர்பார்ப்புகளோடு வந்த "காஞ்சனா -2',
எதிர்பார்த்த லாபத்தை விட பல மடங்கு லாபத்தைக் கொட்டி இரைக்க, வரிசைக் கட்டி நிற்கிறது பேய் படங்கள். இதில் புது மாதிரியாக கவனம் ஈர்க்கிறது "கோப்பெருந்தேவி.' "காஞ்சனா - 1', "காஞ்சனா -2' படங்களில் நடித்தவர்களையும் சமீபத்தில் வெற்றி பெற்ற "அரண்மனை' படத்தில் நடித்தவர்களையும் ஒருங்கே இணைத்து இப்படத்தை இயக்கியிருக்கிறார் சங்கர் பழனிச்சாமி. இப்படத்தில் நடிக்கும் நடிகர்களின் பட்டியல் நீள்கிறது. வெறும் அனுமாஷ்ய சக்திகளின் பின்னணி என்றில்லாமல் காமெடி, த்ரில், வரலாற்றுக் கதைகள், காதல் என பல வித அம்சங்கள் நிறைந்திருப்பது இத்திரைக்கதையின் சிறப்பு. படத்தின் குறிப்பிட்ட சில காட்சிகளுக்காக லடாக் பகுதியில் தனிச்சிறப்புள்ள அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன. கேரள வரவு ஆராத்யா இதில் பேயாக நடிக்கிறார்.
-------------------------------------
அரசியலில் நுழைந்த பின் படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார் சிரஞ்சீவி. 2006-ஆம் ஆண்டு ஏ.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த "ஸ்டாலின்' படத்தின் வெற்றியோடு அரசியல் களம் புகுந்தார். மீண்டும் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் தரப்பில் இருந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டுக் கொண்டிருக்க, திடீரென காங்கிரஸ் கட்சியில் இணைந்து பரபரப்பானார். இதனால் மீண்டும் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு மழுங்கியது. இருந்தும், அவ்வப்போது அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார். பொருத்தமான கதை அமையாததால் அடுத்தடுத்த முயற்சிகள் தள்ளிப் போயின. மணிரத்னம், ஷங்கர் மற்றும் பல டோலிவுட் இயக்குநர்கள் அவருக்கு கதை சொன்னார்கள். ஆனால், எதுவும் கை கூடி வரவில்லை. தற்போது தீவிர அரசியலில் இருந்து சற்று ஒதுங்கியிருக்கும் சிரஞ்சீவி, பட முயற்சிகளை சற்று தீவிரப்படுத்தினார். இதனால் ஒருவழியாக அடுத்தப் படத்துக்கான கதையில் சற்று திருப்தி அடைந்துள்ளார். பூரி ஜெகந்நாத் இப்படத்தை எழுதி இயக்குகிறார். இதற்கான ஒப்புதலை சிரஞ்சீவி அளித்துள்ளதாக தெரிகிறது. இப்படம் சிரஞ்சீவிக்கு 150-வது படமாக அமைந்துள்ளது. சிரஞ்சீவின் நெருங்கிய நண்பரான பந்தலா கணேஷ் இப்படத்தை தயாரிக்கிறார்.
-------------------------------------
திருமணத்தோடு சினிமா வாழ்க்கை முடிந்து விடும் என்பது நடிகைகளுக்கு எழுதப்படாத விதி. சமீபமாக அந்த வழக்கம் மலையேறிக் கொண்டிருக்கிறது. திருமணத்துக்குப் பின் ஒரு சில நடிகைகளுக்கு ஹீரோயினாகவே நடிக்கும் பாக்கியம் கிடைத்து விடும். சிலருக்கு மட்டுமே அது கதையின் முக்கிய பாத்திரங்களாக அமைந்து விடுகிறது. இயக்குநர் விஜய்யை மணந்த அமலாபால் மீண்டும் சினிமாவுக்குத் திரும்பி விட்டார். அதே போல் ஐஸ்வர்யா ராய், அனன்யா, காவ்யா மாதவன், நவ்யா நாயர், ஜோதிகா, ரீமா கல்லிங்கல் போன்றவர்களும் திருமணத்துக்குப் பின் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். மிக நீண்ட இடைவெளிக்குப் பின் சினிமாவுக்கு வந்திருக்கும் கஜோலுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு சம்பளம் பேசப்பட்டிருக்கிறது. தமிழில் "நேரம்' படத்தில் அறிமுகமான நஸ்ரீயா நஸீம் தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனம் பெற்றார். அடுத்தடுத்த வாய்ப்புகள் வந்து சேரும் நேரத்தில் திடீரென தன் திருமண அறிவிப்பை வெளியிட்டார். மலையாள நடிகர் பஹத் பாசிலை காதல் திருமணம் செய்து கொண்டார். ஆனாலும் தொடர் பட வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தன. இந்நிலையில் 8 மாத இடைவெளிக்குப் பின் மீண்டும் சினிமாவுக்கு வருகிறார். குடும்பத்தினர் ஒப்புதலோடு இனி மலையாள சினிமாக்களில் மட்டுமே நடிக்கும் முடிவை எடுத்துள்ளார் நஸ்ரீயா.
-------------------------------------
"ஐ' படத்துக்குப் பின் தமிழில் தனுஷ் நடிக்கும் படம், உதயநிதியின் "கெத்து' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் எமி ஜாக்சன். "ஏக் திவானா தா' படத்துக்குப் பின் ஹிந்திப் பட வாய்ப்புகளை எதிர்பார்த்து காத்திருந்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்நிலையில்தான் கோலிவுட் பக்கம் கவனம் திருப்பி படங்கள் பிடித்தார். இந்நிலையில் அவருக்கு ஹிந்தியில் மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை வழங்கியிருப்பவர் பிரபுதேவா. சிறிது இடைவெளிக்குப் பின் அக்ஷய்குமார் நடிக்கும் "சிங் ஈஸ் பிளிங்' படத்தை இயக்குகிறார் பிரபுதேவா. இதில் கீர்த்தி சனோன் நடிப்பதாக இருந்தது. திடீரென்று அவர் நீக்கப்பட்டார். வேறு ஹீரோயின்கள் தேடி வந்த நிலையில் எமி ஜாக்சனை தயாரிப்பு தரப்புக்கு சிபாரிசு செய்துள்ளார் பிரபுதேவா. தயாரிப்பு தரப்பும் மறுப்பு சொல்லாத நிலையில் படத்தின் ஹீரோயின் ஆகி விட்டார் எமி. இப்படத்துக்காக எமி கிக் பாக்ஸிங் கற்பதுடன் சல்சா நடனமும் கற்கிறார். ஹிந்தியில் ஒரு வெற்றி படம் அமைந்து விட்டால், தனக்கென தனி இடம் உருவாகும் என நம்பும் எமி அதற்கான அடுத்தடுத்த முயற்சிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...