திரைக்கதிர்
தமிழில் "காஞ்சனா 2', "வை ராஜா வை' ஆகிய படங்களில் நடித்துள்ள டாப்ஸி அந்த படங்களின் வெளியீட்டை எதிர்பார்ப்பதோடு,


தமிழில் "காஞ்சனா 2', "வை ராஜா வை' ஆகிய படங்களில் நடித்துள்ள டாப்ஸி அந்த படங்களின் வெளியீட்டை எதிர்பார்ப்பதோடு, பாலிவுட் வாய்ப்புகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது "ரன்னிங் ஷாதி டாட் காம்' என்ற ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து சூஜித் சிர்கர் இயக்கும் புதிய படமொன்றில் இஸ்லாமிய பெண் வேடம் ஏற்க உள்ளார். இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது இந்திய மண்ணை விட்டுச் செல்ல மனம் இல்லாத ஓர் இஸ்லாமிய வம்சா வழியினரின் கதையாக இப்படம் உருவாகிறது. கதைப்படி டாப்ஸி உருது பேசி நடிக்க வேண்டும். ஆனால், அவருக்கு உருது மொழி இப்போதுதான் அறிமுகம் என்பதால் தடுமாறினார். இதையடுத்து படத் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் டாப்ஸிக்கு உருது மொழி சிறப்பு வகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கை தேர்ந்த ஆசிரியரையும் அமர்த்திக் கொண்டு படப்பிடிப்பு இடைவெளிகளில் உருது கற்று வருகிறார். தற்போது உருது நாடகங்களையும் பார்த்து வருகிறார்.
"ஒரு தொட்டில் சபதம்', "ரயிலுக்கு நேரமாச்சு' உள்ளிட்ட படங்களை இயக்கிய பாரதிமோகன் நீண்ட இடைவெளிக்குப் பின் எழுதி, இயக்கும் படம் "எங்களுக்கு வேறு கிளைகள் கிடையாது.' படப்பிடிப்புத் தளத்தில் பிணைக்
கைதிகளாக வைக்கப்படும் ஒரு படக்குழுவினரின் போராட்டத்தைக் களமாகக் கொண்டு இக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. சினிமா இயக்குநர், கதாநாயகன், கதாநாயகி என தமிழ் சினிமாவில் முன்னணி இடத்தை பிடித்தவர்கள் படப்பிடிப்புக்காக திருச்சி மாவட்டத்தில் இயற்கை எழில் சூழ்ந்த இடங்களுக்கு படப்பிடிப்புக்காக செல்கின்றனர். அந்த சமயத்தில் அந்தப் பகுதியில் நிலவி வரும் பிரச்னையைத் தீர்க்க பிரபல தாதாவினால் அவர்கள் கடத்தப்படுகிறார்கள். பின் அங்கு நடந்த சம்பவங்களின் பின்னணியை ஆக்ஷன், காதல், காமெடி என கமர்ஷியலாக சொல்லுவதே திரைக்கதை. ஆர்.ஆர்.ராகவேந்திரா பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. விக்ரம் சந்துரு, சஞ்சய், சாரா தேவா உள்ளிட்ட புதுமுகங்கள் நடிக்கின்றனர். நிழல்கள் ரவி, போஸ் வெங்கட், மனோபாலா, சிங்கம்புலி, டி.பி.கஜேந்திரன், டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்கள் ஏற்று நடிக்கின்றனர். சென்னை மற்றும் திருச்சி பகுதிகளில் இறுதிக் கட்ட படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மே மாத வெளியீடாக இப்படம் திரைக்கு வருகிறது.
பாலாவின் இயக்கத்தில் உருவாகி வரும் "தாரை தப்பட்டை' படத்தின் மூலம் ஆயிரம் படங்கள் என்ற மைல் கல்லைத் தொடுகிறார் இளையராஜா. பால்கி இயக்கத்தில் அமிதாப், தனுஷ், அக்ஷரா நடித்த "ஷாமிதாப்' படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மாதம் மும்பையில் நடந்தது. இவ்விழாவை ஆயிரம் படங்களுக்கு இசையமைத்து சாதனை புரிந்த இளையராஜாவுக்கான பாராட்டு விழாவாக பாலிவுட் உலகம் கொண்டாடியது. தமிழ் திரையுலகிலிருந்து ரஜினி, கமல் ஆகியோர் கலந்து கொண்டு இளையராஜாவுக்குப் புகழாராம் சூட்டினார்கள். இந்த விஷயத்தில் தமிழ் திரையுலகை பாலிவுட் உலகம் முந்திக் கொண்டது. இதனால் இந்த விஷயம் குறித்து அவ்வப்போது கோலிவுட் பிரபலங்கள் வருத்தம் தெரிவித்து வந்தனர். விழா மேடைகளில் "இளையராஜாவுக்கு நாம்தான் இந்த விழாவை முதலில் எடுத்திருக்க வேண்டும்' என்ற கருத்து தொடர்ந்து ஒலித்து வந்தது. இதைக் கருத்தில் கொண்ட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.தாணு இளையராஜாவுக்கான பாராட்டு விழாவை நடத்துவதற்கான பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளார். ""இது ஒரு சாதாரண பாராட்டு விழாவாக மட்டுமல்லாமல் தென்னிந்திய திரையுலகமே இணையும் விழாவாக நடத்தப்பட இருக்கிறது. "தனியொரு மனிதனுக்கு ஆசிய கண்டத்தில் நடத்தப்படும் பெரிய பாராட்டு விழா என்பதன் பதிவாக இது இருக்கும்'' என தாணு தெரிவித்துள்ளார்.
சித்தி கொடுமையால் தலைமறைவான அஞ்சலி தமிழ் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். தெலுங்கில் நடித்து வந்த அவருக்கு, குடும்பப்பாங்கான வேடங்கள் மட்டுமே கிடைத்தன. இளம் ஹீரோக்களுடன் நடிக்க வாய்ப்பு வராமல் வெங்கடேஷ், என்.டி.பாலகிருஷ்ணன் போன்ற மூத்த ஹீரோக்களுடன் நடிக்கவே வாய்ப்பு வந்தது. இதையடுத்து கிளாமராக நடிக்கும் முடிவை எடுத்தார். பிரபலங்களின் குடும்ப விழாக்கள் மற்றும் சினிமா விழாக்களுக்கு அதுவரை இல்லாத கவர்ச்சி உடைகளை அணிந்து வந்து தனது கிளாமர் ஆர்வத்தை வெளிப்படுத்தினார். அதுவும் கை கொடுக்கவில்லை. இதையடுத்து தமிழில் மீண்டும் இழந்த மார்க்கெட்டைப் பிடிக்க எண்ணினார். தற்போது சுராஜ் இயக்கும் "அப்பா டக்கர்' படத்தின் மூலம் கோலிவுட்டில் ரீ எண்ட்ரி ஆகிறார். இதில் முதல் ஹீரோயினாக த்ரிஷா நடிக்கிறார். விமல் ஜோடியாக "மாப்ளே சிங்கம்' படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இருப்பினும், தொடர் வாய்ப்புகளுக்கு வழியில்லை. டோலிவுட், கோலிவுட் அவருக்கு பெரிய அளவில் கை கொடுக்காததால் தற்போது மலையாளப் படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார். புதிய படம் ஒன்றில் மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்கிறார். இதிலும் முதல் ஹீரோயினாக ஆண்ட்ரியா ஒப்பந்தமாகியுள்ளார். இதனால் இந்த முயற்சியும் அவருக்குச் சோர்வை தந்துள்ளது.
80-களில் தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாக்களில் முன்னணி வரிசையில் இருந்தவர் ஷோபனா. 2000-ஆம் ஆண்டுக்குப் பின் படங்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டார். சென்னை மற்றும் கேரளத்தில் நடனப் பள்ளியை நடத்தி வருவதுடன், ஏராளமான நாட்டிய நாடகங்களையும் நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு வெளியான 3டி அனிமேஷன் படமான "கோச்சடையான்' படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார் ஷோபனா. தற்போது ராம் சரண் நடிக்கும் "மை நேம் ஈஸ் ராஜு' படத்தில் அவருக்கு அம்மாவாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இது அம்மா, மகனுக்கு இடையேயான சென்டிமெண்ட் கதையாக உருவாகவுள்ளது. தொடர்ந்து தமிழில் உருவாகும் மூன்று படங்களில் அவர் அம்மா கதாபாத்திரம் ஏற்று நடிப்பார் எனக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...