/

திரைக்கதிர்

மலையாள நடிகர் பஹத் பாசிலை காதல் மணம் புரிந்து  கொண்ட நஸ்ரியா கார் ஓட்டுவதில் அதீத ஈடுபாடு கொண்ட வர் நஸ்ரியா,

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:16 am

ஜி. அசோக்

மலையாள நடிகர் பஹத் பாசிலை காதல் மணம் புரிந்து  கொண்ட நஸ்ரியா கார் ஓட்டுவதில் அதீத ஈடுபாடு கொண்ட வர் நஸ்ரியா, திருவனந்தபுரம் - கன்னியாகுமரி சாலையில் ரூ.1 கோடி மதிப்புள்ள ரேஞ்ச் ரோவர் ஆடம்பரக் காரை ஓட்டிச் சென்றார். அப்போது  கார் விபத்தில் சிக்கியது. அதிகமான போக்குவரத்து  நெரிசலைக் கொண்ட அந்த சாலையில் பின்னால் வந்த கார், நஸ்ரியாவின் கார் மீது இடித்தது. இதனால் பதற்றம் அடைந்த நஸ்ரியா திடீரென காரை நிறுத்தி விட்டு இறங்கி வந்து விபத்து ஏற்படுத்தியவருடன் கடும் வாக்குவாதம் செய்தார். தற்போது அந்தக் காட்சி இணையதளங்களில் உலா வருகிறது. போக்குவரத்து போலீஸார் மற்றும் பொதுமக்களின் சமரசத்தையடுத்து அங்கிருந்து கிளம்பிச் சென்றார். தற்போது அந்தக் காரை விற்று விட்டார். அதற்கு பதிலாக ரூ.30 லட்சம் மதிப்புள்ள பென்ஸ் காரை வாங்கியுள்ளார். விபத்துக்குள்ளான ரேஞ்ச் ரோவர் காரை சமீபத்தில்தான் நஸ்ரியா வாங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூட நம்பிக்கைகளை வெறுத்து ஒதுக்குபவர் நடிகர் சத்யராஜ். ஆனால், தான் நடிக்கும் படங்களில் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப அதில் தன் நிலையை மாற்றிக் கொள்வார். சொந்தக் கருத்துக்களை ஒதுக்கி வைத்து விட்டு கதையின் தன்மைக்கு ஏற்ப மட்டுமே நடிப்பார். தற்போது பேய் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சத்யராஜ். "நாய்கள் ஜாக்கிரதை' படத்தைத் தொடர்ந்து தன் மகன் சிபிராஜ் நடிக்கும் "ஜாக்சன் துரை' படத்துக்காக இரட்டை வேடங்கள் ஏற்று நடிக்கும் சத்யராஜ்,  அதில் ஒரு வேடமாக பேய் கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். "பர்மா' படத்தை இயக்கிய தரணிதரன் இப்படத்தை எழுதி இயக்குகிறார். கதையில் வரும் பேய் கதாபாத்திரத்தை முதலில் ஏற்க மறுத்த சத்யராஜ், கதாபாத்திரத்தின் கனத்தை உணர்ந்து அதில் நடிப்பதாகத் தெரிகிறது. கிராமம் ஒன்றில் நடக்கும் அனுமாஷ்ய சக்திகளின் பின்னணியை கண்டறியும் காவல்துறை அதிகாரியாக சிபி அங்கு செல்கிறார். அதன் முடிவு என்ன என்பதுதான் கதை. சிபிக்கு ஜோடியாக பிந்துமாதவி நடிக்கிறார்.   சுதந்திரத்துக்கு முந்தைய காலக் கட்ட சம்பவங்கள் படத்தில் இடம் பெறுகிறது.

Story image

மேடை நாடகங்களிலிருந்து வந்ததாகச் சொல்லிக் கொண்டாலும், சினிமாவின் புகழ் வெளிச்சத்துக்குப் பின் மீண்டும் நாடகங்களில் நடிப்பதை பெரும்பாலான நட்சத்திரங்கள் விரும்புவதில்லை.  நீது சந்திரா  தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்து சினிமாவுக்கு வந்தவர். அவ்வப்போது மேடை நாடக வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தன.   வட இந்திய சினிமாக்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்ததால் ஆசையாக இருந்தும் நாடக வாய்ப்புகளை ஏற்க முடியவில்லை.  தமிழில் தற்போது வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ஒரு சில படங்கள் மட்டுமே கையில் இருப்பு. இந்த இடைவெளியில்  நாடகத்தில் நடித்துள்ளார். உருது மொழி நாவலான "உம்ரா ஜானை' தழுவி உருவாகியுள்ள அந்த நாடகத்தில் தனது கதக் நடனத் திறமையை வெளிப்படுத்தும் விதமாக அவருக்கு கதாபாத்திரம் கிடைத்துள்ளது. இதே நாவல் ஹிந்தியில் படமான போது அந்த பாத்திரத்தில் ஐஸ்வர்யாராய் நடித்திருந்தார்.

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் தங்கை உறவு முறை  கொண்டவர் நிலா. "அன்பே ஆருயிரே' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான அவர், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பரபரப்பான நடிகையானார். ஆனால், திடீரென்று மார்க்கெட் சரிந்து திரையுலகை விட்டு காணாமல் போனார். ஹிந்தியில் வாய்ப்புத் தேடியவருக்கு ஏமாற்றங்களே மிஞ்சியது. தமிழ் திரையில் காணமால் போயிருந்த அவரை இசை படத்தின் மூலம் ஒரு காட்சிக்காக அழைத்து வந்தார் எஸ்.ஜே.சூர்யா. அதைத் தொடர்ந்து நிலா நடித்து நீண்ட காலமாக வெளியாகாமல் இருந்த கில்லாடி படமும் வெளியிடப்பட்டது. ஆனால் இதில் எதுவுமே அவருக்கு கை கொடுக்கவில்லை. இதே பாணியில் பிரியங்கா சோப்ராவின் தங்கை உறவு முறை கொண்ட மற்றொரு நடிகை மன்னாரா என்கிற பார்பி சோப்ரா. டோலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். மகேஷ்பாபு நடிக்கும் "பிரம்மோத்ஸவம்' படத்தில் நடிக்க தேர்வாகி இருக்கிறார். ஏற்கெனவே இப்படத்தில் டோலிவுட்டின் முன்னணி வரிசையை சமீபமாக தக்க வைத்து இருக்கும் ரகுல் ப்ரீத் சிங் ஒப்பந்தமாகியுள்ளார். இதனால் இருவருக்குமிடையே கடும் போட்டி இருக்கும் என கூறப்படுகிறது. ஏற்கெனவே ஹிந்தி படத்தில் கவர்ச்சிக்கு கொஞ்சமும் அஞ்சாத கதாபாத்திரங்களில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் பார்பி சோப்ரா என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் "புலி' பட படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் கடந்த சில நாள்களாக நடந்து வருகின்றன. விநாயகர் சதுர்த்தியில் படத்தை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்துக்கான வேலைகள் தொடங்கி விட்டன. இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் 26-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. முதற்கட்ட படப்பிடிப்பு சீனாவில் தொடங்கும் எனச் சொல்லப்பட்டது. அங்குள்ள தட்பவெப்பநிலை இப்போது சாதகமாக இல்லாத நிலையால், படப்பிடிப்புக்கான இடமும் மாறியுள்ளது. எதிர்பார்க்கும் சூழல் அமையாததால் செப்டம்பர் வரை படக்குழு காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதனால், சென்னையில் முதல்கட்டப் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.  ஏழு நாட்கள் நடக்கவிருக்கும் அந்தப் படப்பிடிப்புக்காக நாற்பது நாட்கள் வேலை செய்து செட் போடப்பட்டு வருகிறது.  கிழக்கு கடற்கரை சாலை, மற்றும் ஏவிஎம் ஆகிய இடங்களில் இவ்வேலைகள் நடைபெற்று வருகின்றன. படத்தில் இடம் பெறும் முக்கிய காட்சிகள் இங்கு படமாகவுள்ளன.

"கயல்' படத்தைத் தொடர்ந்து தனுஷ் ஹீரோவாக நடிக்கும் படத்துக்கான வேலைகளை மும்முரமாகத் தொடங்கி விட்டார் இயக்குநர் பிரபுசாலமன். மைனா, கயல் என கதைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வந்த சாலமன், அதிக அளவில் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த படமாக இப்படத்தை உருவாக்கவுள்ளார். இதன் முதல் கட்டமாக சண்டைப் பயிற்சிக்காக ஹாலிவுட் படங்களில் வேலை பார்த்த ரோஜர் யுவன் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளார். இவர் பிரபல ஜேம்ஸ்பாண்ட் படமான ஸ்கைஃபால் மற்றும் ப்ளேடு உள்ளிட்ட படங்களில் வேலை பார்த்தவர். ஹாலிவுட் ரசிகர்களால் பெரிதும் வரவேற்புக்குரிய ரோஜர் யுவன் இந்திய திரையுலகில் பணியாற்றுவது இதுவே முதன் முறை.  இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறார்.  இமான் இசையமைக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தினை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. ரயில் பயணத்தில் நடக்கும் காதலே திரைக்கதை. முதல் கட்டமாக ரயில் பயணத்தில் நடக்கவுள்ள சண்டைக் காட்சிகளை ரோஜர் யுவன் அமைக்கவுள்ளார். தற்பொழுது தனுஷ் வேலை இல்லாத பட்டதாரி 2 படப்பிடிப்பில் இருக்கிறார்.  இந்தப் படம் முடிந்ததும் பிரபுசாலமனின் படத்துக்கு தயாராகிறார் தனுஷ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.