/

திரைக் கதிர்

"அஞ்சான்' படத்துக்குப் பின் "சண்டகோழி' படத்தின் இரண்டாம் பாகத்துக்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளார் இயக்குநர் லிங்குசாமி. முதல் பாகத்தில் இடம் பெற்ற அதே கதை பின்னணியில் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:54 am

ஜி. அசோக்

"அஞ்சான்' படத்துக்குப் பின் "சண்டகோழி' படத்தின் இரண்டாம் பாகத்துக்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளார் இயக்குநர் லிங்குசாமி. முதல் பாகத்தில் இடம் பெற்ற அதே கதை பின்னணியில் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. திரைக்கதைக்கான கமர்ஷியல் மெருகூட்டும் வேலைகளில் கதையின் விவாதக் குழு ஈடுபட்டுள்ளது. முதல் பாகத்தில் ஹீரோவாக நடித்த விஷால் இதிலும் ஹீரோவாகத் தொடர்கிறார். லிங்குசாமிக்கு உடனடி ஹிட் தேவைப்படுவதால், கதையின் ஒவ்வொரு விஷயத்திலும் அதீத கவனம் செலுத்தி வருகிறார். முதல் பாகத்தில் நடித்த மீரா ஜாஸ்மின் இப்படத்தின் முக்கியமான கதாபாத்திரம் ஏற்று நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். தற்போது கதைக்கான ஹீரோயின் தேடும் வேலைகள் தொடங்கியிருக்கிறது. விஷால் படங்களுக்கு ஆந்திராவிலும் வரவேற்பு இருப்பதால் இரு மொழி ரசிகர்களுக்கும் பரிச்சயமான ஹீரோயினைத் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் சமந்தா, தமன்னா இருவருமே இப்படத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் பரவியுள்ளது. ஆனால் அவர்களிடம் இதுவரை எந்தவித பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என தெரிகிறது. திரைக்கதைக்கு இன்னும் முழு வடிவம் கொடுக்கும் வேலைகள் நிறைவடையவில்லை என்பதால், தற்போதைக்கு ஹீரோயின் தேடும் வேலையைத் தள்ளி வைத்திருப்பதாக படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

"பாகுபலி' படத்துக்கு எல்லா திசைகளிலும் எதிர்பார்ப்புகள் எகிறி கிடக்க, தனது அடுத்த படத்துக்கான வேலைகளில் ஆயத்தமாகி விட்டார் இயக்குநர் ராஜமௌலி. "பாகுபலி'யின் முதல் பாகத்தின் போதே, அப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கான பெரும்பாலான காட்சிகளைப் படமாக்கி விட்டார். இன்னும் சில நாள்கள் படப்பிடிப்பு நடந்தால் "பாகுபலி'யின் இரண்டாம் பாகமும் தயாராகி விடும். இந்நிலையில் தனது அடுத்த படத்தின் ஹீரோவாக சூர்யாவைத் தேர்வு செய்துள்ளார் ராஜமௌலி. சமீபத்தில் சென்னையில் நடந்த "பாகுபலி' டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நட்பின் அடிப்படையில் கலந்து கொண்ட சூர்யா, ""உங்கள் படத்தில் ஒரு காட்சியிலாவது நடிக்க வேண்டும்'' என ராஜமௌலியிடம் கேட்டுக் கொண்டார். இது ராஜமௌலிக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. இதற்கு அந்த மேடையிலேயே பதிலளித்த ராஜமௌலி ""சூர்யாவை வைத்து எப்போது வேண்டுமானாலும் படம் இயக்குவேன். அவர் என்னிடம் வாய்ப்புக் கேட்பது எனக்கு சங்கடத்தை ஏற்படுத்தி விட்டது'' எனப் பதிலளித்தார். "சிங்கம் 3' படத்துக்காக தீவிரமாக தயாராகி வரும் சூர்யா, இப்படம் முடிந்ததும் ராஜமௌலியின் படத்தில் நடிக்கிறார். அடுத்த ஆண்டின் பிற்பகுதியில் இப்படம் தொடங்குகிறது.

ரஜினி, கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு மொழிக் கலைஞர்களுடன் நடித்து புகழ் பெற்றவர் ஜெயப்பிரதா. தற்போது இவரது மகன் சித்து  "உயிரே உயிரே' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். "சத்யம்' ராஜசேகர் இப்படத்தை எழுதி இயக்குகிறார். இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. படத்தின் கதாநாயகி ஹன்சிகா என்பதால் விழாவில் பேசிய பலரும், ஹன்சிகாவின் அழகைப் புகழ்ந்து பேசினர். அப்போது திடீரென ஹன்சிகா - நித்யாமேனன் இருவரில் யார் அழகு? என்ற விவாதம் தொடங்கியது. விழாவில் பாடலாசிரியர் விவேகா பேசியபோது, ""இப்படத்தில் ஹன்சிகாவின் அழகை வர்ணிப்பது போல் ஒரு வரி வேண்டும்'' என்றார்கள். நானும் எழுதினேன். இயக்குநர் படித்துவிட்டு, ""நித்யாமேனனுக்கு பாடல் எழுத சொல்லவில்லை. அழகான ஹன்சிகாவுக்கு பாடல் எழுதச் சொன்னேன்'' என்றார், நானும் ""இவள் தான் அழகி.. உலகத்தின் மலர்களுக்கு இவள் தான் தலைவி'' என்று எழுதினேன் என்றார் விவேகா. விவேகா இவ்வாறு சொன்னவுடன் மேடையிலிருந்த  ஸ்ரீப்ரியா, ""நித்யாமேனன் அழகியில்லை என்று யார் சொன்னது? ஹன்சிகா அழகுதான். அதற்காக நித்யாமேனன் அழகியில்லை என்று கூறாதீர்கள்'' என்று சொல்லவும் அரங்கமே சிரிப்பில் நிறைந்தது.

இதுவரை இந்திய சினிமா வரலாற்றில் எந்தப் படத்துக்கும் இல்லாத பட்ஜெட் ரஜினி - ஷங்கர் இணையும் படத்துக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. "மெட்ராஸ்' ரஞ்சித் இயக்கும் படத்துக்கான படப்பிடிப்புகளில் கவனம் செலுத்தி வரும் ரஜினி இப்படத்துக்கு 40 நாள்கள் மட்டுமே கால்ஷீட் வழங்கியுள்ளார். இப்படம் முடிந்ததும் உடனடியாக ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு வருகிறார் ரஜினி. "எந்திரன்' படத்தின் இரண்டாம் பாகமாக இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் விக்ரம் நடிப்பது உறுதியாகியுள்ளது. இது தவிர இன்னொரு முன்னணி நடிகரும் நடிக்க திரைக்கதையில் இடம் இருப்பதால், அதற்கான நடிகர் தேர்வும் தொடங்கியிருக்கிறது. முதல் கட்டமாக ரஜினி சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள் படமாகவுள்ளன. கிரீஸ், துருக்கி உள்ளிட்ட வெளிநாடுகளில் முதல் கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இதற்காக ஹீரோயினைத் தேர்வு செய்யும் வேலைகளில் இறங்கியுள்ளார் ஷங்கர். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் படம் உருவாகவுள்ளதால், அதற்கேற்ப ஹீரோயினைத் தேடுகின்றனர். இது தவிர விக்ரமுக்கும் ஹீரோயின் உண்டு. அதற்கு தென்னிந்திய நடிகை ஒருவரை தேர்வு செய்ய இருப்பதாகக் கூறப்படுகிறது.

"ராம்கோபால் வர்மாவின் அடுத்தப் படம் "கில்லிங் வீரப்பன்.' சந்தன கடத்தல் வீரப்பனின் வாழ்வை மையமாக கொண்டு உருவாகவிருக்கும் இப்படத்தில் வீரப்பனாக யார் நடிப்பார் என்பது ரகசியமாகவே இருந்தது. வீரப்பன் பிறப்பால் தமிழர் என்பதால் வீரப்பனின் முகச் சாயல் கொண்ட தமிழர் ஒருவரையேத் தேர்வு செய்து நடிக்க வைக்க வர்மா திட்டமிட்டார். இதற்கான தேர்வு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்தது. ஆனால் தமிழ் நடிகர்கள் யாரும் பொருந்தி வரவில்லை. இறுதியில் சந்தீப் பரத்வாஜ் என்பவர் வீரப்பனாக நடிக்க வைக்க தேர்வு செய்யப்பட்டுள்ளார். தில்லியைச் சேர்ந்த இவர் பிரபலமான நாடக நடிகர் ஆவார். நூற்றுக்கணக்கான மேடை நாடகங்களில் நடித்து பயிற்சி பெற்ற இவரின் முகம் வீரப்பனின் முகத்தோடு பொருந்தி வந்ததால் வீரப்பன் வேடத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. தற்போது சத்தியமங்கலம் வனப்பகுதிகளில் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.

மலையாளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் "ஷட்டர்.' சில கதாபாத்திரங்கள் மட்டுமே உலவும் இப்படத்தின் திரைக்கதை  இந்திய சினிமாவில் புத்தம் புதிய பாணியாக இருந்தது. மலையாளம் மட்டுமின்றி மற்ற மொழி இந்திய ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தது இப்படம். தற்போது இப்படம் தமிழில் ரீமேக் ஆகிறது. படத்துக்கு "நைட் ஷோ' என பெயரிடப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் பிரபல படத்தொகுப்பாளர் ஆண்டனி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்புகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், இறுதிக் கட்டப் பணிகள் வேகம் எடுத்துள்ளன. இம்மாத இறுதியில் படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. த்ரில்லர் படமான இப்படத்தில் முதன்மைக் கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார் சத்யராஜ் நடிக்கிறார். அனுமோல், கல்யாணி நடராஜன், தீட்சிதா கோத்தாரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். திங் பிக் ஸ்டுடியோஸ் மூலம் இப்படத்தை தயாரிக்கிறார் இயக்குநர் ஏ.எல்.விஜய்.  எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்கிறார். 2012ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான "ஷட்டர்' படத்தை ஜாய் மேத்யூ என்பவர் எழுதி இயக்கி நடித்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.