திரைக்கதிர்
தான் நடிக்கும் படங்களில் இன்னொரு ஹீரோயின் என்றால் நயன்தாரா சற்று இடையூறு கொடுப்பதாக தகவல்கள் வெளியாகி


தான் நடிக்கும் படங்களில் இன்னொரு ஹீரோயின் என்றால் நயன்தாரா சற்று இடையூறு கொடுப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வெங்கட் பிரபுவின் "மாஸ்' படத்தில் நயன்தாராவால் எமி ஜாக்சனை தூக்கியதாகக் கூறப்பட்டு வந்தது. இப்போது இதே பாணியில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் அடுத்த படத்தில் நயன்தாரா நடிப்பதாக இருந்து தற்போது விலகியுள்ளார். இதற்கு காரணம் எமி ஜாக்சன் இப்படத்தில் மற்றொரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதுதான் காரணம் என கிசுகிசுக்கப்படுகிறது.
"கடல்' படத்துக்குப் பின் மணிரத்னம் எழுதி, இயக்கி வரும் படத்துக்கு "ஓகே கண்மணி' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. "வாயை மூடி பேசவும்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான், இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். நித்யாமேனன் கதாநாயகியாக நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில், பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பின் இக்கூட்டணி இணைவதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. வெகு ஆண்டுகளுக்குப் பின் இக்கூட்டணியில் இணைந்துள்ளது பற்றி ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமிடம் டிவிட்டர் பக்கத்தில் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு பதிலளித்துள்ள பி.சி.ஸ்ரீராம்... ""எந்தப் படத்துக்கு நான் தேவைப்படுவேன் என்பது மணிக்குத் தெரியும். அவர் எப்போது என்னைத் தேடி வருகிறாரோ, அப்போது நானும் தயாராகி விடுவேன். இந்த முறை அவர் என்னைத் தேடி வருவார் என்று உணர்ந்தேன். அது நடந்து இருக்கிறது. "ஓகே கண்மணி' படத்தின் காதல் உங்களை கவரும். கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் புதுமையானதாக இருக்கும். மணிரத்னம், அவரால் முடிந்தவரை நல்ல படம் கொடுக்க உழைத்து வருகிறார். நல்ல அனுபவத்துக்கு காத்திருங்கள்'' என கூறியிருக்கிறார் பி.சி.ஸ்ரீராம்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல இந்திய மொழிப் படங்களில் நடித்து புகழ் பெற்றவர் தபு. முக்கிய கதாபாத்திரங்களில் மட்டுமே தற்போது நடித்து வரும் தபு, ஹிந்தியில் வெளியான "ஹைதர்' படத்தில் சாஹித் கபூருடன் இணைந்து நடித்து வருகிறார். இப்படத்துக்காக ஸ்ரீநகரில் உள்ள மசூதியில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அப்போது அங்குள்ள இமாம் தபு - சாஹித் கபூருக்கு திருமணம் நடத்தி வைப்பது போல் காட்சி படமாக்கப்பட்டது. இப்படம் வெளியாகி நான்கு மாதங்களுக்கு மேல் ஆகிறது. தற்போது பட இயக்குநர் விஷால் பரத்வாஜ் மற்றும் தயாரிப்பாளருக்கு நஷ்ட ஈடு கேட்டு மத குரு குலாம்ஹசன் ஷா நீதிமன்ற நோட்டீஸ் அனுப்பியுள்ளார். படத்தில் இடம் பெறும் அந்த காட்சி கல்வி தொடர்பான காட்சியாகப் பயன்பட போகிறது என்று கூறி என்னையும் இணைத்து படமாக்கினார்கள். ஆனால், அந்தக் காட்சி அதற்கு எதிர்மறையாக உள்ளது. கல்வி தொடர்பாக அந்தக் காட்சி படமாகவில்லை. இதனால் எனது வேலை பறிபோனதுடன் சக பணியாளர்களிடம் எனது மதிப்பு குறைந்துள்ளது. எனவே பத்திரிகை விளம்பரம் மூலமாக பகிரங்க மன்னிப்பு கேட்பதுடன், நஷ்ட ஈடாக ரூ.50 லட்சம் கொடுக்க வேண்டும் என அவருடைய வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இதுவரை புதுமுகங்களை வைத்து மட்டுமே படங்களை இயக்கி வந்த பிரபுசாலமன், தனது அடுத்த படத்துக்காக தனுஷிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். நட்சத்திரங்களைப் பெரிதும் விரும்பாத பிரபுசாலமன், கதைக்குப் பொருத்தமான நடிகர்களை உருவாக்கி வருவதை வழக்கமாகக் கொண்டவர். இந்த முறை உருவாக்கியுள்ள கதைக்கு தனுஷ் பொருத்தமாக இருப்பார் என கருதிய பிரபுசாலமன், இது குறித்து தனுஷிடம் பேசி உள்ளார். சாலமன் சொன்ன கதை தனுஷுக்குப் பிடித்து விடவே, இருவரின் கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. பாலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி வரும் "ஷமிதாப்', இந்த வாரத்தில் வெளியாகவுள்ளது. அடுத்தடுத்த படமாக "அனேகன்' ரிலீஸூக்காகக் காத்திருக்கிறது. அதேபோல் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், காஜல் அகர்வால் நடிக்கும் படமான "மாரி' படத்தின் படப்பிடிப்புகளும் முடியும் நிலையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்த படமாக பிரபுசாலமன் படம் இருக்கும். படத்திற்கு இசை பிரபுசாலமனின் ஆஸ்தான இசையமைப்பாளர் டி.இமான். ஹீரோயின், மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்கள் இன்னும் முடிவாகவில்லை.
தெலுங்கில் ஒரே நேரத்தில் "கிக் 2', "பண்டக சேஸ்கோ', "சிம்லா மிர்ச்சி' என மூன்று படங்களில் நடித்து வருகிறார் ராகுல் ப்ரீத் சிங். மூன்று படங்களுக்குமான கிளைமாக்ஸ் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன. சிம்லா, மும்பை, ராஜ்முந்திரி என மூன்று இடங்களிலும் மாறி மாறி படப்பிடிப்பு நடப்பதால், ஒவ்வொரு இடத்துக்கும் மாறி மாறி பயணித்துக் கொண்டிருக்கிறார். ""ஒரே நேரத்தில் வெவ்வேறு விதமான கிளைமாக்ஸ் காட்சிகளில் நடிப்பது புது அனுபவமாக உள்ளது. வெவ்வேறு சூழல்களில் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதால், உடல் நிலையை அதற்கேற்றவாறு காத்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. "கிக் 2' படத்துக்கான காட்சிகள் பாலைவனத்தில் படமாகி வருகின்றன. பாலைவனத்தில் சூறாவளி காற்று சுழன்று அடித்ததைப் பார்த்து பயந்து விட்டேன். நான் நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகும் படமிது. ஏற்கெனவே ஹிட்டான கிக் படத்தின் இரண்டாம் பாகம் என்பதால், நடிப்பில் கூடுதல் கவனம் எடுத்துக் கொண்டுள்ளேன். இப்படம் வெளியானால் தெலுங்கு சினிமாவில் நம்பர் 1 இடம் எனக்கு கிடைத்து விடும்'' என நம்பிக்கை வார்த்தைகளில் கவனம் ஈர்க்கிறார் ராகுல் ப்ரீத் சிங்.
கன்னட சினிமா உலகில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் சிவராஜ்குமார் நடிப்பில் உருவாகி வரும் படம் "வஜ்ரகயா'. இப்படத்தின் படப்பிடிப்புகள் பிரம்மாண்டமாக நடந்து வருகின்றன. கன்னடத்தில் பெரும் எதிர்பார்ப்புக்கு உரிய படமாக உருவாகி வரும் இப்படத்தில் தனுஷ் ஒரு பாடல் பாடியுள்ளார். இப்படத்தின் மூலம் தமிழ், இந்தி என இந்தியா முழுக்க பிரபலம் ஆன தனுஷ் இப்போது கன்னடத்திலும் கால் பதித்துள்ளார். மேலும் படத்தில் வரும் ஒரு பாடல் காட்சியில் சிவகார்த்திகேயன், மலையாள முன்னனி நடிகர் திலீப் குமார், தெலுங்கு டாப் ஹீரோ ரவி தேஜா என இவர்கள் மூவரும் சிறப்பு தோற்றத்தில் நடனமாட உள்ளனர். படத்தை ஹர்ஷா இயக்கி வருகிறார். இதுதவிர, படத்தில் மேலும் பல மொழி நடிகர்கள் வந்து சர்ப்ரைஸ் கொடுக்க உள்ளதாகவும் இயக்குநர் தெரிவித்துள்ளார். ஹிந்தி, மராத்தி, போஜ்பூரி,ஒடிஸô உள்ளிட்ட மொழிகளில் சிறந்து விளங்கும் நடிகர்களுக்கும் இந்தப் படத்துக்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த பாடல் காட்சிக்காக கோடிக்கணக்கான செலவில் பிரம்மாண்ட ஆஞ்சநேயர் சிலை உருவாக்கப்பட உள்ளது. அந்த சிலையின் முன்னிலையில் இந்தப் பாடல் காட்சி படமாக்கப்பட உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...