திரைக்கதிர்
"சீனிகம்', "பா' படங்களைத் தொடர்ந்து பால்கியின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் "ஷமிதாப்.' அமிதாப், இளையராஜா,


"சீனிகம்', "பா' படங்களைத் தொடர்ந்து பால்கியின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் "ஷமிதாப்.' அமிதாப், இளையராஜா, பி.சி.ஸ்ரீராம், பால்கி என மூன்றாவது முறையாகவும் இணைந்திருக்கிற இக்கூட்டணியால் படத்துக்கு இந்திய ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. "ரஞ்சானா' பட ஹிட்டுக்குப் பின் தனுஷின் பாலிவுட் படம் என்பதாலும், கமலின் இளைய மகள் அக்ஷராவின் அறிமுகம் என்பதாலும் கூடுதல் எதிர்பார்ப்பு. தனி ஓர் ஆளாக எதையும் சாதிக்க முடியாது. எல்லாரும் சேர்ந்துதான் எதையும் சாதிக்க முடியும் என்பது படத்தின் ஒன் லைன். அமிதாப்புக்கும் தனுஷுக்கும் இடையில் வெடித்து கிளம்புகிற ஈகோ, யுத்தம், போராட்டங்கள்தான் திரைக்கதை. இருவருக்குமிடையே சமாதானம் செய்து வைக்கிற கதாபாத்திரம் அக்ஷராவுக்கு. அமிதாப் பச்சனின் சினிமா பயணத்தில் இது ஒரு மைல் கல் படமாக அமையும் என்கிறார்கள். அதற்காக இதுவரை எந்தப் படத்திலும் இல்லாத வகையில், "எ ட்ரிபியூட்டு டூ அமிதாப்' என டைட்டில் கார்டு போட்டுத்தான் படம் ஆரம்பமாகவுள்ளது. ஹிந்தியில் மட்டுமே வெளியாகவுள்ள இப்படம், வேறு எந்த மொழியிலும் டப்பிங் செய்ய முடியாத அளவுக்கு கதை அமையப் பெற்றுள்ளதாம். மற்ற மொழிகளில் ரீமேக் மட்டுமே சாத்தியம் என்கிறார்கள். பிப்ரவரி 6-ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாகிறது.
தமிழ், தெலுங்கு சினிமாக்களில் தொடர் வாய்ப்புகள் பெற்று வந்த அஞ்சலிக்கு, இப்போது வரும் வாய்ப்புகள் குறைவுதான். இதனால் தனது வழக்கமான குடும்ப கதாபாத்திரங்களிலிருந்து விலகி, கவர்ச்சி காட்டத் தொடங்கினார். தமிழில் இது ஓரளவுக்கு அவருக்கு கைக் கொடுத்தது. "கலகலப்பு' படத்தில் கவர்ச்சியாக நடித்த அவர், தற்போது நடித்து வரும் "அப்பா டக்கர்' படத்துக்காகவும் அது போன்ற கதாபாத்திரத்திலேயே நடித்து வருகிறார். ஆனால் தெலுங்கில் அவரது இமேஜ் இன்னமும் குடும்பப்பாங்காகவே இருப்பதால் அது போன்ற கதாபாத்திரங்களே அவரைத் தேடி வருகின்றன. தன்னுடன் வந்த சக ஹீரோயின்களின் சம்பளமும் தற்போது கோடிகளைத் தாண்டி விட்டது என்பதை உணர்ந்த அஞ்சலி, முதலில் தெலுங்கில் தனக்குள்ள இமேஜை மாற்ற வேண்டும் என்ற முடிவில் இறங்கியுள்ளார். இதற்காக குத்துப் பாடல்களுக்கு ஆட ஆரம்பித்துள்ளார். அப்படியே படத்தின் பட்ஜெட்டுக்கு ஏற்ப தனது சம்பளத்தையும் உயர்த்தி கேட்டு வருகிறார். ராம் சரண் நடிக்கும் புதிய படத்துக்காக வந்த குத்துப் பாடலுக்கு ரூ.1 கோடி கேட்டுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியான இயக்குநர் ஸ்ரீனு வைத்தலா தயாரிப்பாளருடன் கலந்து பேசி சம்பளம் பற்றி முடிவெடுக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சினிமா வாய்ப்புகளைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள மாதம் ஒரு முறை விதவிதமான போஸ்களில் போட்டோ ஷூட் எடுத்து அதை இணையதள பக்கங்களில் வெளியிடுவது ஹீரோயின்களின் வழக்கம். புது புது தோற்றங்களில் வெளிப்படும் இப்புகைப்படங்கள் இயக்குநர், தயாரிப்பாளர்களின் பார்வைக்குச் செல்வதுடன், புதுப் பட வாய்ப்புகளைப் பெற்றுத் தருகின்றன. இந்த சிறப்பு புகைப்படங்களை எடுக்க ஒவ்வொரு ஹீரோயினும் தனக்கென ஒரு புகைப்படக் கலைஞரை அருகிலேயே வைத்துக் கொள்கின்றனர். மாதச் சம்பளத்தில் பணி புரியும் அந்த புகைப்பட கலைஞர், நடிகையின் ஒவ்வொரு அசைவையும் படமாக்கி கொடுப்பார். இதிலிருந்து மாறுபட்டிருக்கிறார் பாலிவுட் நடிகை கேத்ரீனா கைஃப். சமீபத்தில் பிரபல அழகு பொருள் ஒன்றுக்காக அவர் விதவிதமான போஸ் அளித்தார். அவற்றைப் படம் பிடித்தது பார்வையற்ற மாற்றுத் திறனாளி பவேஷ் பட்டேல். இவர் கேத்ரீனாவை போட்டோ ஆல்பம் எடுத்த காட்சி வீடியோவாக இணைய தளங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பார்வையில்லாமல் எப்படி புகைப்படம் எடுக்க முடிந்தது என்ற கேள்விக்கு... ""ஒவ்வொரு புகைப்படம் எடுக்கும் போதும் அவரது வாசனையை அறிவில் உணர்ந்து கொண்டு எடுத்தேன்'' என பதிலளித்திருக்கிறார் பட்டேல்.
மலையாள நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான், "வாயை மூடி பேசவும்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தற்போது மணிரத்னம் இயக்கி வரும் படத்தில் கதாநாயகனாக துல்கர் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து மம்முட்டியின் அண்ணனும், நடிகருமான இப்ராஹிம் மகன் மக்பூல் சல்மான் "நச்' என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். மலையாள சினிமாவின் பிரபல தயாரிப்பு நிறுவனமான மரிக்கார் பிலிம்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது. மகேஷ், சஞ்சீவ், மதுரிமா, பர்வீன் பிரேம், ரியாஸ்கான், பூனம் ஜவார், ஏதன் உள்ளிட்ட மலையாள நட்சத்திரங்கள் பலர் நடிக்கின்றனர். மன்சூர் அகமது, கௌரி லெட்சுமி இணைந்து இசையமைக்கின்றனர். ஹக்கீம் மரிக்கார் இப்படத்தை எழுதி இயக்குகிறார். 12 முக்கிய கேரக்டர்கள் கொண்ட திரைக்கதை, திகில் கதையாக உருவாகிறது. இந்த 12 கேரக்டர்களையும் ஒருங்கிணைக்க கூடிய கதாபாத்திரத்தில் மக்பூல் சல்மான் நடிக்கிறார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், நடிகை ஒருவரும் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தமிழ்நாடு, கேரளா, மலேசியாவில் படப்பிடிப்பு நடக்கவுள்ளது. மே மாத வெளியிடாக திரைக்கு வருகிறது.
அசோகமித்திரன் எழுதிய "தண்ணீர்' நாவல் அதே பெயரில் படமாகிறது. இயக்குநர் வசந்த் தனது பெயரை வசந்த் சாய் என மாற்றிக் கொண்டு இப்படத்தை இயக்குகிறார். நெதர்லாந்தை சேர்ந்த ரோல்ஃப் ஒளிப்பதிவு செய்கிறார். கர்நாட இசைப் பாடகி சுதா ரகுநாதன் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். பாலிவுட் நடிகர் குல்ஷன் குரோவர், கன்னட நடிகை சாந்தினி சாஷா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். ""அசோகமித்திரனின் எழுத்துகளுக்கு நான் தீவிர ரசிகன். அதீத காதலன். அவரது நாவல்களை படிக்கும் போதெல்லாம் ஒவ்வொன்றிலும் சினிமாவுக்கான விதை இருக்கும். வெகு நாள்களாகவே அவரின் எதாவது ஒரு நாவலை படமாக்க வேண்டும் என எண்ணியிருந்தேன். அதில் முதல் தேர்வாக "தண்ணீர்' நாவலை படமாக்குகிறேன். தமிழ் சினிமாவின் மிக அழுத்தமான பதிவாக இப்படம் இருக்கும்'' என்கிறார் இயக்குநர் வசந்த் சாய்.
மலையாளத்தில் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் வெளியான படம் "ஹவ் ஓல்ட் ஆர் யூ.' மஞ்சு வாரியர் நடித்த இப்படம் மலையாள சினிமாவில் தவிர்க்க முடியாத படமாக அமைந்து விட்டது. கதையின் அழுத்தம், மஞ்சுவின் நடிப்பு என பல விதங்களிலும் மாறுபட்டிருந்த இப்படம், எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி வசூலில் சாதனை புரிந்தது. இதன் ரீமேக் உரிமையை நடிகை ஜோதிகா வாங்கியுள்ளார். இப்போது தமிழில் இப்படம் ரீமேக் ஆகிறது. திருமணம், குழந்தை வளர்ப்பு என சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த ஜோதிகா, பல வருடங்களுக்குப் பின் இப்படத்தில் நடிக்கிறார். இன்னும் பெயர் வைக்கப்படாத இப்படத்தில் நடிகை அபிராமி முக்கிய வேடம் ஏற்று நடிக்கிறார். மலையாளத்தில் இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூஸ் தமிழிலும் இப்படத்தை இயக்குகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...