/

திரைக்கதிர்

சைக்கிள் பயண விரும்பி ஆர்யா. எங்கு சென்றாலும் அங்கே சைக்கிளையும் கொண்டு சென்று விடுவது அவரது

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:01 am

ஜி. அசோக்

சைக்கிள் பயண விரும்பி ஆர்யா. எங்கு சென்றாலும் அங்கே சைக்கிளையும் கொண்டு சென்று விடுவது அவரது வழக்கம். இதற்காக தனது காருக்குப் பின்னால் பிரத்யேகமாக அமைக்கப்பட்ட ஸ்டாண்ட் பொருத்தி எங்கு சென்றாலும் சைக்கிளை எடுத்து செல்கிறார். படப்பிடிப்புக்காக ஏதாவது சிறு நகரம் ஒன்றில் தங்கியிருந்தாலும் அங்கிருந்து படப்பிடிப்பு தளத்துக்கு சைக்கிளிலேயே பயணப்பட்டு விடுவார். சைக்கிளுக்கு பின்னால் அவரது கார் ஆர்யாவை பின் தொடர்ந்து செல்லும். படப்பிடிப்பு இல்லா நாள்களில் சென்னை, அண்ணா நகரில் இருந்து அதிகாலையிலேயே சைக்கிளை எடுத்துக் கொண்டு மகாலிங்கபுரத்தில் உள்ள "ஜெயம்' ரவியின் வீடு, சாலிகிராமத்தில் உள்ள விஷாலின் வீடு, தியாகராயர் நகரில் உள்ள ஜீவா, கார்த்தி ஆகியோரது வீடுகளுக்குச் செல்வார். இந்த நால்வரில் யாராவது ஒருவர் "சும்மா' இருந்தாலும், அன்றைக்கு அவர்தான் ஆர்யாவுக்கு தோஸ்த். சில நேரங்களில் இந்த ஐவரையுமே தனித்தனி சைக்கிள்களில் பார்க்கலாம். தியாகராய நகரிலிருந்து பாண்டிச்சேரிக்குச் சென்று வந்தது இவர்களின் சமீபத்திய சைக்கிள் பயண சாதனை.   

கதையின் தன்மை உணர்ந்து படங்களுக்குத் தலைப்புகள் வைக்கப்பட்ட காலம் போய்,  கதைக்கும் தலைப்புக்கும் துளி கூட தொடர்பில்லாத வகையில் தற்போது பெயர்கள் வைக்கப்படுகின்றன. ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும், எளிதில் மக்களை சென்றடையும் விதத்திலும் இவ்வாறு தலைப்புகள் இடப்படுவதாக கூறப்படுகின்றன. மறைமுகமாக பொருள் தரும் "ர', "ஈ', "ஊ', "சே' உள்ளிட்ட ஓர் எழுத்தை தலைப்பாக வைப்பது சமீபமாக தொடர்கிறது. ஒர் எழுத்தில் தலைப்பு வைக்கப்படும் போது, அந்த எழுத்துக்கு என்ன அர்த்தம் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் விரும்புகின்றனர். "பீட்சா', "ஜிகர்தண்டா', "வடகறி' என உணவு வகைகளின் பெயர்கள் தலைப்பாகி வருவதும் இந்த விதத்தில்தான். தற்போது இந்த வரிசையில் இடம் பிடிக்கிறது "இஞ்சி முறப்பா.' அண்ணன் - தங்கை பாசத்தை மையமாக கொண்டு உருவாகும் இப்படத்தில், நீண்ட இடைவெளிக்குப் பின் இசையமைக்கிறார் மணிசர்மா.  ஸ்ரீபாலாஜி, சோனி சிறிஸ்டா, ஸ்ரீ, கிருஷ்ணராஜ் உள்ளிட்ட புதுமுகங்கள் நடிக்கின்றனர். எஸ்.ஏ.சந்திரசேகரனின் உதவியாளர் எஸ்.சகா இப்படத்தை எழுதி இயக்குகிறார். சென்னை, பாண்டிச்சேரி, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஜனவரி மாத இறுதியில் படம் திரைக்கு வருகிறது.

தமிழின் சிறந்ததோர் அடையாளமாக விளங்கும் கல்கியின் "பொன்னியின் செல்வன்' நாவலை திரைப்படமாக எடுக்க பல தரப்பிலும் விவாதங்கள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இயக்குநர் மணிரத்னம் "பொன்னியின் செல்வன்' நாவலைத் தழுவி திரைக்கதை அமைத்து வந்தார். இப்படத்தில் விஜய், விக்ரம் இருவரும் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து கமல் "பொன்னியின் செல்வன்' நாவலுக்கு திரைக்கதை வடிவம் கொடுத்து வருவதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் 2 டி அனிமேஷன் படமாக தமிழில் உருவாக இருக்கிறது "பொன்னியின் செல்வன்.' ராஜராஜ சோழன் அரியணை ஏறிய வரலாற்றைக் கூறும் காவியமான "பொன்னியின் செல்வன்', தமிழர்களின் பண்டைய சரித்திர நிகழ்வுகளை உள்ளடக்கிய அடையாளமாக திகழ்ந்து வருகிறது. அந்த வரலாறு இளம் தலைமுறையினருக்கு சென்று சேரும் வகையில் இப்படம் உருவாகவுள்ளது. அனிமேஷன் துறையில் அனுபவம் பெற்ற கார்த்திகேயன் இப்படத்தின் இயக்குநர் பொறுப்பை ஏற்கிறார். பைவ் எலிமென்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் சரவணராஜா இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் இசை, வசனம் போன்றவற்றிக்கு மட்டுமில்லாமல் பின்னணி குரல் தருவதற்கும் பிரபலமான தமிழ்த் திரை நட்சத்திரங்கள் பணியாற்ற உள்ளனர்.

உலகின் அதிகாரமிக்க தலைவர்களின் பட்டியலைக் கணக்கிடுவது போல், சர்வதேச இதழ் ஒன்று இந்தியாவில் டாப் இடத்திலிருக்கும் 100 பிரபலங்களைப் பட்டியலிட்டு இருக்கிறது. இதில் முதலிடத்தை பாலிவுட் நடிகர் சல்மான்கான் பெற்றிருக்கிறார். அவரைத் தொடர்ந்து அமிதாப்பச்சன், ஷாரூக்கான், எம்.எஸ்.டோனி இடம் பிடித்துள்ளனர். தென்னிந்திய நடிகர்களில் ரஜினிகாந்த், அஜித், விஜய், பவன் கல்யாண், பிரபுதேவா, அல்லு அர்ஜூன் ஆகியோரை மகேஷ்பாபு முந்தி சென்று முதலிடம் பிடித்திருக்கிறார். 100 பேர் வரிசையில் 30-வது இடத்தை அவர் பிடித்துள்ளார். ரஜினி உள்பட மற்ற நடிகர்கள் அதற்கு கீழேதான் உள்ளனர். இதில் இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால் மகேஷ்பாபு நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த "ஆகடு' படம் பாக்ஸ் ஆபீஸ் வசூலை எட்டவில்லை. சுமாரான படம் என்றே விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனாலும் மகேஷ்பாபு தென்னிந்திய பிரபலங்களின் முதன்மையானவராக இடம் பிடித்துள்ளார். இது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பணம், புகழ், ஹிட் இதனைத் தாண்டி மகேஷ்பாபுவுக்கு இருக்கும் மனித நேயமே அவரை பட்டியலில் முன்னணி இடத்துக்கு கொண்டு வந்திருப்பதாக பட்டியலிட்ட அந்த இதழ் தெரிவித்துள்ளது.

"7-ஆம் அறிவு' படத்துக்குப் பின் தெலுங்கு சினிமாக்களில் கவனம் செலுத்தி வந்த ஸ்ருதி, நீண்ட இடைவெளிக்குப் பின் விஷாலின் ஜோடியாக "பூஜை' படத்தில் நடித்தார். தற்போது மீண்டும் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார் ஸ்ருதி. மகேஷ்பாபுவின் "ஆகடு' படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். 4 நிமிடங்கள் மட்டுமே இடம் பெற்ற இப்பாடலில் ஆடுவதற்காக ஸ்ருதிக்கு ரூ.40 லட்சம் தரப்பட்டதாக பேசப்பட்டது. ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்ட ஸ்ருதி தற்போது புதிய படமொன்றில் மகேஷ்பாபுவின் ஜோடியாக நடிக்கிறார். கொரட்டாலா சிவா இயக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு புனேவில் நடந்தது. ஸ்ருதி நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்நிலையில் அப்படத்திலிருந்து ஸ்ருதி விலகி விட்டதாக பேச்சு எழுந்தது. இது பற்றி அறிந்த ஸ்ருதி தனது மேலாளர் மூலம் அச்செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். மகேஷ்பாபு படத்திலிருந்து ஸ்ருதி விலகவில்லை. அடுத்தகட்ட படப்பிடிப்பில் பங்கேற்க ஆர்வமாக இருக்கிறார் என ஸ்ருதி தரப்பில் கூறப்பட்டுள்ளது. சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் தவிர, தற்போது வரை தமிழ்ப் படங்கள் எதுவும் ஸ்ருதியின் கையில் இல்லை. இதனால் அவர் தெலுங்கு சினிமாக்களில் கவனம் செலுத்த முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

"அஞ்சான்' பட தோல்வியை அடுத்து வெங்கட்பிரபு இயக்கத்தில் "மாஸ்' படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. நயன்தாரா ஹீரோயின். மற்றொரு ஹீரோயினாக எமி ஜாக்ஸன் நடிக்கவிருந்தார். நயன்தாரா - எமி ஜாக்ஸன் இடையே நிகழ்ந்து வரும் பனிப்போரால் இப்படத்தில் எமி நடிப்பதை நயன்தாரா விரும்பவில்லை. இதையடுத்து நயன்தாராவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு எமியின் காட்சிகள் குறைக்கப்பட்டன. இது பிடிக்காத எமி படத்திலிருந்து விலகினார். அவருக்குப் பதிலாக தற்போது ப்ரணிதா ஒப்பந்தம் ஆகியுள்ளார். இவர் "சகுனி' படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்தவர். சூர்யா - ப்ரணிதா சம்பந்தப்பட்ட காட்சிகளைப் பல்கேரியாவில் படமாக்க நினைத்து படக்குழு புறப்பட்டது. ஆனால் அங்கு தொடர்ந்து மழை பெய்து வருவதால் படப்பிடிப்பை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது. காத்திருந்த படக்குழு இந்தியா திரும்பியது. இந்நிலையில் மீண்டும் இந்த வாரம் படக்குழு பல்கேரியா செல்லவுள்ளது. இப்படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்கிறார். ஏற்கெனவே "பேரழகன்', "7-ஆம் அறிவு', "அஞ்சான்' ஆகிய படங்களில் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.