திரைக்கதிர்
"முத்து' படத்தின் பாட்டு அமைப்புக்காக படக்குழு கேரளத்துக்குச் சென்றிருந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் இரவெல்லாம் இசை அமைக்க,


"முத்து' படத்தின் பாட்டு அமைப்புக்காக படக்குழு கேரளத்துக்குச் சென்றிருந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் இரவெல்லாம் இசை அமைக்க, வைரமுத்துவும் ரஜினியும் இன்னொரு அறையில்... தத்துவம், அரசியல், வாழ்வியல், நிலையாமை என உரையாடல் நீண்டு கொண்டிருக்க, வைரமுத்து ரஜினியிடம் ஒரு கதை சொன்னார். ""மாமன்னன் அலெக்ஸாண்டர் தன் மரணத்தை உணர்ந்து கொண்டான். படைத் தலைவனை அழைத்து, நாளை காலை சூரிய உதயத்தில் நான் இருக்க மாட்டேன். என் உடலை தூக்கிச் செல்லும் போது, என் கைகள் இரண்டும் சவப்பெட்டிக்கு வெளியே இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்'' என்றானாம். படைத்தலைவன் பதறி போய், ""ஏன் மன்னா? ஏன் அப்படி?'' அதற்கு அலெக்ஸாண்டர்... ""இந்த உலகம் முழுவதையும் வென்று, இனி வெல்வதற்கு நாடு இல்லையே என கவலைப்பட்ட அலெக்ஸாண்டர் கூட போகும் போது வெறும் கையோடு போனான் என்பதை இந்த உலகம் தெரிந்து கொள்ளட்டும்...'' வைரமுத்து சொல்லி முடிக்க, ""அற்புதம்... இதை அப்படியே பாட்டுக்குள் கொண்டு வர முடியுமா? என கேட்ட ரஜினிக்கு ""மண்ணின் மீது மனிதனுக்கு ஆசை.... மனிதன் மீது மண்ணுக்கு ஆசை... மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது... இதை மனம்தான் உணர மறுக்கிறது.'' என அலெக்ஸாண்டரின் தத்துவத்தை பாடலாக தந்தார் கவிஞர்.
இல்லற வாழ்க்கையில் சலிப்பு... கை நழுவிப் போன காதல்... என சோதனைகளை கடந்தும் இந்தியாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருகிறார் பிரபுதேவா. இன்றைய தேதியில் அதிகச் சம்பளம் வாங்கும் இயக்குநர்களின் பட்டியலிலும் பிரபுதேவாவுக்கு இடம் உண்டு. படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் குழந்தைகளை பார்ப்பதற்காக மட்டுமே, சென்னை வந்து செல்லும் பிரபுதேவாவின் மற்ற பயணங்கள் இறை வழிபாட்டை தேடி அடைவதாகவே உள்ளன. ""என் படங்களின் வெற்றிக்கு இறை வழிபாடு முக்கிய காரணம்'' என ஒரு முறை கூறியிருந்தார். தற்போது முன்பைக் காட்டிலும் ஆன்மிகத்தில் ஆர்வமாக உள்ளார். சமீபமாக கோயில் கோயிலாக சென்று வரும் பிரபுதேவா, தற்போது இயக்கி முடித்துள்ள "ஆக்ஷன் ஜாக்ஸன்' பட வெற்றிக்காக முழுமையான இறை வழிபாட்டில் இறங்கியுள்ளார். கடந்த வாரம் கேரளம் சென்ற பிரபுதேவா குருவாயூர் கிருஷ்ணன் கோயிலுக்கு சென்று வழிபட்டார். அங்கிருந்து திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோயிலுக்குச் சென்று தியானத்தில் அமர்ந்திருந்தார். தரிசனம் முடிந்து வெளியே வந்த பிரபுதேவா...""கோயில்களுக்குள் நுழைந்ததுமே உடலுக்குள் ஏதோ புது உணர்வு பிறக்கிறது. வேறு உலகம் போல் இருக்கிறது. கடவுள் முன் எல்லோரும் சாதாரண மனிதர்கள்தான். புகழ், பணம், பதவி இதுவெல்லாம் ஒன்றுமே கிடையாது'' என மனம் திறந்திருக்கிறார்.
விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளிவந்த "பீட்சா' எதிர்பாராத வெற்றியைப் பெற, அடுத்தடுத்து வெளிவந்த படங்கள் யாவும் திகில், பேய் உள்ளிட்ட கதையம்சங்களையே முன் நிறுத்தின. கடந்த சில மாதங்களில் மட்டும் இந்த வகையான 15-க்கும் அதிகமான படங்கள் வெளியாகி உள்ளன. இந்த வரிசையில் இன்னொரு படம் "சவரிக்காடு.' குறிப்பிட்ட வீடு மற்றும் பங்களாவை மையப்படுத்தியே திகில் கதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இது அடர்ந்த வனப்பகுதியை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள திகில் கதையாக உருவாகி வருகிறது. கொடைக்கானலின் குறிப்பிட்ட வனப்பகுதிகள் சவரிக்காடு என்றழைக்கப்படுகிறது. அனுமாஷ்ய சக்திகள் நிறைந்ததாக கருதப்படும் அந்த வனப்பகுதியை மையமாக கொண்டு உருவாகியுள்ளது இப்படம். கதைக்காக கற்பனைகள் சேர்க்கப்பட்டுள்ளன என்றாலும், ஒரு காலத்தில் நிலவி வந்த நம்பிக்கைகள்தாம் இதன் திரைக்கதை. சவரிக்காட்டின் ரகசியங்களை தெரிந்துக் கொண்ட யாரும் அந்த காட்டை விட்டு உயிரோடு வெளியே போக முடியாது என்ற நம்பிக்கையை உதாசீனப்படுத்தி உள்ளே செல்லும் சிலருக்கு நேர்ந்த சம்பவங்கள்தான் கதை. ரவிந்திரன், ராஜபாண்டி, கிருஷ்ணகுமார், ஸ்வாதி உள்ளிட்ட புதுமுகங்கள் நடிக்கின்றனர். சூரி முக்கிய வேடம் ஏற்கிறார். எழுதி, இயக்குகிறார் எம்.என்.கிருஷ்ணகுமார்.
ராணாவுடன் காதல் முறிந்த நிலையில், "காவியத்தலைவன்' படத் தயாரிப்பாளர் வருண் மணியனுடன் த்ரிஷா நிச்சயதார்த்தம் செய்து கொண்ட படங்கள் சமீபத்தில் வெளியாகின. இருவரும் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியானதுடன், வருண் மணியன் த்ரிஷாவுக்கு அணிவித்த நிச்சயதார்த்த மோதிரமும் அந்த புகைப்படங்களில் பளீச்சிட்டது. இதை உறுதிபடுத்தும் விதமாக தனுஷ் நடிக்கும் படம், ஜெய் நடிக்கும் "புகழ்' ஆகிய படங்களிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில் த்ரிஷா நடித்துள்ள "பூலோகம்', "என்னை அறிந்தால்' ஆகிய படங்கள் திரைக்கு வர வேண்டி இருப்பதால், நிச்சயதார்த்த தகவலை அவர் மறைப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் வருண் மணியன் பெயரைக் குறிப்பிட்டு முதல் முறையாக டுவிட்டரில் தனது கருத்தை எழுதியிருக்கிறார் த்ரிஷா. ""காவியத்தலைவன்' அனைவரும் பார்க்க வேண்டிய படம். இந்த படத்தை வழங்கியதற்காக வருண் மணியனுக்கு நன்றி'' என குறிப்பிட்டிருக்கிறார். படத்தின் இயக்குநர் வசந்தபாலனை குறிப்பிடாமல் வருண் மணியனை பாராட்டி இருப்பது த்ரிஷா - வருண் இடையேயான உறவை காட்டுகிறது என்கிறது கோலிவுட் வட்டாரம்.
விஜய், விக்ரம், சூர்யா, கார்த்தி, விஷால் ஆகியோரது படங்களுக்கு தமிழைத் தவிர மற்ற மொழிகளிலும் சில சமயங்களில் தமிழை விட மற்ற மொழிகளில் வரும் வசூல் அந்தந்த நடிகர்களுக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தும். ஆனால், தெலுங்கில் மட்டும் நேரடி படமாகவே வெளியிட்டு வசூல் பார்க்கிறார்கள். இதைப் பார்த்த சில நடிகர்கள் தெலுங்கில் நல்ல வரவேற்பு இருப்பதாக நினைத்து, தாக்கு பிடிக்க முடியாமல் திரும்பி வந்திருக்கின்றனர். ஆர்யா, ஸ்ரீகாந்த், ஷாம் உள்ளிட்ட சிலர் இதற்கு உதாரணம். சூர்யா, கார்த்தி, விஷால் ஆகியோரது படங்களுக்கு டோலிவுட்டில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த கணக்கில் பெரும் வருமானம் பார்த்த மூவரும் தெலுங்குப் படங்களில் நேரடியாக களம் இறங்குகின்றனர். முதல் பிரவேசமாக கார்த்தி நாகார்ஜூனாவுடன் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கிறார். இதையடுத்து சூர்யாவும் தெலுங்கில் களம் இறங்குகிறார். முதல் படத்திலேயே நல்ல அடையாளத்தைப் பெற்று விட வேண்டும் என நினைக்கும் சூர்யா, இதற்கான திட்டங்களை வகுத்து வருகிறார். இதற்காக டோலிவுட்டின் பிரபல இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கும் படத்தின் மூலம் அறிமுகமாக ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. விஷால் தற்போது நடிக்கும் "ஆம்பள' படத்தின் தெலுங்கு விநியோக உரிமையைப் பெற்று நிலைமையை கண்காணிக்க உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...