ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: பாசகம் என்றொரு பித்தம்..!
முகத்தில் பருக்களால் ஏற்பட்ட தழும்புகள் மறைய வேண்டும். கரும்புள்ளிகள் அகல வேண்டும். பாத வெடிப்பு - கைகளில் ஒன்றிரண்டு வெண்புள்ளிகள்


எனக்கு வயது 45. முகத்தில் பருக்களால் ஏற்பட்ட தழும்புகள் மறைய வேண்டும். கரும்புள்ளிகள் அகல வேண்டும். பாத வெடிப்பு - கைகளில் ஒன்றிரண்டு வெண்புள்ளிகள் - மூட்டு வீக்கம் - சிறுநீர் கழிப்பது குறைவு - காலை 9 முதல் மதியம் 2 மணி வரை ஒரே மயக்கம் - ரத்த அழுத்தம் குறைவு போன்ற உபாதைகள். இவை தீருமா? குணமாகுமா?
ஒரு வாசகி, திருப்பூர்.
இவையனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புடையதா? அல்லது தனித்தனியாக ஏற்பட்டதா? என்று ஒரு குழப்பம் ஏற்படலாம். உணவுப் பாதையின் மத்தியப் பகுதியில் பாசகம் என்றொரு பித்தமிருக்கிறது. இது உணவைச் சீரணிக்கச் செய்கிறது. உணவுச் சத்திலிருந்து சத்தையும், மலத்தையும் பிரிக்கிறது. மற்ற இடங்களிலுள்ள பித்தங்களுக்கு தன்னிருக்கையிலிருந்து கொண்டே ஊட்டமளிக்கிறது. இந்தப் பித்தத்திற்கு தவறான உணவு வகைகளால் கேடு ஏற்பட்டால், அதுவே நீங்கள் குறிப்பிடும் பல உபாதைகளுக்குக் காரணமாகலாம். அத்தனை மதிப்பு வாய்ந்த இந்த பாசக பித்தத்தை இன்று பெருமளவு மதித்து நடக்காததால்தான் ஆஸ்பத்திரிகளில் கூட்டத்துக்குப் பஞ்சமில்லாமலிருக்கிறது.
உங்களுக்கு ஏற்பட்டுள்ள உபாதைகளைத் தனித்தனியாகவும் பார்த்து வைத்தியம் கூறலாம். அந்த வகையில் தேங்காய்ப் பாலை முகத்தில் பூசி, சிறிது நேரம் ஊறிய பிறகு கழுவிவிடுவதால், நெய்ப்பு எனும் எண்ணெய்ப் பசையைத் தோலுக்கு ஏற்படுத்தி முகப்பருக்களால் ஏற்பட்ட தழும்புகளை அது மறையச் செய்யும். குங்குமப் பூவை சந்தனத்துடன் பன்னீர் விட்டரைத்துக் கரும்புள்ளிகள் மீது பூசி வர, அவை மறையும்.
துணி துவைக்கும் கல்லில் பாதத்தை தண்ணீர்விட்டுத் தேய்த்து அலம்பி, துணியால் துடைத்துக் கொள்ளவும். ஆறு பங்கு தேங்காய் எண்ணெய்யைச் சுட வைத்து அதில் ஒரு பங்கு தேன் மெழுகைப் போட இளகிக் களிம்பு போலாகும். இதனைப் பாத வெடிப்பில் தடவ வலி, வறட்சி, பிளவு குறையும்.
கார்ப்போகரிசியைப் பொடித்து, சிட்டிகை எடுத்து அரை கிளாஸ் மோருடன் கலந்து பருகி வர, வெண்புள்ளி உபாதை குறையும்.
சதகுப்பையை புளித்த மோருடன் அரைத்துச் சூடாக்கி முட்டியில் பற்று இட, முட்டி வீக்கம் குணமடையும். காய்ந்த திராட்சையை 15 -
30 கிராம் எடுத்துச் சுத்தமான தண்ணீர் அரை கிளாஸ் (150 மி.லி.) சேர்த்து ஊற வைத்துக் கசக்கிப் பிழிந்து எடுத்த சாறுடன் பசுவின் பால் 300 மி.லி. சேர்த்துச் சாப்பிட, சிறுநீர் கழிப்பது எளிதாகும். கொத்துமல்லி, சந்தனத்தூள், நெல்லி வற்றல் இம்மூன்றையும் வெந்நீரில் டீ போல் தயாரித்துச் சாப்பிட மயக்கம் குணமாகி, ரத்த அழுத்தம் சாதாரண நிலைக்கு வரும்.
மேற்குறிப்பிட்ட சிகிச்சைகள் நன்றாக வேலை செய்ய வேண்டுமானால், முதலில் குறிப்பிட்ட பாசக பித்தத்தின் உதவி தேவைப்படும். அதற்கு முதலில் அதிலுள்ள நச்சுத் தன்மையை நீக்க வேண்டும். திரிபலா எனும் சூரண மருந்து 5 கிராம் எடுத்து 150 மி.லி. சூடான பாலுடன் காலையில் தொடர்ந்து வெறும் வயிற்றில் 3 - 7 நாட்கள் சாப்பிட, பேதியாகி கெட்ட பித்தம் குடலிருந்து வெளியேறி, சீரணிக்க உதவும் பாசக பித்தம் சுத்தமாகிவிடும். அதன் பிறகு, மேற்குறிப்பிட்ட மருந்துகளை உள்ளும்புறமும் உபயோகப்படுத்துவதே சிறந்தது.
வறண்ட பிரதேசத்தில் நீங்கள் குடியிருப்பதாலும், சூடான இடத்தில் வேலை செய்வதாலும் உடலிலுள்ள நீர் மற்றும் எண்ணெய்ப் பசை அகலாதிருக்க வாரமிருமுறை நல்லெண்ணெய்யை உடலெங்கும் தேய்த்து ஊற வைத்து பின் குளிக்கவும். உடலின் வெளிப்புற - உட்புற விஷங்களை அகற்றக் கூடிய சக்தி எண்ணெய்க் குளியலில் அடங்கியிருக்கிறது.
உடல் உபாதைகளைக் குணப்படுத்தும் முயற்சியில் நீங்கள் இறங்கியுள்ள நாட்களில் மனதைச் சார்ந்த ரஜஸ் - தமஸ் எனும் தோஷங்களின் சீற்றத்தை வளரவிடக் கூடாது. கோப - தாபங்களின்றி மன அமைதியுடன், பேச்சில் நிதானமும் சாந்தமும்,மகிழ்ச்சியுடன் நண்பர்கள் - உறவினர்களுடன் பேசிப் பழகினால், உங்கள் உபாதைகளை விரைவில் குணமடைய நிறைய வாய்ப்பிருக்கிறது. மருத்துவரின் நேரடிப் பார்வையில் வைத்தியம் செய்து கொள்வதும் மிகவும் நல்லது.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...