டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

திரைக்கதிர்

ஸ்டார் நடிகர்களை பற்றி கேலி, கிண்டலுடன் வெளிவந்து, புது மாதிரியான காமெடி பாதையை "தமிழ்ப்படம்' அமைத்தது.

News image
Updated On :3 ஜனவரி 2024, 1:11 pm

ஜி. அசோக்

அசின், காஜலைத் தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடிக்க சென்றார் இலியானா. விஜயசாந்தி, அனுஷ்கா போல் இலியானா சண்டை காட்சிகளில் நடித்ததில்லை. இந்நிலையில் "படா போஸ்டர் நிக்லா ஹீரோ' என்ற ஹிந்தி படத்தில் ஷாஹித் கபூர் ஜோடியாக நடிக்கிறார். இதில் தென்னிந்திய படங்களில் இடம் பெறுவது போல் ஆக்ரோஷமான சண்டை காட்சிகளில் இலியானா நடிக்க வேண்டி இருந்தது. இதுபற்றி அவரிடம் இயக்குநர் ராஜ்குமார் சந்தோஷி கூறியதும் நடிக்க தயங்கினார். ""ஆக்ஷன் காட்சிகள் என்றாலே பயம். என்னால் நடிக்க முடியுமா என்று தெரியவில்லை'' என்று சொல்லியிருக்கிறார். இதற்கு பின் ஷாஹித் கொடுத்த தைரியத்தால் நடித்திருக்கிறார்.  ""என்னுடைய தோல் ரொம்பவும் மென்மையானது. லேசாக உரசினாலே காயம் ஏற்படும்'' என்று ஆக்ஷன் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்கப் பார்த்தார் இலியானா. ஆனால் இயக்குநர் தரப்பில் அவரை விடுவதாக இல்லை. காட்சிப்படி ஹீரோயின் சண்டை காட்சியில் நடித்தாக வேண்டும் என கறாராக இயக்குநர் சொல்லி விட்டார். இதையடுத்து ஷாஹித் தந்த டிப்ஸ்களை ஏற்று ஒத்திகை பார்த்தார். அதன் பின் அந்த காட்சிகளை பயந்தபடியே முடித்து கொடுத்திருக்கிறார்'' என்றார் படத்தின் தயாரிப்பாளர்.

"தமிழ்ப்படம்' சி.எஸ். அமுதன் இயக்கத்தில் உருவாகி வருகிறது "ரெண்டாவது படம்'.  விமல், ரிச்சர்ட், அரவிந்த் ஆகாஷ், ரம்யா நம்பீசன், விஜயலெட்சுமி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். "'பழைய தமிழ்ப் படங்களின் பிரபலமான காட்சிகள்,

ஸ்டார் நடிகர்களை பற்றி கேலி, கிண்டலுடன் வெளிவந்து, புது மாதிரியான காமெடி பாதையை "தமிழ்ப்படம்' அமைத்தது. ரெண்டாவது படத்திலும் காமெடிதான் பிரதானம். வேறு மாதிரியான ஒரு களத்தில் திரைக்கதை அமைத்திருக்கிறேன். அதை எப்படி என்று விவரித்தால் சுவாரஸ்யம் போய் விடும். "தமிழ்ப்படம்' போன்ற வித்தியாசமான அனுபவத்தை இப்படமும் தரும். படத்துக்கு பல விதமான தலைப்புகள் கிடைத்த போதிலும், என்னுடைய இரண்டாவது படம் என்பதால் "ரெண்டாவது படம்' என்றே வைத்து விட்டேன். விஜயலெட்சுமிக்கு இதில் வில்லி வேடம். கதை சொல்லி முடித்ததுமே குறிப்பிட்ட அந்த வேடத்தை கேட்டு ஏற்றுக் கொண்டு நடிக்க முன் வந்தார். தமிழ் சினிமாவில் புது மாதிரியான பெண் வில்லியாக விஜயலெட்சுமி தோன்றுவார். காட்சிக்கு காட்சி காமெடிக்கு உத்திரவாதம் இருக்கும்'' என்கிறார் சி.எஸ்.அமுதன்.

ஒரு 500 ரூபாய் நோட்டு ஐந்து விதமான கேரக்டர்கள் கையில் கிடைக்கும் போது அதை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை மையமாக வைத்து உருவாகும் படம் "ஐநூறும் ஐந்தும்'. ஒரு 500 ரூபாய் தாள் ஐந்து கதாபாத்திரங்களிடையே செய்யும் வசீகரமான பயணமே கதைக்கரு. ஐந்து வேறுபட்ட மனிதர்களிடம் பயணிக்கும் பணம் எந்த மாதிரியான வேலைகளுக்குப் பயன்படுகிறது... அவர்களுக்கும் அந்த பணத்துக்குமான தொடர்பு என்ன? என்பதே விறுவிறுப்பான திரைக்கதை. அடியாள், சினிமா இயக்குநர், ரீசார்ஜ் கடையில் வேலை செய்யும் பெண், போதை பழக்கத்துக்கு அடிமையான பெண், புரட்சியாளர் இவர்கள்தான் அந்த ஐந்து கேரக்டர்கள். தீபக் சங்கர், லட்சுமிபிரியா, வித்யா, விஷ்வாந்த், சின்னு உள்ளிட்ட புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்தை அக்செஸிபிள் ஹாரிஸன் ஃபிலிம்ஸ் சார்பில் குறும்படங்களை இயக்கிய அனுபவங்களை கொண்டு ரகு எழுதி, இயக்குகிறார். அமெரிக்காவில் ஒரே இடத்தில் பணியாற்றி வரும் ஐந்து நண்பர்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்கள். இப்படத்துக்கு தணிக்கை குழு "ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது.

ஹோம்லி ஏஞ்சல் லட்சுமிமேனன், சட்டென மார்டன் ஊஞ்சல் ஏறிவிட்டார். "கும்கி', 'சுந்தரபாண்டியன்' படங்களில் தாவணி, பாவாடை என பாந்தமாக வந்து நின்றவர், தற்போது "ஜிகர்தண்டா' படத்துக்காக கவர்ச்சி குத்துப் பாடலுக்கு ஆடியிருக்கிறார். இதில் இட்லி கடை நடத்தும் ஒரு பெண்ணாக வேடம் ஏற்கிறார். இதற்காக மதுரை சென்ற அவர், நகரின் பல்வேறு இடங்களில் நடத்தப்படும் இட்லி கடைகளுக்கு நேரில் சென்று அங்கு எந்த முறையில் இட்லி தயாரிக்கிறார்கள். கடை எப்படி நடத்தப்படுகிறது. வாடிக்கையாளர்கள் என்னவெல்லாம் கேட்பார்கள். அதற்கு எப்படி பதில் சொல்ல வேண்டும் என்று கடையின் ஓர் ஓரமாக அமர்ந்து கவனித்து பயிற்சி பெற்றார். இந்த சூழலுக்கான ஒரு பாடலில் அவர் பயிற்சி எடுத்து ஆடியிருக்கிறார். தன் டிவிட்டர் பகுதியில், ""நேரடியாக சில கடைகளுக்குச் சென்று பயிற்சி பெற்றது, கதாபாத்திரத்துக்கு உதவியது. யதார்த்தமான இப்படியொரு பாத்திரத்தில் நடிப்பது ஆர்வத்தை தருகிறது. இப்படி ஓர் ஆட்டம் ஆடுவது இதுவே முதல் முறை'' என கூறியிருக்கிறார்.

""சிம்புவின் காதலுக்குப் பச்சை கொடி காட்டி விட்டார் டி.ஆர்'' என மீடியாக்கள் பரபரப்பு கூட்ட, அதை அவரே மறுத்து பேசியிருக்கிறார். இராம.நாராயணன் இயக்கத்தில் 126}ஆவது படமாக உருவாகி வருகிறது "ஆர்யா சூர்யா'. இப்படத்துக்காக முமைத்கானுடன் டி.ஆர் சேர்ந்து ஆடிப் பாடிய பாடலுக்கு ஏகப்பட்ட வரவேற்பு. படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தன் பாணியில் மைக் பிடித்த டி.ஆரின் பேச்சு காதல் விவகாரங்களுக்குள் சென்றது. "" என் மகன் யாரை காதலித்தாலும் ஏற்றுக் கொள்வேன் என்றுதான் சொல்லியிருந்தேன். நடிகையை காதலித்தால் ஏற்றுக் கொள்வீர்களா? என்று கேட்டார்கள். காதல் யாரோடும் வரலாம். அதில் பேதங்கள் கிடையாது என்றுதான் பதில் சொல்லியிருந்தேன். ஆனால் ஒரு குறிப்பிட்ட நடிகையின் பெயரை இணைத்து, அவரை நான் மருமகளாக ஏற்பதாகவும் எழுதி விட்டார்கள். இதில் என்ன நியாயம் இருக்கிறது? சேரன் மகள் விஷயத்திலும் மீடியாக்கள் அப்படித்தான் நடந்து கொள்கின்றன. சினிமாவில் காதலை வலிந்து பேசும் நாங்கள், நிஜ வாழ்க்கையிலும் சில சமரசங்களுக்குள்தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். டி.ஆர்., சேரன் என்கிற எங்களின் அடையாளங்களை விட்டு விட்டு, அதை தனி மனித வலியாக காதலை உணர வேண்டும்'' என உணர்ச்சி வசப்பட்டார் டி.ஆர்.

"தமிழ்ப்பட'த்துக்குப் பின் வந்த ஒரு சில படங்களில் திஷா பாண்டேவுக்கு திருப்தி இல்லை. இதனால் கதை தேர்வுகளில் சற்று கவனம் செலுத்தி வந்தார். தற்போது "மனதில் மாயம் செய்தாய்' என்ற படத்தில் நடிக்கிறார். ரிச்சா என்ற மற்றொரு ஹீரோயின் இதில் நடித்த போதிலும், கதைக்காக இரண்டாவது ஹீரோயின் வேடம் ஏற்றிருக்கிறார். ""குறைந்த அளவே படங்களில் நடித்திருந்தாலும் மாறுபட்ட கதைகளாக அமைந்தது திருப்தி. தமிழ்ப்படம் வந்த பின் எனக்கான பெரிய அடையாளமாக எதுவும் அமையவில்லை. ஆனால் நடித்த ஒரு சில படங்களிலும் நிறைய ஆர்வம் காட்டியிருந்தேன். ஆனால் சில விஷயங்கள் சரியாக அமையவில்லை. "மனதில் மாயம் செய்தாய்' கதையில் வித்தியாசம் இருப்பதை உணர முடிந்தது. அருகில் இருக்கும் ஒருவரிடம் ஒரு விஷயத்தை சரியாக கூறினால் அந்த விஷயம் 100- ஆவது நபருக்கு சென்று சேரும் போது அது வேறு ஒரு விஷயமாக மாறி இருக்கும் என்பதுதான் கதைக்கரு. வெற்றிப் படங்களில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்துக்கு வந்து விட்டதால், இரண்டாவது ஹீரோயின், முதல் ஹீரோயின் என்ற இடங்களை பார்ப்பதில்லை'' என்கிறார் திஷாபாண்டே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.