டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வாயுத் தொல்லையும் வயிற்று உபாதையும்!

வாதக் கிரணி' என்று ஓர் உபாதை இருக்கிறது. உண்ட உணவு வயிற்றில் செரிமானத்திலிருக்கும் போதும்,

News image
Updated On :3 ஜனவரி 2024, 1:05 pm

எஸ். சுவாமிநாதன்

என் வயது 72. மதிய உணவு சாப்பிட்டு  3 மணி நேரம் வரை பிரச்னை ஏதுமில்லை. மாலை 4 மணிக்கு மேல் அடி வயிறு கனத்து மேல் வயிறும் முட்டி மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. மலம் கழித்தல் தினமும் குறித்த நேரத்தில் நிகழ்வதில்லை. நினைத்த நேரத்தில் 1 முதல் 4 முறை கழிக்கின்றேன். இந்த வயிற்று உபாதை என்னைப் பாடாய்ப் படுத்துகிறது. உடல் வலுவற்றுப் போகிறது. பல வருடங்களாக அவதிப்படும் எனக்கு இந்த உபாதை தீருமா?

வீ.ஆர்.சுப்பிரமணியன், திருப்பூர்.

"வாதக் கிரணி' என்று ஓர் உபாதை இருக்கிறது. உண்ட உணவு வயிற்றில் செரிமானத்திலிருக்கும் போதும், சீரணித்த நிலையிலும் வயிற்றில் வாயுவின் தேக்கம் அதிகமாகி பொருமல் ஏற்படும். உணவு உண்டதும் சுகமாகத் தோன்றும். வெகு நேரத்துக்குப் பின் மிகவும் சிரமத்துடன் திரவம் அல்லது வறட்சியாகச் சிறிதளவு மலம் வெளியாகும். சத்தத்துடன் நுரையாகவும், அடிக்கடியும் மலம் போகலாம். ஜாடராக்னி எனப்படும் பசித்தீயின் பலக் குறைவினை உண்டாக்கும் உணவுப் பொருட்களை உட்கொள்வதால், இந்த உபாதை ஏற்படுவதாக ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது.

இது போன்ற நிலையில் உங்களுக்குக் காலை உணவாக கடுக்காய், கண்டந்திப்பிலி, பில்வப் பிஞ்சு, சிறிது பச்சரிசி ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட கஞ்சி குடித்தால், அது வாயுவைக் கீழ் நோக்கச் செய்யும். ஜாடராக்னி எனும் பசித் தீயில் உங்களுக்கு குறை ஏதும் தென்படவில்லை. ஆனால் வயிற்றில் வாத தோஷத்தின் சீற்றமும், பித்த தோஷத்தின் நெய்ப்பும், திரவமும் அதோடு கூடியிருப்பதாகவே தெரிகிறது. குறித்த நேரத்தில் மலம் நெகிழாமல் இருப்பதற்கு வாயு காரணமாகவும், 3 -4 முறை மலம் கழிவதற்குப் பித்த தோஷத்தின் கலப்பே காரணமாகக் குறிப்பிடலாம். திப்பிலி, வாய்விடங்கம், திரிபலை இவற்றின் கஷாயத்தால் பேதி செய்வித்து, நன்றாகப் பேதியானவுடன் வாயுவைக் கட்டுப்படுத்துவதாகவும், பசியைத் தூண்டுவதாகவுமான பொருட்களைச் சேர்த்துத் தயாரித்த கஞ்சியைப் பருகுவதால், உங்கள் உபாதையின் தீவிரத்தைக் குறைக்க முடியும். ஹிங்குவசாதி எனும் ஆயுர்வேத சூரண மருந்தை சுமார் 1/2 - 1 ஸ்பூன் அதாவது 5 கிராம் வரை சூடான பச்சரிசிக் கஞ்சியுடன் கலந்து காலையில் பருகினால், வாயு மட்டுப்படுவதுடன், பசியும் சீரான இடைவேளையில் நன்றாக எடுக்கும்.

மப்பு நிலையில்லாத நல்ல பசியும் இருந்து நுரை, வழுவழுப்பு, வலி, தடை ஆகியவற்றுடன்  அடிக்கடி மிகக் குறைந்த அளவு மலத்துடனோ அல்லது மலமின்றியோ முக்கலுடன் பேதியானால் வெல்லம் கலந்த சுக்கை தயிர், நல்லெண்ணெய், நெய், பால் ஆகியவற்றுடன் கலந்து பருக வேண்டும். அல்லது இலந்தைப் பழத்தை வேக வைத்து வெல்லமும் எண்ணெய்யும் கலந்து உண்ண வேண்டும். மாதுளம் பழத்தோலைக் காய வைத்து இடித்துத் துணியை வைத்து சலித்து  1/2 - 1 ஸ்பூன் அளவில் எடுத்து, 1/2 ஸ்பூன் சுக்குப் பொடியுடன் மோரில் கலந்து சாப்பிட்டு வந்தால், நீங்கள் குறிப்பிடும் உபாதை நன்கு குறைந்துவிடும்.

சமையலறையிலுள்ள மிளகு, மல்லி, ஜீரகம், புளி, மாதுளம்பழத் தோல், ஓமம் ஆகியவற்றை அரைத்து இவற்றுடன் 6 மடங்கு பில்வப் பழச்சத்து கலந்து பிசைந்து தயிர், பயத்தங்கஞ்சி,வெல்லம், நெய், நல்லெண்ணெய் கலந்து சாப்பிட்டு, நம் முன்னோர் பசியை நன்றாகத் தூண்டிவிட்டு, வயிற்றிலுள்ள மப்பு நிலையைப் போக்கி, நொதநொதவென்று போகும் மலத்தை இறுக்கி, ருசியைத் தூண்டி, வயிற்றுக் கடுப்பைப் போக்கிக் கொண்டனர். இது போன்றதொரு உணவுத் திட்டம் உங்களுக்கு நல்ல பலனைத் தரலாம். ஆனால் அதைச் சாத்யப்படுத்திக் கொள்வது உங்கள் கையில்தான் உள்ளது.

வயிற்றில் வாயுவின் தடையிருப்பதாகத் தெரிவதால், பில்வப் பிஞ்சு, திப்பிலி, சுக்கு, வெல்லம், நல்லெண்ணெய் ஆகியவற்றைக் கலந்து அரைத்து, லேஹ்யமாக நக்கிச் சாப்பிட்டால், குலையுடன் வயிற்றுக் கடுப்பு உள்ள உங்களுக்கு நல்ல மருந்தாகப் பயன்படும்.

மலத்தடை, அபான வாயுத்தடை, அதிக வலி, கடுப்பு, ரத்தம் கலந்தும், வழுவழுப்புடனும் மலம் போதல், தாகம் போன்ற உபாதைகள் தென்பட்டால், பசு நெய் 10 மி.லி., நல்லெண்ணெய் 5 மி.லி. கலந்து சாப்பிட்டு, அதன் மேல் பில்வப் பிஞ்சு 5 கிராம், 1 கிளாஸ் (300 மி.லி.) பாலுடன் கலந்து காய்ச்சி வடிகட்டிக் குடிப்பது மிகவும் நல்லது. சந்த்ரசூராதி என்ற ஆயுர்வேத கஷாய மருந்து சாப்பிட, வயிற்று உபாதைகளான வாயுத் தொல்லை மற்றும் நொதநொதவென்று போகும் மலப்பிரச்னைக்கு நல்ல மருந்தாகும்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.