நன்னாரி வேர்த்தோல், மாகாளிக் கிழங்குத் தோல், அதிமதுரம், கோரைக்கிழங்கு, சந்தன சிராய், ரோஜா மொட்டு, கருங்காலிக் கட்டையின் வைரப் பகுதி, சோம்பு, பரங்கிப்பட்டை ஆகியவற்றை வகைக்கு 50 கிராம் எடுத்துப் பெருந்தூளாக இடித்து, 15 பொட்டலங்கள் சமமாகப் பிரித்துக் கட்டவும். தினமும் 1 பொட்டலத்தை அரை லிட்டர் தண்ணீரில் போட்டு 250 மில்லியாகக் குறுக்கி வடிகட்டி, 125 மி.லி. காலையிலும், பாக்கியை மாலையிலும் தினமும் பனங்கற்கண்டோ, சர்க்கரையோ சேர்த்துச் சாப்பிடவும். வெப்பத்தால் ரத்தம் கெட்டு ஏற்படும் சிரங்கு, அரிப்பு, சொறி, வியர்க்குரு, வீக்கம், வலி போன்றவை விரைவில் நீங்கிவிடும். புனர்நவாதி, சோணிதாமிர்தம், கோகிலாக்ஷம், பிருகத்யாதி, தசமூலம், அர்த்த பில்வம் போன்ற தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் மருந்துகளும் வீக்கம் வலியைக் குறைக்கக் கூடியவைதான். அதில் பொருத்தமானவற்றை ஓர் ஆயுர்வேத மருத்துவரால் மட்டுமே நிர்ணயம் செய்ய முடியும்.