டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: உடலும் மனமும் தூங்க வேண்டும்!

என் வயது 60. இரவில் தூக்கமின்மையால் மறுநாள் காலை எந்நேரமும் சோர்வும் மனத்தில் பயமும், எந்த ஒரு செயலைச் செய்ய ஆர்வமின்மையும் ஏற்பட்டு வருகிறது. கையெழுத்து நடுக்கத்தால் மோசமாகி வருகிறது. என் மூன்று பெண்

News image
Updated On :2 ஜனவரி 2024, 4:48 pm

எஸ். சுவாமிநாதன்

என் வயது 60. இரவில் தூக்கமின்மையால் மறுநாள் காலை எந்நேரமும் சோர்வும் மனத்தில் பயமும், எந்த ஒரு செயலைச் செய்ய ஆர்வமின்மையும் ஏற்பட்டு வருகிறது. கையெழுத்து நடுக்கத்தால் மோசமாகி வருகிறது. என் மூன்று பெண் பிள்ளைகளுக்கும் இன்னும் திருமணமாகவில்லை. வறுமையான சூழ்நிலை. நிறையக் கடமைகள் பாக்கி இருக்கின்றன. நான் இருப்பது ஒரு சிறிய கிராமம். அதனால் எளிய வழிகள் மூலம் என் உபாதைகளை மாற்ற முடியுமா?

ஏ.சுப்ரமணியன், பெருகவாழ்ந்தான், மன்னார்குடி .

இரவின் உணவும் செயலும் நம் உடலின் தோஷநிலைகளைத் தீர்மானிக்கின்றன. இரவில் உண்டவுடன் சிறிது நேரம் இளைப்பாறிவிட்டு 1 -2 மணி நேரம் சென்ற பிறகே தூங்குவதுதான் நல்லது.

கிராமத்துச் சூழ்நிலை இரவில் மிகவும் ரம்யமாக இருக்கும். அதனால் இரவு உணவுக்குப் பிறகு சற்று இளைப்பாறி, உங்களுக்கு மிகவும் பிடித்த நண்பர்கள் அல்லது மனைவியுடன் சிறிது நேரம் நடக்கவும். நடக்கும்போது அன்றைய தினம் நடந்த இனிமையான, மகிழ்ச்சியான சம்பவங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளவும். முக்கியமாக மனைவி கூறும் விஷயங்களை ஆர்வமுடன் கேட்டு அதற்குத் தக்கவாறு பதில்களை அன்புடன் கூறுவதால், அவருடைய அன்பை நீங்கள் நிரந்தரமாகப் பெற முடியும்.

 உங்களுடைய மனதும் அமைதியாகி லேசாகிவிடும். நல்ல சுகாதாரமான காற்றை நடையின் மூலம் உள்ளிழுத்து வெளியே விடுவதால், இதயத்திலும், மூளையிலும் ரத்த ஓட்டம் சீராகி, பிராண வாயுவின் சீரான வரவால், நீங்கள் உடலை மாத்திரம் இரவில் கிடத்தவில்லை, மனத்தையும் கிடத்துகிறீர்கள். நல்ல தூக்கத்துக்கான அஸ்திவாரம் இந்த சூட்சுமத்தில்தான் அடங்கியிருக்கிறது. மனத்தைக் கிடத்த முடியாவிடில் பலன் கிடைக்காது.

இதுதான் மருத்துவம் கூறும் ஓய்வு.

"ஸôயம் புக்த்வா லகு ஹிதம்' என்கிறது ஆயுர்வேதம். இரவு உணவானது எளிதில் செரிக்கக் கூடியதாகவும், உடலுக்கு நன்மையளிக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும் என்று அதற்கு அர்த்தம்.

 நன்கு கடைந்த வெண்ணெய் நீக்கிய மோரை, லேசாகச் சூடாக்கி, சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து, ஓரிரு ஸ்பூன் நெய்யில் கடுகு, ஓமம், கருவேப்பிலைத் தாளிதம் செய்து, சுர்ரென்று மோரில் விட்டு, அதை வெதுவெதுப்புடன் புழுங்கலரிசி சாதத்துடன் நார்த்தங்காய் உப்புக் கண்டத்துடன் சாப்பிடலாம். எண்ணெய் சேர்க்காத சுக்கா ரொட்டியுடன் வேக வைத்த பச்சைப் பயறு, சின்ன வெங்காயக் கூட்டுடன் சாப்பிடலாம். இவற்றில் ஏதேனும் ஒன்றைச் சாப்பிட்டு, ஓய்வெடுத்தபின் நடந்தால் என்னவாகும்? மெல்ல மெல்ல உண்ட உணவின் இறுக்கம் நெகிழும். கழுத்து, இடுப்பு, முழங்கால் இவற்றிலுள்ள பிடிப்பு அகலும்.

ஆக, மிதமான உணவு - உலாவிக் கொண்டே பேசக்கூடிய மன மகிழ்ச்சியான பேச்சு ஆகியவற்றின் வாயிலாக உடல் மன வலுவைக் கூட்டிக் கொள்ளும் நீங்கள், மூன்றாவது பயிற்சியாக, இடதுபுறமாக ஒருக்களித்துப் படுக்க வேண்டும். அதனால் என்ன நன்மை?

இரைப்பையின் பெரும்பகுதி மேல் வயிற்றின் இடப்புறத்தில்தான் அமைந்துள்ளது. அதனால் உணவு நன்றாக எளிதில் தங்கும். அம்மாதிரியே பெருங்குடலின் கடைப்பகுதியும், இடப்புறத்தில்தான் காண்கிறது. அங்கு வாயு தேங்கல் ஏற்பட்டு உணவின் செரிமான காலத்தில் வாயு வலி ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க, இடப்புறம் ஒருகளித்துப் படுப்பது உதவுகிறது. மேலும் இடது விலாப்புறத்தில் தொப்புளுக்கு மேல் அக்னி சக்தியின் இருப்பிடம். இடது விலாப்புறம் கீழாக இருக்கும்படி ஒருக்களித்துப் படுப்பது உணவு எளிதில் ஜீரணமாக உதவும்.

தூக்கமின்மையைப் போக்கும், இந்த எளிய வழிமுறைகளால் சோர்வு, மனபயம், செயலில் ஆர்வமின்மை போன்றவற்றை நீங்கள் தடுத்துவிடலாம். நல்லெண்ணெயில் ஓமம், சீரகம், பொரித்துத் தலைக்குத் தேய்த்துக் குளித்து வருவதால், கையெழுத்து நடுக்கத்தையும் குறைத்துவிடலாம். மஹா கல்யாணககிருதம் எனும் ஆயுர்வேத மூலிகை நெய் மருந்தை லேசாக உருக்கி, சுமார் 10 -15 மி.லி. வீதம் காலை, மாலை வெறும் வயிற்றில் 3 -6 மாதங்கள் சாப்பிட்டு வர, உங்கள் உபாதைகள் அனைத்தும் குறைய நிறைய வாய்ப்பிருக்கிறது.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.