சிறுகதை: மாற்றம்
அந்த இடத்திற்கு வந்து வண்டியை நிறுத்திவிட்டுத் திரும்பியபோதுதான் எனக்கே உறைத்தது, அங்கே அந்தப் பழக் கடை இல்லையென்று. வெட்டிப் போட்ட இளநீர் மட்டைகள் அம்பாரமாய்க் குவிந்து கிடந்தன. அருகேயிருக்கும் அந்த


அந்த இடத்திற்கு வந்து வண்டியை நிறுத்திவிட்டுத் திரும்பியபோதுதான் எனக்கே உறைத்தது, அங்கே அந்தப் பழக் கடை இல்லையென்று.
வெட்டிப் போட்ட இளநீர் மட்டைகள் அம்பாரமாய்க் குவிந்து கிடந்தன. அருகேயிருக்கும் அந்த வண்டியையும் காணவில்லையே என்று நினைத்துக்கொண்டே தலையை நன்றாக நிமிர்த்திப் பார்வையை நீளச் செலுத்தினேன்.
அந்த இடப்புறச் சாலை ஓர நீண்ட வெளிகளில் எங்குமே கடைகளைக் காணவில்லை. தூரத்தில் அந்தக் காலனி திரும்பும் இடம்வரை சும்மாவே கிடந்தது.
என்னவாயிற்று? இன்று ஏதேனும் பந்த்தா? அல்லது வியாபாரிகள் கடை அடைப்பா? செய்தி அறிய விட்டுப்போயிற்றா? அப்படியானாலும் இத் தெருவோரச் சிறு வியாபாரிகளுக்கு விலக்கு உண்டே? இவர்களையுமா தடை செய்து விட்டார்கள்?
நேர் பின்புறம் திரும்பி நோக்கினேன். வழக்கம்போல் உழவர் சந்தை இயங்கிக் கொண்டிருந்தது. நேரம் கடந்துவிட்டது என்பதற்கு அடையாளமாய் வாயிலில் சில பைக்குகளும், ஒன்றிரண்டு சைக்கிள்களும் மட்டும் நின்று கொண்டிருந்தன.
உள்ளே கடைகளை எடுத்து வைக்கும் வேலை நடந்துகொண்டிருந்தது. மிஞ்சிய காய்கறிகளை எடுத்துச் செல்லுதலும், அங்கேயே மூட்டை கட்டி வைத்தலுமான பணிகள் மும்முரமாய் இருந்தன.
முழுவதும் மூடுவதற்குள் உள்ளே போய் வாங்கி வந்து விடுவோம் என்று அங்கேயே வண்டியை நிறுத்திவிட்டு நடந்தேன். வண்டி தனியாய் நிற்கிறதே என்று மனதுக்குள் ஒரு பயம்.
உள்ளே நுழைந்து வரிசை வரிசையாக நோக்கினால் ஒரு பழக்கடை கூடக் கண்ணில் தென்படவில்லை. என்னவாயிற்று எல்லாப் பழங்களுக்கும் சீசன் முடிந்து விட்டதா? ஒவ்வொன்றுக்கும் மாறி மாறித்தானே காய்ப்பு என்பது தொடங்கும்?
மாதுளம் பழத்துக்கு இப்பொழுது மவுசு என்றார்களே? சாத்துக்குடி சீசன் முடிந்து போயிற்று. ஆனாலும் ஒரு கடைகூடவா இருக்காது சுற்றிச் சுற்றி வந்தேன்.
தக்காளிப் பழக் கடைதான் இருந்தது. ""கிலோ அஞ்சு ரூபா சார்... வாங்க... நாட்டுத் தக்காளி..'' முடியப் போகும் நேரத்தில்கூடக் கூவிக்கொண்டிருந்தார்கள். அவரவர் பாடு அவரவர்க்கு. விற்று முடித்து, காசு பார்த்து, வயிறு நிறைக்க வேண்டுமே.
எந்தப் பழக்கடையும் இல்லாததால் ஏதோவோர் மகிழ்ச்சிதான் மனதில். இருந்திருந்தாலும், விருப்பமின்றித்தான் வாங்கியிருப்பேன். என் முழு விருப்பமான பர்சேஸ் என்பது உழவர் சந்தைக்கு வெளியே கடை வைத்திருக்கும் அந்தப் பழக்கடையில் வாங்குவதுதான்.
நேராக அங்கே கொண்டு என் வண்டியை நிறுத்துவேன். நான் தொலைவில் வருவது கண்டே அவன் பழங்களைத் தேர்வு செய்ய ஆரம்பித்துவிடுவான். அப்போதைய சீசனுக்கு என்ன பழங்களோ அதைத் தேர்வு செய்து தருவான். நிறுவை சற்றுக் கூடத்தான். விலையோ மற்றவரைக் காட்டிலும் அஞ்சு ரூபாய் கம்மிதான் எனக்கு. அவனது தொடர்ந்த வாடிக்கையாளன் ஆயிற்றே நான்.
சொல்லப்போனால் முதலிலே அவனது சம்சாரம்தான் எனக்கு அறிமுகம். அருகிலிருக்கும் இளநீர்க் கடைக்கு இளநீர் குடிக்கப்போன எனக்கு ""பழம் வாங்கிட்டுப் போங்கண்ணே...'' என்ற அந்தப் பெண்ணின் உபசரிப்பு, என்னை அங்கே ஈர்த்தது, இழுத்தது.
உண்மையைச் சொல்வதானால் முதலில் அவளது பேச்சுக்காகத்தான் அங்கே பழம் வாங்கினேன் நான். நின்று இளநீர் குடிக்கும்போது மெட்டியும் கொலுசுமிட்ட அவளது செருப்பணியாத பாதங்கள் என் கண்ணில் பட்டன.
காலையிலிருந்து மாலைவரை எவ்வளவு நேரம் அப்படி நிற்பாள் அவள்?
""பழம் பேக் பண்ணி வருதுல்ல, அட்டைப் பெட்டி.... அதுல ஒண்ணை எடுத்து, தரைல விரிச்சுப்போட்டு, அது மேல நில்லுங்க... இல்லன்னா ஒரு செருப்புப் போட்டுக்குங்க... எவ்வளவு நேரம் இப்படி சூட்டுல நிப்பீங்க?'' என் அக்கறையான பேச்சு அவளைக் கவர்ந்திருக்க வேண்டும்.
""செருப்புப் போட்டா அந்தச் சூட்டுக்கு பித்த வெடிப்பு வருது சார்...''
அண்ணே, சார் ஆகியிருந்தது இப்போது.
""வெறுந்தரைல நிக்குறது அதைவிடச் சூடாச்சே''
""சரிங்க சார்...'' - எதற்குச் சரி என்றாள் புரியவில்லை. ஆனாலும் யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டதுபோல தோன்றியது. மறுநாளிலிருந்து அது அங்கே அரங்கேறிற்று. அந்தப் பாதங்களுக்குப் பூமிச் சூட்டிலிருந்து விடுதலை.
""ஏன் சார்... சாத்துக்குடி மட்டும் போதுமா மாம்பழம் வாங்கிட்டுப் போங்க... ஆப்பிள் வாங்கிக்குங்க...பார்த்துப் போட்டுத் தரேன் சார்...''
மெல்லிய புன்னகையோடு அவளின் அத்யந்த உபசரிப்பு என்னைச் சிலிர்க்கத்தான் வைத்தது. ""சாருக்கு நல்லதா பார்த்துக் குடு பாப்பா.. ''- இளநீர்க் கடைக்காரனின் சிபாரிசு வேறு.
பளபளக்கும் கூரிய அரிவாளோடு அருகில் இருக்கும் அவன், அவளுக்குப் பாதுகாப்போ...வீட்டிலே நானும் என் மனைவியும்தான். எங்களுக்கு அவ்வளவு பழம் தேவையில்லைதான். சாத்துக்குடி தவிர வேறு எது வாங்கினாலும் என் மனையாள் தொடப்போவதில்லை. உடல்நலம் நிமித்தம் அவள் ருசிக்கும் ஒரே பழம் அது ஒன்றுதான். அப்படியிருக்க இத்தனை எதற்கு கேள்விக்கு மனதில் பதில் விழும் முன்னேயே நிறுத்து முடித்து கைக்கு வந்து விட்டது சரக்கு.
""இந்தாங்க சார்...கொண்டு போங்க...ராஜபாளையம் சப்போட்டா..ஆஸ்திரேலியா ஆப்பிள் சார்...மாவாக் கரையும் வாயில...அது ஆஸ்திரேலியாவிலிருந்து வந்ததா அல்லது அருகிலுள்ள ஊட்டியிலிருந்தா, தெரியாது வழக்கமாய்ச் சொல்வது அப்படி...
வெறும் இருபத்தஞ்சு ரூபாயில் முடிவது நூற்றைம்பதில் சென்று நின்றது.
அந்தப் பெண் வறுமையிலும் நிறைவோடுதான் இருந்தாள். தன் புருஷனை அவள் கவனித்த விதமே அதற்குச் சான்று. பின்புறம் அந்தக் காம்பவுண்ட் சுவரைப் பார்த்துத் திரும்பிக்கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தான் அவன். சாலையில் போவோர் வருவோருக்குத் தெரியக் கூடாது என்று என்ன ஒரு இங்கிதம் பாருங்கள். வியாபாரத்துக்கு இடையே சென்று அவள் அவனைக் கவனித்தாள்.
""வெஞ்சனம் போட்டுக்குங்க... ஒண்ணுமேயில்லாமச் சாப்பிடுறீங்க''
அவனை அவள் உபசரித்த விதம், ஊடே வந்து வியாபாரத்தைக் கவனித்துக்கொண்ட பாங்கு... எனக்கு ரொம்பவும் மனதுக்குள் சந்தோஷத்தை ஏற்படுத்தியது.
ஒருநாள் விடாமல் கடுமையான உழைப்பும், அன்றாட வாழ்வின் ஜீவிதத்திற்கான இடைவிடாத போராட்டமும், அமிழ்ந்து கிடக்கும் அவர்கள் வாழ்வில்தான் எத்தனை பொறுப்புணர்ச்சியும் பெருந்தன்மையும், அன்பும் அக்கறையும், நிறைவும் தாண்டவமாடுகிறது.
கை நிறையப் பணம் வந்து கொட்டும் எத்தனை இடங்களில் மனம் நிறைந்து கிடக்கிறது? இந்த மேன்மை எங்கே தவழ்கிறது?
இப்படியாகத்தான் அந்த இடத்திற்குப் பழகிப் போனேன் நான். சொல்லப் போனால் பழங்கள் பயன்படுத்தும் நல்ல பழக்கமே அந்தப் பெண்ணால்தான் ஏற்பட்டுப் போனது எனக்கு. உழவர் சந்தையை விட்டு வெளியே வந்தேன். பழங்கள் எதுவும் வாங்குவதுபோல் இல்லை. அதுதான் கடையே இல்லையே.
என் வண்டி வெயிலில் அம்போவென்று நின்றது. யோசித்தபோது கடந்த நான்கைந்து நாட்களாகவே அந்தப் பழக்கடையில் அந்தப் பெண் இல்லையென்று தோன்றியது. இன்றோ கடையே இல்லை. எந்தக் கடையும் இல்லையே.
""ஆமா,பழக்கடை போடலையே... நீங்க எங்க வேலை பார்க்குறீங்க...?'' அன்று அவள் கணவனைத் தற்செயலாகப் பார்த்த போது கேட்டது ஞாபகம் வந்தது.
""நா கூலி வேலை பார்க்குறேன் சார்...நெல்லு மண்டில மூட்டை தூக்குறேன்''
கொஞ்ச நேரம் உறைந்து போனேன் நான்.
""ஏன் கடை போடலை?''
""போனவாரம் பூராவும் பாருங்க சார்...போலீஸ் டார்ச்சர் அதிகமாடிச்சு. டிராஃபிக் சரி பண்றோம்னுட்டு விரட்டிட்டே இருந்தாங்க. ஒரு ஓரமா அப்டி சைடுல இருந்திக்கிடுறோம்னு சொல்லிப் பார்த்தோம். கேட்கல...இடை இடைல அப்படி வர்றதுதான், போறதுதான்...ஆனா இப்ப கெடுபிடி ரொம்ப ஜாஸ்தியாயிருச்சு. அதுக்கப்புறம்யாருமே சரியாக் கடை போடலை. என் சம்சாரம் வேற நெறை மாத பிள்ளைத்தாச்சி. நெறைய செலவு இருக்கு. என்ன பண்ணப் போறேன்னு தெரியலை'' கவலையுடன் சொன்னான்.
அன்று ஞாயிற்றுக்கிழமை. கையில் பையோடு காய்கறி வாங்கக் கிளம்பினேன் நான். வழக்கம்போல் வாராந்திரக் காய்கறிகள் வாங்கும்போது இனி உழவர் சந்தையிலேயே பழங்களையும் வாங்கிவிட வேண்டியதுதான். முடிவு செய்து கொண்டேன்.
""என்னப்பா, இந்த விலை சொல்றே ?''
ஒரு பழக் கடையில் அவன் சொன்ன விலையைக் கேட்டு அதிர்ந்து போனேன் நான். வாங்குவதா, வேண்டாமா - சட்டென்று யோசனை வந்து விட்டது. ""அங்கெல்லாம் பழக் கடைகளைக் காணலை. அதுனால இப்படியா'' -கேட்டிருக்க வேண்டாம்தான். வாயில் வந்து விட்டது. நாக்கைக் கடித்துக் கொண்டேன் அவனறியாமல். பிடித்தானே ஒரு பிடி....
""நாங்களெல்லாம் வெலை சொன்னா இப்டித்தான் சார் கேட்பீங்க... இந்த ரோட்டுக் கடைசீல கண்ணாடிக் கதவும்... ஏஸியும் எல்லாம் போட்டு புதுசாக் கடை திறந்திருக்கானே...அங்கதான நோங்கியிருக்கு எல்லாருக்கும்...எங்களுக்கென்ன தெரியாதா நல்லா போங்க...வாயே பேச மாட்டான் அங்க. இங்க மாதிரி சுதந்திரமாப் பேரம் பேச முடியாது அங்க. கையும் காசும்தான் நீளும்...எல்லாத்துக்கும்...அதானே இன்னைக்கு நாகரீகம்?நல்லாப் போயிட்டு வாங்க... ஏ.சி. ரூம்ல, ஷோ கேஸ்ல பளபளன்னு வெறுமே துடைச்சு அடுக்கி, வெலையை எழுதி நட்டு வச்சிட்டுப் பேசாம உட்கார்ந்திட்டா கம்முன்னு வாயைப் பொத்திட்டு வாங்கிட்டுப் போவீங்க... வெளில போய் பெருமையா வேறே சொல்லிக்குவீங்க...அதானே சார்...''
இப்பொழுது நான் அடங்கிப் போனேன்.
மெல்ல அங்கிருந்து நழுவினேன். தலையைக் குனிந்து கொண்டிருந்தவன் பட்டென்று நிமிர்ந்தான்.
ரோட்டோரத்தில ஒரு கடை கூட இல்லாம அல்லாடிப் போய் வர்றேன் நான்...பாவமா இருக்கு அவங்களை நினைச்சா... போக்குவரத்து இடைஞ்சல்ன்னுட்டு விரட்டிட்டாங்களோன்னு பார்த்தா, இப்போ புதுசா வந்த பெரிய நிறுவனத்தின் கடையில்ல இப்ப வெரட்டியிருக்கு அவங்களை... என்னடா தொடர்ந்து காணலையே என்னாச்சுன்னு யோசிச்சா இதுதானா சமாச்சாரம்? அட... ஆண்டவனே... அதிர்ச்சியில் உறைந்து போனேன் நான்.அன்று பழங்கள் வாங்காமல் வந்தது வீட்டில் சண்டையை உண்டாக்கும் என்றுதான் நினைத்தேன். ""நின்னு நிதானமா இன்னும் ரெண்டு கடை இருக்கான்னு பார்த்து, வாங்கிட்டு வர வேண்டியதுதானே அதுக்குள்ள என்ன அவசரம் உங்களுக்கு எனக்குப் பழம் சாப்டாத்தான் சரியாயிருக்கு, வயிற்றுத் தொந்தரவு இல்லாம இருக்குன்னு உங்களுக்குத் தெரியுமில்ல'' கேட்பாள் என்றுதான் எதிர்பார்த்தேன். வாயே திறக்கவில்லையே. இவளுக்கும்தான் என்னவாயிற்று.
""வாங்கலேல்ல... நல்லதாப்போச்சு... கிளம்புறபோதே சொல்லிவிடணும்னு நினைச்சேன்... அந்தப் புதுக்கடைல போய்வாங்கிக்கிடலாம்... எல்லாம் ஃபிரஷ்ஷா இருக்கும்...''
மனசு எதையோ நினைத்து துக்கித்துப் போனது.இனிமேல் உழவர் சந்தைக்கு நான் காய்கறி வாங்கப் போகையிலோ அல்லது ஆபீஸ் முடிந்து வீடு திரும்புகையிலோ அந்தச் சாலை வரிசையிலே அந்தப் பெண்ணின் கடையோ, வேறு கடைகளோ எதுவுமே இருக்காதோ? தன் மனைவியின் குழந்தைப்பேறு முடித்து அடுத்தாற்போல் அவன் எங்கு கடை போடுவான்? கடை போடுவானாஅல்லது வழக்கமான கூலி வேலையைத் தொடருவானா? அப்படித் தொடர்ந்தால் அந்த வருவாய் அவனுக்குப் போதுமானதாக இருக்குமா? கைக் குழந்தை பராமரிப்பு என்று ஒன்று உள்ளதே, வேறு எங்காவது கடை போடுவதானாலும், அந்தப் பெண்ணை அமர்த்துவது சாத்தியமாகுமா? இனி அங்கே எவருமே வர வாய்ப்பில்லையோ? அந்த எல்லோரின் ஜீவிதம் இனி எங்கு தொடரும்?
இப்பொழுதெல்லாம் அலுவலகம் செல்லும்பொழுது தினமும் அந்த இடத்தைப் பார்க்கத் தவறுவதில்லை நான். வெறுமை சூழ்ந்த அந்த நீண்ட வெட்டவெளி, வெயில் காய்ந்த தனிமையில், தன் உறவுகளையெல்லாம் இழந்த துக்கத்தில், வெப்பம் தகிக்கும் தன் பெருமூச்சை பெருத்த ஏக்கத்தோடு வெளிப்படுத்திக் கொண்டே விரிந்து நீண்டு கேட்பாரின்றிக் கிடக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...