பெ ருங்குடல், மலக்குடல் பகுதிகளில் அபான வாயு எனும் காற்றானது செயல்படுகிறது. கெட்டுப் போன பித்த தோஷத்தின் வரவானது, ரத்த நாளங்களின் வழியாக இப்பகுதிகளில் வரும்போது, சீழ் புண்ணாக்கும் அளவுக்கு அழற்சியை ஏற்படுத்துகிறது. அடிவயிற்றுப் பகுதியை இழுத்துப் பிடிப்பது போன்ற வேதனையுடன் மலம் ரத்தத்துடன் வெளியேறும். மலம் கழித்தவுடன் நிம்மதியாக இருக்கும். நாள் முழுவதும் பேதியானது விட்டு விட்டு ஏற்படும். வெளியே பயணம் செல்வதற்கே பயமாக இருக்கும். நாக்கு எரிச்சல், வயிற்றுப் புண் உபாதை போன்றவை பித்தம் கெட்டுள்ளதைத் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு உபாதைக்கும் நீங்கள் ஆங்கில மருந்துகள் சாப்பிடுவதால், இடைச் செருகலாக ஆயுர்வேத மருந்துகளுக்கும் ஆங்கில மருந்துகளுக்குமிடையே குறைந்தது ஒரு மணி நேரமாவது இடைவெளி தேவை. அப்படிப் பார்த்தால், நாள் முழுதும் மருந்தும் கையுமாக நீங்கள் இருக்க வேண்டிய நிலை ஏற்படும். அதனால் உணவுடன் சேர்த்துச் சாப்பிடக்கூடிய ஆயுர்வேத மருந்துகள் இருந்தால் உங்களுக்கு எந்நேரமும் மருந்து சாப்பிட வேண்டிய அவசியமிருக்காது.