டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

நெஞ்சம் மறப்பதில்லை: புலவரின் கோபமும் தேவாரம் ஜமீனும்!

உயர்ந்த முன் வாசல் சுவர்கள்... முற்றத்தின் வலது புறத்தில் முக்கிய பிரமுகர்கள் அமர்வதற்காக பயன்படுத்திய ஓடும் சுண்ணாம்பும் கலந்த கூரை கட்டடம். எப்போது இடிந்து விழுவோம் என காரை பெயர்ந்து காணப்படும் ஜமீன

News image
Updated On :28 டிசம்பர் 2023, 3:57 pm

ஜெயப்பாண்டி

உயர்ந்த முன் வாசல் சுவர்கள்... முற்றத்தின் வலது புறத்தில் முக்கிய பிரமுகர்கள் அமர்வதற்காக பயன்படுத்திய ஓடும் சுண்ணாம்பும் கலந்த கூரை கட்டடம். எப்போது இடிந்து விழுவோம் என காரை பெயர்ந்து காணப்படும் ஜமீன் மாளிகை மேல்தளம்... இப்படியாகக் காட்சி தருகிறது தேவாரம் ஜமீன் அரண்மனை.

தேவாரம் ஜமீனின் ஆரம்பகாலம் 1750 எனக்கூறப்படுகிறது. சுமார் 15 கிராமங்களை உள்ளடக்கிய இந்தப் பகுதியின் முதல் ஜமீன் பொறுப்பை கருத்தமுத்துசாமி நாயக்கர் வகித்தார். அவருக்குக் குழந்தை இல்லை. இதனால் அவரது தம்பி சிவத்த முத்துசாமி நாயக்கர் பொறுப்புக்கு வந்தார். இவரது மூத்த மகன் கொண்டபொம்மு நாயக்கர் ஜமீன் ஆனார்.

இவரது மகன் சண்முகவல்லகொண்டபொம்மு நாயக்கர் ஜமீன் ஆனார். அவர்களுக்கு மகனும், மகளும் இருந்தனர்.  இவரது காலத்தில் ஜமீன் அரண்மனைக்கு மாம்பழக் கவிராயர் வந்துள்ளார். அவர் சிலேடையில் ஜமீன்தாரைப் பார்த்து ""வாடா'' (எப்போதும் வாடாத முகத்துடன் இருப்பவர் என்ற பொருள்பட) என அழைத்துப் பாட முயன்றார். இதைக் கேட்ட ஜமீன் அரண்மனை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்து, ஜமீன்தாரையே "வாடா' என அழைப்பதா எனக் கேட்டு புலவரை அவமானப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த மாம்பழக் கவிராயர், "தலைமகனும் வாழா, தலையூத்தும் வாழா' எனப்பாடினாராம். இதையடுத்து, தேவாரம் பகுதிக்கு ஆண்டுதோறும் தண்ணீர் அளித்து வந்த தலையூத்தில் தண்ணீர் வற்றிப் போனதாகவும், ஜமீனுக்கும் தலைப்பிள்ளையாக ஆண் பிள்ளை இல்லாது போனதாகவும் ஜமீன் வாரிசுகள் கூறுகின்றனர்.

இதேபோல, மாம்பழக் கவிராயருக்கு உணவு தர மறுத்துவிட்டனராம். இதையடுத்து அவர், "உக்ராணத்து சுப்பையனும் ஒன்று தந்தால் ஒன்று தாரா, அக்கிரகாரத்து சாப்பா

டும் அப்படியே' என ஜமீன் சமையல் காரரையும், அக்கிரகாரம் பகுதியையும் ஒப்பிட்டுப் பாடிச்சென்றதாகவும் கூறப்படுகிறது.

புலவர் பாடிச்சென்ற சிறிது நாளில், சண்முகவல்லப கொண்டபொம்மு நாயக்கர் மகன் துரைப்பாண்டி நாயக்கர் இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து சண்முகவல்லப கொண்டபொம்மு நாயக்கர் மகள் பங்காரம்மாளை மன்னார்கோட்டை ஜமீன் மாளிகையில் திருமணம் முடித்தனர். அவரை மணம் முடித்த மன்னார்கோட்டை ஜமீன் மகனும் இறந்தார்.

ஜமீனில் பயன்படுத்தப் பட்ட பொருள்கள்: கலைநயம் மிக்க பெட்டி

இதனால், பங்காரம்மாள் தேவாரத்துக்கே திரும்பிவந்தார். அங்கு ஜமீன் பொறுப்பு அதிகாரத்தை வகித்து 30 ஆண்டுகள் ஜமீனை நடத்திவந்தார். அவருக்குப் பிறகு அவரது தாய் எர்ரம்மாள் ஜமீன் பொறுப்பைக் கவனித்தார். எர்ரம்மாளுக்குப் பிறகு அவரது சகோதரரின் தம்பி மகன் தங்கசாமி என்பவருக்கு ஜமீன் பொறுப்பு எழுதித் தரப்பட்டுள்ளது.

தங்கசாமிதான் தேவாரத்தின் 1943 வரையில் ஜமீன் பொறுப்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஊர் கூடி, ஜமீனுக்கு தங்கசாமி நேரடி வாரிசாக இல்லாத காரணத்தால், சிவத்த முத்துசாமி நாயக்கரின் இளைய மகனான காமேஸ்வர நாயக்கரின் மகள் வயிற்று பிள்ளை, பேரன்களை வாரிசாக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

அதன்படியே துரைராஜா என்ற தனிப்புலிசாமி நாயக்கர், செல்லப்பாண்டியன், தங்கப்பாண்டி என்ற காமேஸ்வர நாயக்கர், விஜயராஜா என்ற பரமசிவம் மற்றும் துரைக்கண் என்ற வேல்ராஜா ஆகியோர் ஜமீன் பரம்பரையாக வந்தனர். துரைராஜா இறந்த பிறகு,

ஜமீன் மாளிகைப் பொறுப்பை செல்லப்பாண்டியும், பின்னர் தங்கப்பாண்டி என்ற காமேஸ்வர நாயக்கரும் கவனித்து வருகிறார்.

இந்த ஜமீனில் சண்முக கொண்டவல்லப பொம்மு நாயக்கருக்கு 9 மனைவியர் எனக்கூறப்படுகிறது. இதனால் அவர் ஜமீனை தேவகோட்டை ஜமீனுக்கு அந்தக் காலகட்டத்திலேயே | 3.75 லட்சத்துக்கு அடகு வைத்துவிட்டதாகவும், அதைமீட்க லண்டன் வரை வழக்கு நடந்ததாகவும் கூறுகிறார் காமேஸ்வர நாயக்கர்.

தேவாரம் ஜமீன் மாளிகையில் தற்போது வில்வண்டி உள்ளது.

ஜமீன் பயன்படுத்திய வாள், கிராமபோன் தட்டு, தானாக திறந்து மூடிக்கொள்ளும் விலை உயர்ந்த மரப்பெட்டி என பல அரிய பொக்கிஷங்கள் உள்ளதைக் காணமுடிகிறது.

தேவாரம் பழைய ஜமீன் மாளிகை அருகே பெரிய பங்களா கட்டி, அதில்தான்  ஜமீன் பரம்பரையில் வந்த தங்கப்பாண்டி தற்போது குடியிருந்து வருகிறார். பிரம்மாண்டமான நவீன அரண்மனை போன்ற இந்த வீட்டில் சில அரிய ஜமீன் காலத்துப் பொருள்களையும் வைத்துப் பாதுகாத்தும் வருகிறார்.

ஜமீனில் பயன்படுத்தப் பட்ட பொருள்கள்: கலைநயம் மிக்க பெட்டி கிராமபோன் கருவி

இவருக்கு 4 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். இவர்களில் கிருஷ்ணகுமார் என்பவர் தங்கப்பாண்டியனுடன் வசிக்கிறார். விவசாயம் செய்துவருகின்றனர். தனியார் நிறுவனம், விவசாயம் என வசதியாகவே அனைவரும் இருப்பதைக் காணமுடிகிறது. ஜமீன் பரம்பரையினர் வசதியான நிலையில் இருந்தாலும், ஜமீன் அரண்மனை என்னவோ, எப்போது இடிந்து விழுமோ என்ற மோசமான நிலையில்தான் இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.