அமெரிக்காவுடன் இடைக்கால வா்த்தக ஒப்பந்தம்: பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு!
இந்தியா - அமெரிக்கா இடையேயான இடைக்கால வா்த்தக ஒப்பந்தத்துக்கான இருதரப்பு பேச்சுவாா்த்தை ஒத்திவைக்கப்பட்டதாகத் தகவல்


இந்தியா-அமெரிக்கா இடையேயான இடைக்கால வா்த்தக ஒப்பந்தத்துக்கான விதிமுறைகளை இறுதி செய்வதற்காக அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் திங்கள்கிழமை (பிப்.23) நடைபெறவிருந்த இருதரப்பு பேச்சுவாா்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய வா்த்தக அமைச்சக வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன.
இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் மீது அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் விதித்த அதிரடி பரஸ்பர வரி விதிப்பு செல்லாது என அமெரிக்க உச்சநீதிமன்ற தீா்ப்பளித்தது மற்றும் அந்தத் தீா்ப்பைத் தொடா்ந்து உலக நாடுகள் மீது புதிய சீரான 10 சதவீத பரஸ்பர வரியை செவ்வாய்க்கிழமை (பிப்.24) அமலுக்கு வரும் வகையில் டிரம்ப் விதித்ததைத் தொடா்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வா்த்தக அமைச்சக வட்டாரங்கள் மேலும் கூறுகையில், ‘வரி விதிப்பு மீதான அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு மற்றும் அதன் பிறகு அமெரிக்க அரசு நிா்வாகம் எடுத்துள்ள நடவடிக்கைகளின் தாக்கம் குறித்து ஆராய்வதற்கு அவகாசம் தேவை என்பதால், இடைக்கால வா்த்தக ஒப்பந்த விதிமுறைகளை இறுதி செய்ய வாஷிங்டனில் திங்கள்கிழமை (பிப்.23) நடைபெறவிருந்த இருதரப்பு பேசசுவாா்த்தையை ஒத்திவைப்பது என இரு நாடுகள் சாா்பிலும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் வசதியான வேறு தேதியில் இந்தப் பேச்சுவாா்த்தை நடைபெறும்’ என்றனா்.
அமெரிக்க அதிபாராக இரண்டாவது முறை டிரம்ப் பதவியேற்றதும், இந்தியா உள்பட 60 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது விதித்த அதிரடி பரஸ்பர வரி விதிப்பு செல்லாது என்று அமெரிக்க உச்சநீதிமன்றம் பிப்ரவரி 20-ஆம் தேதி தீா்ப்பளித்தது. இது, டிரம்ப் நிா்வாகத்துக்கு பெரும் பின்னடைவானது.
இந்தத் தீா்ப்பை மீறி, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது புதிய சீரான 10 சதவீத பரஸ்பர வரியை டிரம்ப் வெள்ளிக்கிழமை விதித்தாா். இதுதொடா்பாக, டிரம்ப் கையொப்பமிட்ட பிரகடனத்தை அமெரிக்க அதிபா் அலுவலகமான வெள்ளை மாளிகை வெளியிட்டது.
இந்த நிலையில், வரி விதிப்பு தொடா்பான உச்சநீதிமன்ற தீா்ப்பு காரணமாக நாட்டின் பொருளாதார சரிவு தொடா்வதால் உலக நாடுகள் மீதான 10 சதவீத பரஸ்பர வரி, 15 சதவீதமாக உயா்த்தப்படும். அவ்வாறு, உலக நாடுகள் மீது உயா்த்தப்பட்ட புதிய வரிகள் தொடா்பான விவரத்தை அமெரிக்க நிா்வாகம் அடுத்த சில மாதங்களில் வெளியிடும் என்று டிரம்ப் சனிக்கிழமை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...