மாற்றம் பெறும் மதிப்பீட்டு முறை!
நிகழ் கல்வியாண்டு முதலே சிபிஎஸ்இ பிளஸ் 2 வகுப்பு மாணவர்களின் தேர்வு விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணியை எண்மமயமாக்கம் செய்ய உள்ளது.


நிகழ் கல்வியாண்டு (2025-26) முதலே மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) பிளஸ் 2 வகுப்பு மாணவர்களின் தேர்வு விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணியை எண்மமயமாக்கம் (டிஜிட்டல்) செய்ய உள்ளது.
இந்த மதிப்பீட்டு முறை ஆன் ஸ்கீரின் மார்க்கிங் (ஓ.எஸ்.எம்.) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் பணிக்காக விரிவான சுற்றறிக்கை அனுப்பப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு பணிகள் முழுமையாக எண்மமயமாவதால் மதிப்பீடு செய்வதிலோ, மதிப்பெண்களைக் கூட்டுவதிலோ எவ்விதமான தவறுதல்களுக்கும் இடமிருக்காது என்ற அடிப்படையில் நிகழாண்டு முதல் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறையும் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நடைமுறைகளின்படி மாணவர்களின் விடைத்தாள்கள் பல்வேறு மதிப்பீட்டு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். ஆசிரியர்கள் மதிப்பீடு செய்ய அந்த மையங்களுக்குச் செல்வர். அவ்வாறு மதிப்பீடு செய்வோரின் பணிகளைக் கண்காணிக்க பல்வேறு அலுவலர்களும் செயல்படுவர். ஒவ்வொரு தாளாக மதிப்பீடு செய்து மதிப்பெண்களைக் கூட்டிப் போடுவர்; தேவைப்படும் நேரங்களில் மேற்பார்வை செய்வோர் தலையிடுவர்.
இவ்வாறாக மதிப்பீடு செய்யப்படும் மதிப்பெண்கள் பட்டியலாகி கணினியில் பதிவேற்றம் செய்யப்படும். இதில் ஏற்படும் தவறுகளால் மாணவர்களின் மதிப்பெண்கள் குறையும் நிலையில், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிப்பர். அவ்வாறு மறுகூட்டல் / மறுமதிப்பீடு செய்வோரின் தாள்கள் மட்டும் ஸ்கேன் செய்து அனுப்பப்படும். இவ்வாறு பெறப்படும் விடைத்தாள்களில் மதிப்பெண்கள் கூடுதலாகச் சரிபார்க்கப்பட்டு ஒருவேளை தவறுகள் இருக்கும்நிலையில் சரி செய்யப்படும். கூட்டல் சரியாகத்தான் இருக்கிறது; ஆனால், மதிப்பெண் அளித்ததுதான் சரியில்லை என்றால் அதற்கான மறுமதிப்பீட்டு வழிமுறைகளும் உள்ளன.
தற்போதைய புதிய முறையின்படி, எந்த ஆசிரியரும் மதிப்பீடு செய்வதற்காக எங்கும் பயணிக்க வேண்டியதில்லை. அவரவர் பள்ளியிலேயே அவர்களுக்கான இணைய முகவரியில் கடவுச்சொல்லுடன் இணைந்து மதிப்பீட்டுப் பணியை மேற்கொள்ளலாம். அவ்வாறே மதிப்பீட்டுத் தாள்களும் எங்கும் பயணிக்காது. அனைத்து மாணவர்களின் விடைத்தாள்களும் ஸ்கேன் செய்யப்பட்டு குறிப்பிட்ட ரகசியத் தன்மையுடன் பதிவேற்றம் செய்யப்படும்.
மதிப்பீடு செய்யும் ஆசிரியர்கள் அவரவர் பள்ளியில் இருந்தவாறே கணினியிலேயே மதிப்பீடு செய்யும் பணிகளை மேற்கொள்ளலாம். அவ்வாறான மதிப்பீடுகளை எவ்வாறு மேற்கொள்வது என்பதற்கான மாதிரி மதிப்பீட்டுப் பயிற்சிகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் செய்துள்ளது. மதிப்பீடு எண்ம முறையில் மேற்கொள்ளப்படுவதால் அனைத்து விடைகளும் மதிப்பீடு செய்யப்படுவதும் அதற்கான மதிப்பெண்கள் உரிய இடத்தில் பதிவு செய்யப்படுவதும் உறுதி செய்யப்படும் என்று சொல்லப்படுகிறது.
இது எண்மமயமென்பதால் அனைத்துப் படிநிலையும் முழுமை அடைந்தால் மட்டுமே விடைத்தாள் மதிப்பீடு நிறைவடையும் என்பதால், அனைவரும் கவனமாக தகவல்களை உள்ளீடு செய்வர் என்று நம்புவோம். அதுபோலவே இருக்கும் இடத்திலிருந்தே எந்த விடைத்தாள் மதிப்பீட்டையும் உயர் அதிகாரிகள் பார்வையிட முடியும் என்பதால், மதிப்பீடு செய்வோர் கூடுதல் பொறுப்புடன் செய்வர் என்பதையும் எதிர்பார்க்கலாம். மேலும், கூட்டலில் தவறு இருக்காது என்பதையும் உறுதியாகச் சொல்ல இயலும். அனைத்தும் எண்மமயமென்பதால், காகிதப் பயன்பாடும் ஓரளவுக்குக் குறையும்.
இவ்வளவு சாதகமான அம்சங்கள் இருப்பினும், இதிலும் கவலை அளிக்கக்கூடிய அம்சங்கள் இருக்கவே செய்கின்றன. சுமார் 20 லட்சம் தேர்வர்கள் நிகழாண்டு தேர்வு எழுத உள்ளனர். இந்த 20 லட்சம் தேர்வர்களின் ஒரு கோடிக்கும் அதிகமான விடைத்தாள்களை ஸ்கேன் செய்வது என்பது எவ்வளவு பெரிய சவாலான பணி. இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. மேலும், அந்தந்த பள்ளிகளே இதைச் செய்ய வேண்டும் என்றால், அந்தந்த பாட ஆசிரியர்களே செய்ய வேண்டிய நிலையும் ஏற்படலாம்.
கல்வியில் அனைத்துப் பணிகளையும் இயந்திரமயமாக்குவதும் சரியான அணுகுமுறை அல்ல. அந்தப் பணிகளையும் ஆசிரியர்களையே மேற்கொள்ள வைப்பதும் சரியல்ல. பிளஸ் 2 வகுப்புக்கான இந்த சீர்திருத்தம் விரைவிலேயே பத்தாம் வகுப்புக்கும் பரவலாக்கப்படும். இதன் நிழல் மழலையர் வகுப்புவரை விரைவிலேயே படரும்.
கல்வித்தளத்தில் நடைபெறும் அனைத்து விதமான பணிகளும் ஒவ்வொரு வகையில் ஆசிரியர்கள் தங்களைப் புதுப்பித்துக் கொள்வதற்கான வாய்ப்புகள்தான். ஏற்கெனவே அறிதிறன் பேசியிலும் கணினியிலும் ஆழ்ந்திருப்போர் இவ்வாறான பயணங்களில் புதுப்புது நண்பர்களைச் சந்தித்து அளவளாவும் வாய்ப்பும் அருகிப் போகும். எண்மமயமாவதால் கூட்டலில் தவறு இருக்காது; ஆனால், கல்வியின் முக்கியவளமான மனிதர்கள் கூடிப் பழகுவதற்கான வாய்ப்பு அருகிப்போவது நல்ல ஏற்பாடல்ல.
இயந்திரமயமான உலகில் எண்களாலேயே மதிப்பிடப்படுவதால், எண்மமயமாக்கலுக்கு ஆதரவு வலுக்கவே செய்யும். ஆனால், இந்த நிழல் தொடக்கநிலை வகுப்புகளுக்குள் நுழைவதையாவது தள்ளிப் போட இயலுமா என்று பார்ப்போம்.
ஒரு முறை ஐன்ஸ்டீனிடம் மாணவர் ஒருவர், அறிஞரே, இது கடந்த ஆண்டு கேட்கப்பட்ட கேள்விதானே என்று கேட்டாராம். அதற்கு ஐன்ஸ்டீன், ஆம், கேள்வி என்னவோ அதுதான்; ஆனால் விடை வேறானது என்றாராம். ஆம், மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருப்பதுதானே கல்வி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...