டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

திரைக்கதிர்: என்னை மட்டும் கட்டம் கட்டுவது ஏன்?

சல்மான்கானுடன் 'ரெடி' ஹிந்திப் படத்துக்காக இலங்கை சென்றுள்ள அஸினுக்குத் தடை விதிக்க தமிழ்த் திரைப்பட சங்கங்கள் தயாராகி வருகின்றன. இதனால் விஜய்யுடன் அவர் நடித்து வரும் 'காவல்காரன்' படத்துக்கும் சிக்கல்

News image
Updated On :27 டிசம்பர் 2023, 4:45 pm

மனோஜ் கிருஷ்ணா

சல்மான்கானுடன் 'ரெடி' ஹிந்திப் படத்துக்காக இலங்கை சென்றுள்ள அஸினுக்குத் தடை விதிக்க தமிழ்த் திரைப்பட சங்கங்கள் தயாராகி வருகின்றன. இதனால் விஜய்யுடன் அவர் நடித்து வரும் 'காவல்காரன்' படத்துக்கும் சிக்கல் எழுந்துள்ளது. இந்தப் படத்துக்கும் தடை வருமா? எனக் கேட்டபோது... 'நாங்கள் எவ்வளவோ கூறியும் அதையும் மீறி இலங்கைக்குப் படப்பிடிப்புக்குச் சென்றுள்ள அஸினுக்கு நிச்சயம் தடை விதிப்போம். ஆனால் அந்தத் தடை அவரை மட்டுமே பாதிக்கும் வகையில் இருக்க வேண்டும்; அவரால் மற்றவர்கள் பாதிக்குமளவுக்கு இருக்காது' என சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் கூறினர். இதுபற்றி கேட்டால்... ''நான் ஒரு நடிகை; நான் ஒப்பந்தமான ஒரு படத்தின் படப்பிடிப்பை இந்த இடத்தில்தான் நடத்த வேண்டும் என கண்டிஷன் போட முடியாது. அது தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் ஆகியோரின் முடிவில்தான் இருக்கிறது. நானாக விரும்பி இலங்கைக்குச் செல்லவில்லை' என்று கூறும் அஸின் தரப்பு 'இலங்கைக்குச் சென்று இந்திய அணி கிரிக்கெட் விளையாடுகிறது. தமிழகத்திலிருந்து பலர் இலங்கைக்கு சுற்றுலா செல்கின்றனர். இந்திய அரசே இலங்கையில் நிவாரணப் பணிகளுக்கு உதவி வருகிறது; நிலைமை இப்படி இருக்க என்னை மட்டும் கட்டம் கட்டுவது ஏன்?' எனவும் கேள்வி எழுப்புகிறது.

காதல் கல்வெட்டு!

இயக்குநர் அகத்தியனிடம் உதவியாளராகப் பணியாற்றிய வீரபாண்டியன் இயக்கியுள்ள புதிய படம் 'அவர்களும் இவர்களும்'. தன்னுடைய உதவியாளரின் தொடர்ச்சியான வற்புறுத்தலுக்கு இணங்கி இதில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அகத்தியன். படத்தைப் பற்றி கேட்டபோது...

''படித்துவிட்டு வெளிநாட்டுக்குச் செல்ல நினைக்கும் நாயகனின் வாழ்க்கையில் காதலால் ஏற்படும் மாற்றங்களைச் சொல்வதுதான் கதை. இதில் எந்த மசாலாத்தனங்களும் இல்லாமல் காதலை யதார்த்தமாகக் காட்டியிருக்கிறோம். சமூகத்தின் ஒரு சாராரை 'அவர்கள்' எனவும் இன்னொரு சாராரை 'இவர்கள்' எனவும் உருவகப்படுத்தி திரைக்கதையை அமைத்துள்ளதால் படத்துக்கு இந்த தலைப்பை வைத்துள்ளோம். யார் இவர்கள்? யார் அவர்கள்? என்பதுதான் படத்தின் சுவாரஸ்யம். இந்தப் படம் என்னுடைய குருவின் 'காதல் கோட்டை'யாக இல்லாவிட்டாலும் காலத்தால் அழிக்க முடியாத காதல் கல்வெட்டாக இருக்கும்'' என்றார் இயக்குநர் வீரபாண்டியன்.

திரையில் ஒரு வண்டல் இலக்கியம்!

தஞ்சை மண்ணில் வாழ்ந்த விவசாயிகளின் வாழ்க்கையைப் பதிவு செய்துள்ள புதிய படம் 'நெல்லு'. 1968-ம் ஆண்டில் நடப்பதுபோல் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை எம்.சிவசங்கர் இயக்குகிறார். சத்யாவுடன் புதுமுகம் பாக்யாஞ்சலி கதாநாயகியாக நடிக்கிறார். இவர், பாரதிராஜாவின் மகன் மனோஜின் மனைவி நந்தனாவின் தங்கை. 1969-ம் ஆண்டு பின்னணியில் நிகழும் இந்தக் கதைக்கேற்ற படப்பிடிப்பு தளங்கள், தஞ்சையில் அமையாததால் கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள வன்னிபுரம் என்ற இடத்தில் நூற்றுக்கணக்கான குடிசைகள் கொண்ட ஒரு கிராமத்தை செட் போட்டு படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. 'மதராஸ பட்டினம்' போல பீரியட் ஃபிலிம் என்பதால் பட்ஜெட்டில் பெரும்பகுதி கலை இயக்கத்துக்கும் காஸ்ட்யூமுக்கும் செலவிடப்பட்டுள்ளது. பாடலிசையும் பழமையைப் பிரதிபலிப்பது போன்றே அமைக்கப்பட்டுள்ளது. உலகளாவிய பிரச்னையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள 'நெல்லு' படம் - திரையில் ஒரு வண்டல் இலக்கியமாகத் திகழும் என்கிறார் தயாரிப்பாளர் பி.செந்தில்குமார்.

ஆக்ஷன் நடனம்!

ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் அர்ஜுன், ஹரிப்ரியா நடிக்கும் 'வல்லக்கோட்டை' படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு போட்டிப் பாடல் இடம்பெறுகிறது. இதில் அர்ஜுன், பிரபல மாடலும் ஹிந்தி நடிகையுமான சீமாகேர் ஆகியோர் போட்டிபோட்டு நடனமாடியிருக்கிறார்கள். ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் 60 லட்ச ரூபாய் செலவில் ஒரு பிரமாண்டமான மார்க்கெட் செட் அமைக்கப்பட்டு இந்தப் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. தபூசங்கர் எழுதிய 'சரக்கு ரெடியா ஏ... சரக்கு ரெடியா, ஏ குட்டி - கம்மு நீ சேலை கட்டிய - சிம்மு...' என்ற இந்தப் பாடலுக்கு தினா இசையமைத்துள்ளார். 'இதற்காகப் புதுமையான காம்பினேஷனில் நளினமான நடன அசைவுகளை 'ஃபாஸ்ட் பீட்'டில் வித்தியாசமாகப் பயன்படுத்தியிருக்கிறோம். இதுவரை அர்ஜுன் இப்படி ஆடியதில்லை; அனைத்து சேனல்களின் டாப் டென் பாடல் வரிசையிலும் இந்தப் பாடல் முதலிடம் பெறும்' என்கிறார் நடன இயக்குநர் ராபர்ட்.

ஒழுக்கமான வில்லன்!

தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய புது வரவுகளில், அதிலும் வில்லன் நடிகர்களில் குறிப்பிடத்தக்க கவனம் பெற்று வருபவர் சேரன்ராஜ். ஏவி.எம்.மில் படப்பிடிப்பில் இருந்தவரைச் சந்தித்து அவருடைய சினிமா பிரவேசம் பற்றி கேட்டபோது...

''என் தாத்தா, எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். என் சிறு வயதிலிருந்தே எம்.ஜி.ஆர். படங்களைக் காட்டி அவரைப் போல வர வேண்டும் என்று வளர்த்தார். வாள் சண்டை, சிலம்பம், குதிரையேற்றம் உள்ளிட்ட பல பயிற்சிகளைக் கற்றுக் கொடுத்தார். சேலத்தில் பி.இ. முடித்த பிறகு பல வேலை வாய்ப்புகள் வந்தாலும் என் மனம் முழுவதும் சினிமாதான் நிரம்பியிருந்தது. குடும்பத்தாரை சமாதானப்படுத்தி சென்னைக்கு வந்து கூத்துப்பட்டறையில் இரண்டு ஆண்டுகள் பயிற்சி பெற்றேன். எஸ்.பி.ஜனநாதன் மூலம் 'ஈ' படத்தில் அறிமுகமானேன். அதையடுத்து 'நேபாளி' படத்தில் என்னுடைய கொடூரத்தனமான வில்லத்தனம் பெரிய அளவில் பேசப்பட்டது. 'அம்பாசமுத்திரம் அம்பானி' என்னுடைய தனித்துவத்தை வெளிக்காட்ட உதவியது. தற்போது 'கலவரம்', 'ராமர்', 'பாணா காத்தாடி', 'அகம் புறம்', 'ஐயன்', 'தொட்டுப்பார்' உள்பட 10-க்கும் மேற்பட்ட படங்களில் முக்கிய வில்லனாக நடித்து வருகிறேன். இப்போதைய சினிமாத்துறையை நன்கு புரிந்துகொண்டதால் கதாநாயகன் ஆகும் திட்டத்தையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி வில்லன் ஆகிவிட்டேன். ஹீரோவை விட வில்லனுக்குத்தான் நடிப்பை வெளிப்படுத்தக் கூடிய வாய்ப்புகள் அதிகம் என்பது என் கருத்து. இதுவரை நடித்த எல்லா வில்லன் நடிகர்களும் எனக்கு ரோல் மாடல்கள்தான். அதை விட முக்கியம் பெரும்பாலான வில்லன் நடிகர்கள் கட்டிக் காப்பாற்றிய ஒழுக்கத்தைப் பின்பற்ற வேண்டும் என்பதுதான்'' என்றவரிடம் 'எது மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க விருப்பம்' என்று கேட்டால் 'என் திரை வாழ்க்கையில் ஒரு முறையாவது மீனவனாக நடித்து விட வேண்டும்' என்கிறார்.

அண்ணையா கருணாஸ்!

'அம்பாசமுத்திரம் அம்பானி' படத்தில் கருணாஸýடன் ட்ரை சைக்கிளில் அமர்ந்து நொடிக்கொரு தரம் 'அண்ணையா அண்ணையா...' என அழைத்து அவருடன் நகைச்சுவைக் காட்சிகளிலும் சென்மெண்ட் காட்சிகளிலும் சிறப்பான பங்களிப்பை ஆற்றியவர் சங்கர். அவரிடம் பேசியபோது...

''மதுரை திருமங்கலத்திலிருந்து சென்னைக்கு வந்த நான், பாக்யராஜ் சார் அலுவலகத்தில் சிறிது காலம் பணியாற்றினேன். அதன்பிறகு பாக்யராஜ் மூலம் லிங்குசாமியின் 'ஜி' படத்தில் அஜித்துடன் நடித்தேன். அதையடுத்து பல படங்களில் நடித்தாலும் 'கருப்பசாமி குத்தகைதாரர்' படத்தில் வடிவேலுவுடன் நடித்த காமெடி காட்சிகள் பெரிய வரவேற்பைப் பெற்றன. 'அம்பாசமுத்திரம் அம்பானி' எனக்கு நல்ல நடிகன் என்ற அந்தஸ்தைப் பெற்றுத் தந்துள்ளது. இந்த ஒரே படத்தின் மூலம் மட்டும் எனக்கு ஆறு புதிய வாய்ப்புகள் கிடைத்துள்ளன. தற்போது 'முரட்டுக்காளை', 'விருந்தாளி', 'சந்திரபாபு', 'ஆனந்த தொல்லை' உள்பட 10 படங்களில் நடித்து வருகிறேன். என்னுடைய திரை வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தித் தந்த கருணாஸ், எனக்கு எப்போதுமே (அண்ணன்) அண்ணையாதான்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.