டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

News image
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி - AP
Updated On :22 பிப்ரவரி 2026, 5:45 pm

இணையதளச் செய்திப் பிரிவு

டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் அகமதாபாதில் நடைபெற்ற சூப்பர் 8 சுற்றின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடின.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி!

டாஸ் வென்று முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது.

தென்னாப்பிரிக்க அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக அய்டன் மார்க்ரம் மற்றும் குயிண்டன் டி காக் களமிறங்கினர். டி காக் 6 ரன்களிலும், மார்க்ரம் 4 ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். அதன் பின், ரியான் ரிக்கல்டான் 7 ரன்களில் ஆட்டமிழக்க, தென்னாப்பிரிக்க அணி 20 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதனையடுத்து, டேவிட் மில்லர் மற்றும் டெவால்ட் பிரேவிஸ் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அதிரடியாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டது. வருண் சக்கரவர்த்தியின் பந்துவீச்சில் டேவிட் மில்லர் மற்றும் பிரேவிஸ் இருவரும் பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களை விளாசினர். இந்த பார்ட்னர்ஷிப்பை ஷிவம் துபே உடைத்தார். டெவால்ட் பிரேவிஸ் சிக்ஸர் அடிக்கும் முயற்சியில் ஆட்டமிழந்தார். அவர் 29 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.

அதன் பின், டேவிட் மில்லருடன் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த இணை அதிரடியைத் தொடர்ந்தது. அதிரடியாக விளையாடிய டேவிட் மில்லர் 35 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். மறுமுனையில் அதிரடியில் அசத்திய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 24 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். ஹார்திக் பாண்டியா வீசிய கடைசி ஓவரின் கடைசி இரண்டு பந்துகளிலும் அவர் சிக்ஸர் விளாசி அசத்தினார்.

இந்தியா தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜஸ்பிரித் பும்ரா 4 ஓவர்களில் வெறும் 15 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அர்ஷ்தீப் சிங் இரண்டு விக்கெட்டுகளையும், வருண் சக்கரவர்த்தி மற்றும் ஷிவம் துபே தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

பந்துவீச்சில் தென்னாப்பிரிக்கா அசத்தல்! அபார வெற்றி!

188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, 18.5 ஓவர்களில் 111 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதன் மூலம், தென்னாப்பிரிக்க அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷன் மற்றும் அபிஷேக் சர்மா களமிறங்கினர். ஆட்டத்தின் முதல் ஓவரை தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் அய்டன் மார்க்ரம் வீசினார். அவரது பந்துவீச்சில் இஷான் கிஷன் 0 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அவரைத் தொடர்ந்து, திலக் வர்மா ஒரு ரன்னில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் தொடர்ச்சியாக விளையாடிய மூன்று ஆட்டங்களிலும் டக் அவுட்டான அபிஷேக் சர்மா, 12 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். வாஷிங்டன் சுந்தர் 11 ரன்களிலும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். சீரான இடைவெளியில் இந்திய அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஷிவம் துபே மற்றும் ஹார்திக் பாண்டியா பார்ட்னர்ஷிப் இந்திய அணியின் கடைசி நம்பிக்கையாக இருந்தது.

ஷிவம் துபே - ஹார்திக் பாண்டியா பார்ட்னர்ஷிப்பை கேசவ் மகாராஜ் உடைத்தார். ஹார்திக் பாண்டியாவின் விக்கெட்டினை அவர் வீழ்த்தினார். ஹார்திக் 17 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அந்த ஓவரில் ஹார்திக் பாண்டியா மட்டுமின்றி, ரிங்கு சிங் (0 ரன்) மற்றும் அர்ஷ்தீப் சிங்கின் (ஒரு ரன்) விக்கெட்டினையும் மகாராஜ் வீழ்த்தினார். இதன் மூலம், அவர் ஓரே ஓவரில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

மிகவும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிவம் துபேவும் 37 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

தென்னாப்பிரிக்கா தரப்பில் மார்கோ யான்சென் 4 விக்கெட்டுகளையும், கேசவ் மகாராஜ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். கார்பின் பாஷ் இரண்டு விக்கெட்டுகளையும், கேப்டன் அய்டன் மார்க்ரம் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசிய டேவிட் மில்லருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.