டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

திரைக்கதிர்: நயன்தாராவா? நடனதாராவா?

இப்போதைய சூழ்நிலையில் நயன்தாராவிடம் "பாஸ் என்கிற பாஸ்கரன்' படம் மட்டுமே கைவசம் உள்ளது. அவரை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் தயக்கம் காட்டி வருகிறார்கள். முதல் காரணம்... க்ளாமராக நடிக்

News image
Updated On :27 டிசம்பர் 2023, 4:33 pm

மனோஜ் கிருஷ்ணா

இப்போதைய சூழ்நிலையில் நயன்தாராவிடம் "பாஸ் என்கிற பாஸ்கரன்' படம் மட்டுமே கைவசம் உள்ளது. அவரை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் தயக்கம் காட்டி வருகிறார்கள். முதல் காரணம்... க்ளாமராக நடிக்க மாட்டேன் என்ற நயன்தாராவின் கண்டிஷன். இரண்டாவது காரணம்... எப்போது வேண்டுமானாலும் நடனப் புயலைத் திருமணம் செய்துகொள்ளலாம். அப்படி நடந்தால் அது தங்கள் படங்களின் படப்பிடிப்பைப் பாதிக்கும் என்று பரவும் தகவல்கள்தான். ஆனால்... "இதைப் பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டாம். தமிழில் இல்லாவிட்டால் என்ன... நான் இயக்கும் ஹிந்திப் படங்களில் நாயகி ஆக்கிவிடுகிறேன்' என அவருக்கு வேண்டியவர் தைரியமூட்டி வருகிறார்.

கார்த்திக்கு மகுடம்!

"வெண்ணிலா கபடிகுழு' சுசீந்திரன் இயக்கத்தில் கார்த்தி, காஜல் அகர்வால் நடித்துள்ள "நான் மகான் அல்ல' படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல் படத்தில் அருமையான தலைப்பை வைத்துவிட்டு அடுத்த படத்தில் ரஜினி பட டைட்டிலைப் பயன்படுத்தியிருக்கிறீர்களே என கேட்டபோது...

"இந்தப் படத்துக்காக சுமார் 250-க்கும் மேற்பட்ட டைட்டில்களைப் பரிசீலித்தோம். ஆனால் எதுவுமே நான் நினைத்தது போலவும் கதைக்குத் தொடர்பாகவும் அமையவில்லை. அப்படி என்னதான் டைட்டில் வேண்டும் என தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கேட்டார். "நான் மகான் அல்ல' போல ஒரு டைட்டில் வேண்டும் என்றேன். அதையே வைத்துவிடுவோம் என அவர் உள்பட எல்லோரும் கூறினர். அதனால்தான் இந்த டைட்டிலைப் பயன்படுத்தியுள்ளோம். படத்தைப் பார்க்கும்போது இதை விட பொருத்தமான டைட்டில் வைக்க முடியாது என்பதை உணருவீர்கள். இது சென்ûனையில் வாழும் சராசரி இளைஞனின் கதை. இதுவரை சென்னையின் முக்கிய வீதிகளிலும் இடங்களிலும் யாரும் படமாக்காத ஆனால் நாம் தினசரி கடந்துபோகிற பகுதிகளில் மக்கள் நெரிசலுக்கு மத்தியில் மிகுந்த சிரமப்பட்டு படப்பிடிப்பை நடத்தியுள்ளோம். படத்தில் இதுவரை யாரும் தொட்டிராத ஒரு கனமான விஷயத்தைத் தைரியமாக வைத்துள்ளோம். 25 ஆண்டுகள் ஆனாலும் இந்தப் படம், கார்த்தியின் திரை வாழ்க்கையில் ஒரு மகுடமாகத் திகழும். "கஜினி'யில் அஸினுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவத்துடன் பெயரும் புகழும் கிடைத்ததோ அந்த அளவுக்கு காஜல் அகர்வாலுக்கு இந்தப் படத்தில் கிடைக்கும்'' என்றார் இயக்குநர் சுசீந்திரன்.

6200!

கன்னடத்தில் "சீனா', "மகரிஷி', "டென்த் க்ளாஸ்' படங்களில் நடித்து முன்னணி நாயகியாக உள்ள பிரியங்கா சந்திரா "கல்லூரி காலங்கள்' படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். இந்தப் படத்தை புதியவர் எம்.ஏ.ரெமோஷிவா இயக்குகிறார். "இதுவும் வழக்கமான கல்லூரி காதல் கதைதானா?' என்று இயக்குநரிடம் கேட்டபோது...

"கல்லூரியில் நடக்கும் காதல் கதைதான்; ஆனால் வழக்கமானது அல்ல. ஓர் ஆக்ஷன் படத்துக்குரிய விறுவிறுப்புடன் திரைக்கதையை அமைத்திருக்கிறோம். குறிப்பாக, படத்தின் இரண்டாம் பகுதி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும். அனைவரையும் அதிர வைக்கும் க்ளைமாக்ஸ் காட்சி மட்டும் சுமார் 50 நிமிடங்கள் இடம்பெறுகிறது. ராஜேஷ் ராமலிங்கம் இசையில் டி.சிவசுப்பிரமணியம் எழுதிய "கனா ஒன்று கண்டேன்' என்ற பாடலை படம் வெளிவருவதற்கு முன்பே 6200 பேர் காலர் ட்யூனாக பயன்படுத்தி வருகிறார்கள். இது எங்களைப் போன்ற புதியவர்களின் சிறு பட்ஜெட் படங்களுக்குக் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம்'' என்றார். இந்தப் படத்தைத் தயாரிக்கும் ஸ்டார்ட்டிங் பாயிண்ட் நிறுவனம் படப்பிடிப்பு நடைபெற்ற இடங்களிலெல்லாம் மரக் கன்றுகளையும் அந்தப் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் ஏழைக் குழந்தைகளுக்கு இலவச நோட்டுப் புத்தகங்களையும் வழங்கியுள்ளது வரவேற்கத்தக்கது.

மீண்டும் கோகுலம்?

விக்ரமன் இயக்கத்தில் சுமார் 17 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி பரவலான பாராட்டுகளைப் பெற்ற "கோகுலம்' படத்தின் பெயரில் மீண்டும் ஒரு படம் தயாராகிறது. தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் தெலுங்கின் இளம் முன்னணி நாயகன் ஷ்ரவானந்த்தும் பத்மப்ரியாவும் நடிக்கிறார்கள். சந்திர சித்தார்த் படத்தை இயக்குகிறார். "கோகுலம்' படத்தின் ரீமேக்தானா இந்தப் படம்? என இயக்குநரிடம் கேட்டபோது...

"வேறு டைட்டில் கிடைக்காததால்தான் இந்த டைட்டிலைப் பயன்படுத்தியிருக்கிறோம். இது முழுக்க முழுக்க கிராமத்தின் பெருமைகளைச் சொல்லும் படம். சாஃப்ட்வேர் என்ஜினீயரான நாயகன் கிராமத்தில் பிறந்தவர். அதனால் கிராமத்தின் மீது பிடிப்பும் பிணைப்பும் உள்ளவர். கிராமத்து வாழ்க்கையே மிகச் சிறந்தது என்று நினைப்பவர். நகர்ப்புறத்தில் பிறந்த நாயகி கிராம வாழ்க்கையை வெறுப்பவர். அவரை தன்னுடைய கிராமத்துக்கு அழைத்துச் சென்று அதன் உன்னதங்களை உணர வைக்கிறார் நாயகன். இதில் மென்மையான காதலையும் சொல்லியிருக்கிறோம். படத்தைப் பார்க்கும் அனைவரும்

கிராமங்களுக்கு தங்களால் இயன்றதைச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் திரையரங்குகளை விட்டு வெளியே வருவார்கள்'' என்றார்.

கோவையின் மறுபக்கம்!

சமுத்திரகனியிடம் உதவியாளராகப் பணியாற்றிய ஆர்.கே.சூர்யபிரபாகர் "தா' படத்தின் மூலம் இயக்குநர் ஆகியிருக்கிறார். புதுமுகங்கள் ஸ்ரீஹரி, நிஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். "தா' பற்றிய தகவல்களைக் கேட்டபோது...

"பத்து பேரை அடிக்கிறவன் ஆம்பிளை இல்லை; ஒரு பெண்ணுக்கு பிடிக்கிறவன்தான் ஆம்பிளை' என்ற கருத்ûதையும் சிறு வயதிலிருந்தே முரட்டுத்தனமான குணங்களுடன் வளரும் நாயகனுக்குள் காதல் வரும்போது அவனுடைய மனதுக்குள் ஏற்படும் மாற்றங்களையும் யதார்த்தமாகச் சொல்லுவதுதான் கதை. தமிழ் சினிமாவில் கோயம்புத்தூரை மையமாகக் கொண்டு படங்கள் வெளியாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அதனால் இந்தப் படத்தை கோவைப் பின்னணியில் எடுத்திருக்கிறோம். பெரும்பாலும் தொழிற்சாலைகள் அதிகம் நிரம்பிய, பணப்புழக்கம் அதிகமுள்ள மாவட்டமாகத்தான் கோவையை எல்லோரும் பார்த்திருப்பார்கள். ஆனால் இந்தப் படத்தில் இதுவரை யாருமே காட்டியிராத கோவையின் இன்னொரு பக்கத்தைக் காட்டியிருக்கிறோம். படத்தில் நடித்த அனைவரையும் கோவையில் உள்ள சாவடி கிராமத்தில் இரண்டு மாதங்கள் தங்க வைத்து, அங்குள்ள மக்களின் பழக்க வழக்கங்கள், வட்டாரப் பேச்சு போன்றவற்றை அறியச் செய்த பிறகே படப்பிடிப்பைத் தொடங்கினோம். ஏராளமான இசை ஆல்பங்களை வெளியிட்ட இலங்கைத் தமிழரான ஸ்ரீவிஜய் படத்துக்கு இசையமைத்திருக்கிறார். படத்தின் ஒவ்வொரு காட்சியும் உயிர்ப்புடனும் யதார்த்தத்துடனும் இருக்கும்'' என்றார் இயக்குநர் ஆர்.கே.சூர்யபிரபாகர்.

சாரீரமும் சரீரமும்!

"மாசி லாமணி'யில் "ஓடி ஓடி விளையாடு...', "பேராண்மை'யில் "துப்பாக்கிப் பெண்ணே', "ராவணன்' படத்தில் "கெடாக்காரி' பாடல்களோடு தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளிலும் பாடல்களைப் பாடியிருப்பவர் சுவி. சென்னை எத்திராஜ் கல்லூரியின் முன்னாள் மாணவியான இவருடைய "இசை' என்ற ஆல்பத்தை ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட ஒரே நாளில் பிரபலமானார். சாரீரத்தோடு சரீரமும் அழகாக அமைந்ததால் பல சினிமா வாய்ப்புகளும் வந்துள்ளன. விரைவில் நடிகையாகப் பார்க்கலாமா? என்று கேட்டபோது....

"நான் மேற்கத்திய இசையில் நன்கு பயிற்சி பெற்றிருக்கிறேன். தமிழ், மலையாளம், கன்னடம் தவிர ஆங்கிலத்திலும் ஃப்ரெஞ்சிலும் நன்கு பாடுவேன். "எஸ் 5' என்ற இசைக்குழு மூலம் பல ஆல்பங்கள் வெளியிட்டுள்ளேன். அப்போதே திரைப்பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் "பை த பீப்புள்' மலையாளப் படத்துக்கு இசையமைத்ததோடு அதில் சில காட்சிகளில் இசைக் கலைஞராகவும் பாடி நடித்தேன். சிலர் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நீங்களே பாடி நடியுங்கள் என்று கேட்டனர். அவற்றைத் தவிர்த்துவிட்டேன். நானாக நடிக்கும் வாய்ப்பைத் தேடிச் செல்லவில்லை என்பதால் ஸ்டார் ஹீரோக்களுடன் மட்டும்தான் நடிப்பேன் என்று சொல்லிவிட்டேன். எனக்குப் பிடித்ததெல்லாம் இசைக் குழுவில் என் இசையில் ஆடிக்கொண்டே பாடுவதுதான்'' என்று கூறும் சுவி, இதுவரை இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், யுவன்ஷங்கர்ராஜா, வித்யாசாகர் உள்ளிட்ட பிரபல இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்களைப் பாடியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.