நல்லிணக்கம்: சர்வ சமய கோயில்!
மதச் சண்டைகளுக்குக் குறைவில்லாத இடம் திருநெல்வேலி. பள்ளி, கல்லூரிகளில் கூட இந்த சண்டைகள் நடைபெற்று காவல்நிலையம் வரை சென்ற சம்பவங்களும் உண்டு. மத நல்லிணக்க கோஷங்கள் ஓயாமல் ஒலித்துக் கொண்டிருந்தாலும் ந


மதச் சண்டைகளுக்குக் குறைவில்லாத இடம் திருநெல்வேலி. பள்ளி, கல்லூரிகளில் கூட இந்த சண்டைகள் நடைபெற்று காவல்நிலையம் வரை சென்ற சம்பவங்களும் உண்டு.
மத நல்லிணக்க கோஷங்கள் ஓயாமல் ஒலித்துக் கொண்டிருந்தாலும் நடைமுறையில் அந்த நல்லிணக்கங்களை காண்பது அரிதாக உள்ளது.
மனிதன் வளர்ந்து ஆளாகி மத சிக்கல்களில் கட்டுண்டு அதிலிருந்து மீள முடியாமல் தத்தளித்து உழன்று கொண்டிருப்பது கூட இந்த நல்லிணக்க கேடுக்கு ஒரு காரணமே.
எனவேதான், இளம் வயதிலேயே அதுவும் பள்ளி பருவத்திலேயே பிஞ்சு உள்ளத்தில் நல்லிணக்கத்தை விதைக்கும் பணியாக சர்வ சமயக் கோயில் ஒன்றைக் கட்டி நல்ல எதிர்கால சந்ததிகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது பாளையங்கோட்டை தூய சவேரியார் மேல்நிலைப்பள்ளி.
"தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு' என அழைக்கப்படும் பாளையங்கோட்டையின் அடையாளங்களில் ஒன்று சேசு சபையினரால் நிர்வகிக்கப்படும் இந்த தூய சவேரியார் பள்ளி. 1880 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பள்ளி பழம் பெருமை கொண்டது. இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் இன்று அரசு மற்றும் தனியார் துறைகளில் பல்வேறு உயர் பதவிகளில் அமர்ந்து அலங்கரித்து வருகின்றனர்.
அந்த முன்னாள் மாணவர்கள் கடந்த 2001 ஆம் ஆண்டு மன்றத் தலைவர் வழக்கறிஞர் காபிரியேல் ராஜ் தலைமையில் கூடி நாட்டு நடப்புகளைப் பகிர்ந்து கொண்டபோது அவர்களது உள்ளத்தை வாட்டியது இந்த சாதி, மதச் சண்டைகள். அப்போது முளைத்த திட்டம்தான் இந்த சர்வ சமயக் கோயில்.
நாம் பயின்ற பள்ளி வளாகத்திலேயே ஒரு சர்வ சமய கோயிலை உருவாக்கி இங்கு பயிலும் மாணவர்களிடையே நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டும். அது எதிர்காலத்திற்கு ஊன்றப்படும் நல்விதை என முடிவு செய்தனர். அவர்களது திட்டத்திற்கு பச்சைக் கொடி காட்டினார் அன்றைய பள்ளி முதல்வர் இக்னேசியஸ் பிரிட்டோ அடிகளார்.
கடந்த 2004 ஆம் ஆண்டு சவேரியார் மேல்நிலைப்பள்ளியின் 125-வது ஜூபிலி ஆண்டு கொண்டாட்டத்தின்போது "ஒன்றே குலம், ஒருவனே தேவன்' என்ற கோஷத்துடன் இந்த சர்வ சமய கோயில் கட்டும் திட்டத்தை பள்ளி நிர்வாகம் கையில் எடுத்துக் கொண்டது.
பின்னர் 2005 ஆம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்டு பழைய மாணவர்கள் உட்பட பலரையும் அணுகி ரூ. 12 லட்சம் திரட்டி 2007-ல் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது இந்த சர்வ சமய கோயில்.
கிறிஸ்தவ பாரம்பரிய முறையிலான நுழைவு வாயில், இந்துக் கோயிலைப் போன்று கோபுரத்துடன் கூடிய முகப்பு, இஸ்லாமிய மசூதியைப் போன்று மேல்கூரை என கட்டப்பட்டுள்ள இந்தக் கோயிலுக்கு புனிதர் அருப்பேயின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அரை வட்ட வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த சர்வ சமய கோயிலின் உள்ளே நுழைந்த உடன் அங்கு வைக்கப்பட்டுள்ள திருவிளக்கையும், அதன் முன்புறம் உள்ள சிறிய மேஜையில் பைபிள், பகவத் கீதை, திருக்குர்ஆன் ஆகிய மும்மத வேத நூல்களையும் காணலாம். அவரவர் விருப்பப்படி சிந்தனையை பதித்துக் கொள்ளலாம்.
உள்ளே சுவரில், ""உழைப்பற்ற செல்வம், நேர்மையற்ற வாணிபம், ஒழுக்கமற்ற கல்வி, மனச்சாட்சியற்ற இன்பம், மனித நேயமற்ற சேவை, கொள்கையற்ற அரசியல், தியாகமற்ற வழிபாடு, இவை நிலைப்பதில்லை'' என்ற காந்தியடிகளின் பொன்மொழிகள் தொடங்கி இயேசு பிரான், தாயுமானவர், பகாய், நபிகள் நாயகம், அன்னை தெரசா ஆகியோரின் நல்வழி காட்டும் பொன்பொழிகள் இடம்பெற்றுள்ளன. ஆன்மிக கருத்துகளை அள்ளிப் பருக பல்வேறு நூல்களும் உள்ளன.
உள்ளே மனதை வருடும் மெல்லிய இசை ஒலித்துக் கொண்டிருக்க அந்த ரம்மியமான சூழ்நிலையில் மாணவர்கள் தியானம் செய்யவும், யோகா பயிற்சி மேற்கொள்ளவும் ஆசிரியர்களால் கற்றுக் கொடுக்கப்படுகிறது.
இந்த பல்சமய கோயில்களுக்கு மாணவர்கள் தானாகவும் சென்று வழிபடுகின்றனர். மார்க்க போதனை வகுப்பு நேரத்தில் ஆசிரியர்கள் மாணவர்களை அங்கு அழைத்துச் சென்று சர்வ சமய சித்தாந்தங்கள் குறித்தும் விளக்கி நல்லிணக்கத்தைப் போதிக்கின்றனர்.
இப்போது தூய சவேரியார் பள்ளியில் பயிலும் சுமார் 3,400 மாணவர்களுக்கும், 85 ஆசிரியர்களுக்கும் மட்டுமே திறந்திருக்கும் இந்த ஆன்மிக சமரசக் கதவை, எல்லோருக்கும் திறந்துவிடவும் வழிவகை காணப்பட்டு வருகிறது.
""இனிவரும் காலத்தில் இங்கிருந்து பல்சமய அறிவும், பல்சமய உயர்வும், சகோதர நேயமும், உயர் மனப்பக்குவமும் மனித உள்ளங்களில் மலர்ந்து ஒற்றுமைத் தென்றல் உலகெல்லாம் உலா வரும். அப்போது உலகில் அமைதிப் பண்படும்'' என்கிறார் தூய சவேரியார் பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் தாளாளர் ஓய்.எஸ். யாகு அடிகளார். அவரது கனவு நனவாகட்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...