உலகின் மிகப்பழமையான நாகரிகங்களின் ஒன்று சிந்துவெளி நாகரிகம். அண்மைகாலக் கண்டுபிடிப்புகள், சிந்துவெளி நாகரிகத்தை எலமைட், மெசபடோமியா, எகிப்து நாகரிகங்களைவிட பழமையானது என்று காட்டுகின்றன. மேலும், இது வேறு எந்த நாகரிகத்தையும்விட மிகப்பெரிய பரப்பில் பரவியிருந்ததும்கூட. இது, மொகஞ்சதாரோ நாகரிகம் என்றும் ஹரப்பா நாகரிகம் என்றும் அழைக்கப்படுவது உண்டு. ஒப்பற்ற நகர நாகரிகமாகத் திகழ்ந்த சிந்துவெளி நாகரிகம், அதன் உயர்தரமான வலிமையான நேர்த்தியான கட்டட வடிவமைப்புகளுக்காகவும், கழிவுநீர்க் கால்வாய் வசதி, திட்டமிட்டு அமைக்கப்பட்ட தெருக்கள் போன்றவற்றுக்காகவும் மிகச்சிறந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. சிந்துவெளி நாகரிக மக்கள் பயன்படுத்திய எழுத்து முறை ‘‘சிந்துவெளி எழுத்துகள்’’ என்று அழைக்கப்படுகின்றன. இவ்வெழுத்துகளின் பொருளை அறிவது என்பது, தொல் எழுத்தியலாளர்களுக்கு இன்றுவரை மிகப்பெரிய சவாலாகவே இருந்து வருகிறது.