சாமியாடிகளின் செயல்களைக் காட்டும் உலகப் புகழ்பெற்ற ஓவியங்கள் ரஷ்யாவின் சைபீரியா பகுதியிலிருந்தும், தென் ஆப்ரிக்கா, அமெரிக்கா, பின்லாந்து முதலிய நாடுகளில் இருந்தும் அறியப்பட்டுள்ளன. இவை சாமியாடிகளின் மருத்துவம், நடனம், பாடலுடன் நடனம் மெய்மறந்த நிலை, ஆண்-பெண் குறிகளைக் காட்டும் வளமைச் சடங்குகள், மூவுலகப் பயணம், மூதாதையர் வணக்கம், மூதாதையரின் உதவியை கோருதல், மேலுலகினர், புனித ஆவிகள், தெய்வங்களை வணங்குதல் மற்றும் வானவியல் சார்ந்த செய்திகளை நமக்கு வழங்குகின்றன. இவற்றுள் தென் ஆப்ரிக்காவின் சான் பழங்குடியினர், சைபீரியப் பழங்குடியினர், ஐரோப்பியரின் பாகன் இனத்தினரின் ஓவியங்கள் போன்றவை புகழ்பெற்று விளங்குகின்றன. இவை வானவியல் சார்ந்த ஓவியங்கள் தவிர பிற அறிவியல் சார்ந்த செய்திகளை நமக்கு வழங்குவதில்லை. மருத்துவம் சார்ந்த செய்திகளை வழங்கும் சில ஓவியங்கள் மருத்துவ குணம் வாய்ந்த சில செடி கொடிகளைக் கொண்டிருக்கின்றன. ஆனால் அவற்றில் மனித உடல்செயலியல் சார்ந்த அறிவியல் செய்தியைத் தரும் ஓவியமோ, பாறைச் செதுக்கோ, பாறைக்கீறலோ என் அறிவுக்கு எட்டியவரை இடம் பெற்றிருக்கவில்லை. மூலக்கொல்லைப் படைப்புதான் இந்த வகையில் உடல்செயலியலை, குறிப்பாக குழந்தைப் பிறப்பு குறித்தான அறிவியலைத் தரும் முதல் பாறைக்கலைப் படைப்பாக விளங்குகிறது.