கிழக்கு நோக்கி நடப்பட்டுள்ள நடுகல்லில், மாரிமுத்து கரண்டமகுடத் தலை அலங்காரம் கொண்டுள்ளார், இருபுறமும் பின்பக்கமிருந்து பக்கவாட்டில் நேராக விரைத்து, குறுகியதாய் நீண்டு பிறகு தொங்கும் சடைமுடியும் கொண்டுள்ளார். முத்துவைத்த நெற்றிப்பட்டம் அணிந்துள்ளார். காதுகளில் தொங்குகுண்டு காதணி அலங்கரிக்கிறது. கழுத்தில் முகப்பு வைத்த கண்டசரமும், தொப்பூள்வரை தொங்கும் பதக்கமுள்ள ஆரமும் அணிவிக்கப்பட்டுள்ளன. கையிலும், காலிலும் சற்று தடித்த காப்பு பூட்டப்பட்டுள்ளது. வலது கரத்தில் தரையில் ஊன்றி செங்குத்தாக நிற்கும் ஈட்டியும், இடது கரத்தை பக்கவாட்டில் மடக்கி மூட்டியை மேல்நோக்கி தூக்கி, மணிக்கட்டை மட்டும் கீழாக இறக்கி குண்டாந்தடி போன்ற குறுந்தடியை குறுக்காகப் பிடித்தபடி உள்ளார். தொடைவரை ஆடை காட்டப்பட்டுள்ளது. முன்புறம், தொடைகளுக்கு நடுவில் அலங்காரத்துக்காகக் கட்டப்படும் தொங்கும் விறிசி மடிப்பு ஆடைக்கட்டு, இடைவாரில் இருந்து தொங்குகிறது. கால் பாதங்கள் தெற்கு நோக்கியதாகக் காட்டப்பட்டுள்ளன. நடுகல்லை வண்டி வாகனங்களில் ஏற்றி இறக்க வசதியாக, இரு தோளுக்கும் மேல் இரு துளைகளும், இடுப்பின் இருபுறம் இரு துளைகளும் போடப்பட்டுள்ளன.