உறைகிணறுகள், அப்பகுதியில் வாழும் மக்களின் அடிப்படையான நீர்த் தேவையை நிறைவு செய்யப் பயன்பட்டுள்ளன. தமிழகத்தில் கொற்கை, பூம்புகார், மாமல்லபுரம், மாளிகைமேடு, வசவசமுத்திரம், அரிக்கமேடு, செங்கமேடு, பல்லவமேடு, படைவீடு போன்ற இடங்களில் எல்லாம் அகழாய்வுகளில் உறைகிணறுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அகழ்ந்தெடுக்கப்பட்டவற்றுள், செங்கமேடு அகழாய்வில்தான் உறைகிணற்றுக்கு அதிக அளவில் சுமார் 16 சுடுமண் வளையங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது காணமுடிந்துள்ளது. ஆனால், பட்டறைப்பெரும்புதூர் அகழாய்வில் வெளிக்கொணரப்பட்ட உறைகிணற்றில், சுமார் 20-க்கும் மேற்பட்ட சுடுமண் வளையங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இங்கு திரளான மக்கள் வாழ்ந்திருத்தல் வேண்டும் என்பதும், இவர்கள் சங்க காலத்தைச் சார்ந்த மக்கள் என்பதும் தெள்ளத்தெளிவாக அறிந்துகொள்ள இவ்வுறைகிணறு நமக்குச் சான்றாக அமைகிறது. பட்டறைப்பெரும்புதூர் அகழாய்வு 50 ச.மீ. அளவில் மேற்கொள்ளப்பட்ட சிறிய அளவிலான ஆய்வு. இந்தச் சிறிய இடத்திலேயே இத்தனை தொல்பொருட்களும், உறைகிணறும் காணப்படுகின்றன என்றால், அதிகப் பரப்பளவில் அதிகப் பொருட்செலவில் அகழாய்வை இங்கு மேற்கொண்டால், மேலும் பல புதிய தகவல்கள் கிடைக்கலாம்.