கோட்டை மதில் சுவர்களை செம்புராங் கற்களைக் (Laterite) கொண்டு எழுப்பியுள்ளனர்*11. அரண்மனை மதில் சுவர்களை நன்கு தடித்த அளவில் செங்கல், சுண்ணாம்பு, மணல், ஜல்லி, கூழாங்கற்கள் ஆகியவற்றைக் கலந்து நன்கு கடினமாக அமைத்துள்ளதை அகழாய்வில் கிடைத்த உடைந்த கட்டடப் பகுதிகள் தெரிவிக்கின்றன. மேல்பகுதியை மூடுவதற்குத் தட்டையாக நீள் செவ்வக வடிவ அமைப்பில் தலைப் பகுதியில் கொக்கி போன்ற வடிவடைய கூறை ஓடுகளைப் பயன்படுத்தியுள்ளனர். அகழாய்வில் கூறை ஓடுகளும் சுண்ணாம்புக்காரையும் கலந்த நிலையிலேயே சேகரிக்கப்பட்டுள்ளது. எனவே, சங்க காலத்தில் தட்டையான கூறை (Grooved Tiles) ஓடுகளுக்கு பதிலாக, தட்டையான, நீண்ட, தலைப்பகுதியில் கொக்கி போன்று வளைந்த, நன்கு வார்க்கப்பட்ட ‘ட’ வடிவ ஓடுகளைப் பயன்படுத்தியள்ளனர். இதுபோன்ற ஓடுகள் குறும்பன்மேடு, பழையாறை, கங்கைகொண்டசோழபுரம், பெரியபட்டினம், மாங்குடி போன்ற பல அகழாய்வுகளில் சேகரிக்கப்பட்டுள்ளன. இது சோழர்கள் காலத்திய கூறை ஓடுகள் வகையைச் சார்ந்தது எனக் குறிக்கலாம்*12.