பொ.ஆ 16-ம் நூற்றாண்டின் இடைக்காலத்தில், மதுரை நாயக்கர்களும், தஞ்சை நாயக்கர்களும், அவர்களைத் தொடர்ந்து மராட்டியர்களும், தங்களது ஆட்சியைத் துவக்கினர். இருப்பினும், இவர்கள் குறிப்பிட்ட சில பகுதிகளை மட்டுமே தமது ஆளுகைக்குக் கீழ் கொண்டுவந்தனர். இக்காலகட்டத்தை தொடர்ந்து, ஒருபுறம் டச்சு அரசும், ஆங்கிலேயர் அரசும் தமிழகத்தில் பரவலாக ஏற்படலாயிற்று. அதனை எதிர்த்து பாளையக்காரர்களும், ஜமீன்களும் செயல்பட்டனர். அவ்வாறு செயல்பட்டவர்களில் சற்று வலிமை படைத்தவர்களாக, தமிழகத்தின் வடக்கே செஞ்சியை ஆண்ட செஞ்சி நாயக்கர்களும், சென்னைக்கு அருகே உள்ள சதுரங்கப்பட்டினம் மற்றும் தரங்கம்பாடியை ஆட்சிபுரிந்த டச்சு அரசும், தமிழகத்தின் தென்கோடியில், சிவகங்கை மாவட்டத்தில் மருது சகோதரர்களும், திருநெல்வேலி மாவட்டத்தில் பாஞ்சாலங்குறிச்சியில் அரண்மனை கட்டி ஆட்சிபுரிந்த வீரபாண்டிய கட்டபொம்மன் போன்றவர்களும் குறிப்பிடத்தக்கவர்கள்.