எழுத்துப் பொறித்த மட்கலன்கள் (Inscribed potshreds) எழுத்துப் பொறித்த ரௌலட்டட் வகை மட்கலன்கள் அதிக அளவில் கிடைத்துள்ள பகுதி அழகன்குளம் மட்டுமே எனலாம். உரோமானிய மட்கலன்களிலேயே தமிழி எழுத்துப் பொறிப்புகள் கொண்ட மட்கலன்கள் சுமார் 60-க்கும் மேற்பட்டவை கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அழகன்குளம் அகழாய்வில், 190-க்கும் மேற்பட்ட குறியீடுகள் பொறித்த மட்கலன்களும் கிடைத்துள்ளன. உரோமானிய மட்கலன்களான கருப்பு நிற ரௌலட்டட் மட்கலனில், ‘சாமுதக’ என்பதும், பிற எழுத்துப் பொறிப்புகளாக திசஅன், தானியது சேரமான், கோன், ஆதன், அத்தன், குவிரஅன்அ, பதுமாற்கோதை, வாதுமேத, போன்றவை குறிப்பிடத்தக்கது. பிற எழுத்துகள் முடிவுபெறாமல், இரண்டு மூன்று எழுத்துகளைக் கொண்டு முடிவு பெறாமல் உடைந்த நிலையில் சேகரிக்கப்பட்டுள்ளன. கருப்பு சிவப்பு, ரௌலட்டட், முத்திரை பதித்த மட்கலன் ஓடுகள், சாம்பல் நிற மட்கலன் ஓடுகள் என அனைத்து மட்கலன் ஓடுகளிலும் எழுத்துப் பொறிப்புகள் உள்ளன.