/

வரலாற்றுக் காலம் - 5. குன்னத்தூர் – உறையூர் - அழகரை

வி.டி. கிருஷ்ணசாமியும் அவரது குழுவினரும் மேற்கொண்ட இவ்வகழ்வாய்வில், பெருங் கற்படைச் சின்னங்களான கல்லறை, கல்வட்டம், கற்குவை போன்றவற்றை அகழ்ந்தெடுக்கப்பட்டன. மூன்று வகையான பெருங் கற்காலச் சின்னங்களும் வெளிக்கொணரப்பட்டன.

News image
Updated On :28 ஜூலை 2025, 4:16 am

ச. செல்வராஜ்

குன்னத்தூர்

சென்னை மாவட்டம், சைதை வட்டத்தில் குன்னத்தூர் அமைந்துள்ளது. இங்குள்ள திருஅகத்தீஸ்வரம் சிவன் கோயில் சோழர், பாண்டியர் காலக் கல்வெட்டுகளைக் கொண்டுள்ளது. கல்வெட்டுகளிலும் குன்னத்தூர் என்றே குறிப்பிடப்படுகிறது. இவ்வூரைச் சுற்றி குன்றுகள் நிறைந்து காணப்படுவதால் இதை குன்றத்தூர் என்று அழைப்பர். பேச்சு வழக்கில் குன்னத்தூர் என்று வழங்கப்படுகிறது.

குன்றுகள்தோறும் குமரன் குடியிருப்பான் என்ற சொல்லுக்கு ஏற்ப, குன்றத்தூரிலும் குமரக்கடவுள் குடிகொண்டுள்ளார். குன்னத்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் புகழ்பெற்றது. பெரியபுராணம் இயற்றிய சேக்கிழார் பெருமான் அவதரித்த திருத்தலம் இது.

இப்பகுதிகளில் காணப்படும் குன்றுகளின் அடிப்பகுதிகளிலும் பாதைகளிலும், பெருங் கற்படைக் காலப் பண்பாட்டுச் சின்னங்களும், அடிப்பகுதியில் ஊரிருக்கைப் பகுதிகளும் காணப்படுகின்றன. இப்பகுதியில் இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறை 1955-58 வரை மூன்று பருவங்களில் அகழாய்வு மேற்கொண்டது*1. அப்போது, ஈமச்சின்னங்களையும், ஊரிருக்கைப் பகுதியையும் அகழ்ந்து பல தொல்பொருள்கள் சேகரிக்கப்பட்டன.

Story image

(குன்னத்தூர் – பெருங் கற்படைச் சின்னத்தை அகழ்ந்தபோது அதன் வெளிப்பாடு)

Story image

(கல்வட்டத்துக்குள் காணப்படும் ஈமப்பேழையும், அதனைச் சுற்றி அமைந்த மூன்று ஈமப்பேழைகளும்)

வி.டி. கிருஷ்ணசாமியும் அவரது குழுவினரும் மேற்கொண்ட இவ்வகழ்வாய்வில், பெருங் கற்படைச் சின்னங்களான கல்லறை, கல்வட்டம், கற்குவை போன்றவற்றை அகழ்ந்தெடுக்கப்பட்டன. மூன்று வகையான பெருங் கற்காலச் சின்னங்களும் வெளிக்கொணரப்பட்டன. கால்களைக் கொண்ட ஈமப்பேழையும், மைய ஈமப்பேழையைச் சுற்றி மேலும் மூன்று ஈமப்பேழைகளும் இருந்ததை அகழாய்வில் வெளிப்படுத்தினர். ஈமப்பேழையில் துவாரங்கள் இருப்பதையும் காணமுடிந்தது. இங்கு இரும்புப் பொருட்களும், மட்கலன்களும் சேகரிக்கப்பட்டுள்ளன. தொல்பொருட்களாகக் கிடைத்தவற்றுள் தட்டு, தாங்கி, மூன்று கால்களைக் கொண்ட ஜாடி, தாழி, இரும்புக் கோடாரி, ஈட்டி முனைகள், கத்தி, ஆணி மற்றும் குதிரை லாடம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை*2.

Story image

(குன்னத்தூர் - அகழ்வுக்குழியின் தோற்றம்)

Story image

(ஈமப்பேழை)

Story image

(துளையுடன் மூடியைக் கொண்ட ஈமப்பேழை)

மேலும், எட்டு கால்கள் மற்றும் ஆறு கால்கள் கொண்ட ஈமப்பேழை துளையுடன் கூடிய மூடியுடனும், செம்புக் கிண்ணமும், நெல் உமி, துளைகளுடன் கூடிய மட்கல மூடியும் காணப்பட்டன. கத்தி, உளி, ஈட்டி முனை என ஏராளமான தொல்பொருட்கள் சேகரிக்கப்பட்டன. இங்கு கிடைத்துள்ள தொல்பொருட்களைக் கொண்டு மூன்று பண்பாட்டுக் காலங்களைப் பகுத்துள்ளனர்*3.

Story image

(செங்கற்கள் கொண்டு கட்டப்பட்ட சுவர்ப் பகுதி)

முதல் பண்பாட்டுக் காலம்

இங்கு சுடுமண் கழிவுநீர்க் குழாய்கள் காணப்பட்டன. சரளைக் கற்களால் கட்டப்பட்ட சுவர்ப் பகுதிகளும் கிடைத்துள்ளன.

Story image

(சரளைக் கற்கள் கொண்டு கட்டப்பட்ட சுவர்ப் பகுதி)

இரண்டாவது பண்பாட்டுக் காலம்

கருப்பு சிவப்பு மட்கலன்கள், உறை கிணறு, அரிய கல்மணிகள், செம்பு நாணயங்கள், சுடுமண் பொம்மை, சுடுமண்ணால் ஆன முத்திரை, இன்னொரு முத்திரையில் பொ.ஆ. 9-ம் நூற்றாண்டு எழுத்துப் பொறிப்பும் காணப்பட்டதால், இவை வரலாற்றுக் காலத்தின் தொடக்க காலப் பண்பாட்டின் தொடர்ச்சியைச் சார்ந்தவையாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

Story image

மூன்றாவது பண்பாட்டுக் காலம்

இடைக் காலத்தைச் சார்ந்த இப்பண்பாட்டில் செங்கல் சுவர்ப் பகுதிகள், உறை கிணறுகள் காணப்பட்டன. இங்கு கிடைத்த செங்கற்களின் அளவுகள் முறையே 22.5 X 12 X 4.5 செ.மீ. ஆகும்.

முடிவு

பெருங் கற்படைக் காலம் முதல் தொடர்ச்சியாக இங்கு மக்கள் வாழ்ந்து வருவதை இவை தெளிவுபடுத்துகின்றன.

*

உறையூர்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், திருச்சிராப்பள்ளி நகரின் மையப் பகுதியில் காவிரி ஆற்றின் கரையில், சங்க காலச் சோழர்களின் தலைநகரமாகத் திகழ்ந்த உறையூர் அமைந்துள்ளது. உறையூர், சங்க காலங்களில் பல பெயர்களைக் கொண்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது. கோழியூர், கோழிமாநகர், வாரணம் என்றும், தேவாரப் பாடல்களில் திருமுக்தீச்சுரம் என்றும் குறிப்பிடுகிறது. மக்கள் வாழும் ஊர் என்ற பொருளில் உறையூர் பெயர் அமைந்திருக்கலாம்.

பாண்டியர் செப்பேட்டிலும், குலசேகராழ்வார் பாடலிலும் கோழியூர் என்றே காணப்படுகிறது. இப்பெயரின் பின்னணியாக, யானை ஒன்றைக் கோழி அடக்கியதாக ஒரு கதை உண்டு. இக்கதையை சிற்பங்களிலும் வடித்துள்ளனார். பெரிப்ளஸ் ஆஃப் எரித்ரியன் ஸீ என்ற நூலிலும், தாலமியின் நூலிலும், ஓர்துற, ரேகி, கோமதி என்றும், ஆர்கறு என்றும் இவ்வூரைக் குறிக்கின்றனர்*4.

சங்க இலக்கியங்களில், பட்டினப்பாலை வழியாக உறையூர் பற்றி குறிப்பிடும் பகுதியில் இருந்து இது மிகப்பெரிய, பரந்துபட்ட ஊராகத் திகழ்ந்துள்ளதை உணரமுடிகிறது. சங்க காலச் சோழர்களின் தலைநகரமாகத் திகழ்ந்தது உறையூர். சங்க காலத்தின் துவக்கத்தில், உறையூரின் குறுநிலத் தலைவனாக சேந்தன் என்பவன் இருந்தான். அவனை சோழர்கள் வென்று உறையூரை தம் தலைநகராக்கிக்கொண்டு கோப்பெருஞ்சோழன், கோட்செங்கண்ணன் வரை இப்பகுதியை ஆட்சி புரிந்துள்ளனர்.

களப்பிரர்களின் வருகைக்குப்பின் உறையூரின் புகழ் குன்றியது. பிற்காலச் சோழர் மரபைத் தோற்றவித்த விஜயாலயன், தஞ்சையில் தனது தலைநகரை நிறுவிய பின், உறையூர் முற்றிலுமாகப் புகழ் குறைந்துபோனது. இருப்பினும், தங்களது மூதாதையரின் ஊர் என்பதாலும், சோழப் பேரரசர்கள் பலரும் இங்கு வாழ்ந்துள்ளதை, இப்பகுதியில் காணப்படும் சோழர் காலக் கல்வெட்டுகள் எடுத்து இயம்புகின்றன. சோழர்களின் ஆதிக்கத்துக்குப் பிறகு இப்பகுதியை பிற்காலப் பாண்டியார், விஜய நகர, நாயக்கர் என அரசாட்சி புரிந்துள்ளதை அறியமுடிகிறது.

அகழாய்வு

இவ்வாறு, பல்லாற்றானும் புகழ் பெற்றதாலும் சங்க காலச் சோழர் தலைநகரம் என்பதாலும், 1964-65 முதல் 1969 ஆண்டுவரை நான்கு காலகட்டங்களில், சென்னைப் பல்கலைக் கழக பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறைப் பேராசிரியர் திரு. டி.வி. மகாலிங்கம் தலைமையில் இப்பகுதியில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 11 அகழ்வுக் குழிகள் பல்வேறு பகுதிகளில் தோண்டப்பட்டு, இரண்டு பண்பாட்டுக் காலங்களைக் கண்டறிந்தனர்*5.

முதல் பண்பாட்டுக் காலம்

கறுப்பு சிவப்பு மட்கலன்கள், வழவழப்பான மட்கலன்கள், காவிக்கலவை பூசப்பட்டது, ரௌலட்டட் மட்கலன்கள் போன்றவை அகழாய்வில் சேகரிக்கப்பட்டுள்ளன. இதன்வாயிலாக, உரோமானியர்கள் இப்பகுதிக்கு வருகை புரிந்து வணிகத்தில் ஈடுபட்டது புலனாகிறது.

Story image

(உறையூர் அகழாய்வில் கிடைத்த ரௌலட்டட் மட்கலன் ஓடுகள்)

இவ்வகழ்வாய்வு மூலம் கண்ணாடி, சுடுமண் மணிகள், அரிய கல்மணிகள், சங்கினால் செய்த பொருட்கள், எலும்பினால் செய்தவை எனப் பல தொல் பொருட்கள் சேகரிக்கப்பட்டன. பானை ஓடுகளில் கூட்டல் குறியீடு, அலைவரி, சூரியன், நட்சத்திரம், அம்பு, இலை, பாய், ஸ்வஸ்திகா, பறவை வடிவம் போன்ற கீறல் குறியீடு பொறித்தவை கிடைத்துள்ளன.

இவற்றுடன் சுடுமண் பொம்மைகள், காதணிகள், புகைப்பான்கள், சங்கு வளையல்களும் சேகரிக்கப்பட்டன. மேலும், தமிழ் பிராமி எழுத்துப் பொறித்த பானை ஓடுகள் பலவும் சேகரிக்கப்பட்டன. கறுப்பு, சிவப்பு, காவி நிறப் பானை ஓடுகளில் மட்டுமே தமிழ் பிராமி காணப்பட்டன என்பது கவனிக்கத்தக்கதாக உள்ளது. இவற்றில், ‘அந்தனன’, ‘பூனாகன’, ‘அரைச’, ‘குவி’ போன்ற சொற்களைக் காண முடிந்தது. விளையாடப் பயன்படும் சதுரக்காய்கள், நூல் நூற்கும் தக்கிலி கருவிகள் போன்ற தொல் பொருட்களும் சேகரிக்கப்பட்டன*6.

இரண்டாவது பண்பாட்டுக் காலம்

கருப்பு-சிவப்பு, கருப்பு, சாதாரண சிவப்பு, சீன நாட்டு மட்கல ஓடுகள் கிடைத்தன. கொள்கலன்களும், சாயத்தொட்டி தொட்டிலும் காணப்பட்டன. சாயத்தொட்டியின் கட்டடப் பகுதி, செவ்வக வடிவில் 7 வரி செங்கல் கட்டுமானத்தில் நீர்த்தொட்டி (Cistern) அமைப்பில் உள்ளது. இவை, அந்தப் பகுதியில் நெசவுத் தொழில் சிறப்புற்று விளங்கியிருந்ததைத் தெளிவுபடுத்துகிறது*7.

இவற்றில் இரண்டுவகையான அமைப்புகள் காணப்பட்டன. அவற்றில் நீள் செவ்வக வடிவில் காணப்பட்டது 68 செ.மீ. நீளத்திலும், மற்றொன்று 35 X 88 செ.மீ. அளவிலும் உள்ளன. இவை குடியிருப்புகள் போன்று காணப்படவில்லை. இவை தொழில்முறை அமைப்பாகவோ அன்றி சாயத்தொட்டிகளாகவோ இருத்தல் கூடும் என அகழாய்வாளர்கள் கருதுகின்றனர். மேலும், 21 குச்சிநடு குழிகள் அகழாய்வில் வெளிப்படுத்தப்பட்டன. இது ஒரு குடியிருப்புப் பகுதிபோல் காணப்படவில்லை. ஏனெனில், குடியிருப்பை உறுதி செய்ய துணைச் சான்றுகள் கிடைக்கவில்லை. இருப்பினும், இது வேறு பயன்பாட்டில் இருந்த ஒரு குடிசைப் பகுதியின் அமைப்புபோலத் தோன்றுகிறது.

Story image

(உறையூர் அகழாய்வில் வெளிப்படுத்தப்பட்ட கட்டடப் பகுதி)

Story image

(குச்சிநடு குழிகள் வெளிப்படுத்தப்பட்ட அகழ்வுக்குழி - உறையூர்)

உறையூர் பகுதி மக்கள் வேளாண்மையையும், நெசவுத் தொழிலையும், மட்பாண்டங்கள் வனைதலையும், மணிகள் செய்தலையும் தங்களது தொழிலாகக் கொண்டிருந்துள்ளனர். நிலையான குடியிருப்புக்களைக் காண இயலவில்லை. வெள்ளம் காரணமா கஅடிக்கடி இடமாற்றம் செய்துள்ளதையும் உணரமுடிகிறது.

*

அழகரை

இவ்வூர், திருச்சி - சேலம் சாலையில் 46 கி.மீ. தொலைவில், முசிறி வட்டம், கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளதால், அழகரை வளம்மிக்க நகரமாக விளங்கியுள்ளது. காவிரிக்கரையில் பசுமையாக எழில் கொஞ்சும் அழகோடு அமைந்துள்ளதால், இவ்வூரை அழகரை என்று அழைத்தனர் போலும். வடமொழியில் இவ்வூரைப் பற்றிக் குறிப்பிடும்போது, ‘தரங்க தடாக சேத்திரம்’ என்று குறிப்பிடப்படுகிறது. இதற்கு, அலைகள் வந்து மோதுகின்ற இடம் என்றும், அழகிய தடாகங்கள் நிறைந்த பகுதி என்றும் பொருள்.

அழகரையைச் சுற்றி வரலாற்றுச் சிறப்புமிக்க தொன்மையான பல ஊர்கள் உள்ளன. இதன் மேற்கே 5 கி.மீ. தொலைவில் சீனிவாசநல்லூர் அமைந்துள்ளது. இங்குள்ள கோவில், பராந்தக சோழன் காலத்தில் எடுப்பிக்கப்பட்ட ஒன்றாகும். சோழர் காலச் சிற்பக்கலைக்குச் சிறந்த சான்றாக இவ்வூர் திகழ்கிறது. இங்கு காணப்படும் மகேந்திரமங்கலம், முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில் உருவாக்கப்பட்ட நகரமாகவும் இருக்க வாய்ப்புள்ளது. அழகரையின் அருகே காணப்படும் குன்றில், திருவேங்கிநாதன் எனும் இடைக்காலச் சிவன் கோயில் உள்ளது. இக்கோயிலை, தேவார மூவர் முதலிகளில் ஒருவரான திருஞானசம்பந்தர், திருவேங்கோய்மலை என்று தமது பதிகத்தில் குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிடும் மலை இதுவே என மூன்றாம் குலோத்துங்கனின் கல்வெட்டும் உறுதி செய்கிறது*8.

அகழாய்வு

இவ்வூரில் இரண்டு மண்மேடுகள் காணப்படுகின்றன. சோழர், விஜய நகர கல்வெட்டுகள் இப்பகுதியில் உள்ளன. மண்மேட்டில் கறுப்பு-சிவப்பு, வண்ணம் தீட்டப்பட்ட ஓடுகள் காணப்படுவதால், காவிரி ஆற்றுப்படுகையின் வரலாற்றுக் காலத்தை அறிய இங்கு அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. சென்னைப் பல்கலைக் கழகம், 1964-ல் டி.வி. மகாலிங்கம் தலைமையில் அகழாய்வு ஒன்று, 70 ச.மீ. பரப்பளவில் சுமார் 5 அகழ்வுக்குழிகள் தோண்டி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது*9.

பண்பாட்டுப் பிரிவுகள்

முதல் காலம்

பொ.ஆ.மு. 300 முதல் பொ.ஆ. 300 வரை எனக் குறிக்கப்படுகிறது. இங்கு கருப்பு சிவப்பு, வண்ணம் பூசப்பட்ட பழுப்பு நிற மட்கலன்கள் கிடைத்துள்ளன. இவை பெருங் கற்காலம் மற்றும் வரலாற்றின் தொடக்க காலத்தைச் சேர்ந்தவை.

இரண்டாவது காலம்

பொ.ஆ. 300 முதல் 1000 வரை எனக் குறிக்கப்படுகிறது. இக்காலத்தில் சிவப்பு மட்கலன்கள், கறுப்பு சிவப்பு மட்கலன்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மூன்றாவது காலம்

சொரசொரப்பான சிவப்பு நிறமட்கலன்கள் மட்டும் காணப்படுகின்றன. இதன் காலம், பொ.ஆ. 14-15-ம் நூற்றாண்டு எனக் கணிக்கப்பட்டுள்ளது.

திருக்காம்புலியூர் அகழாய்வில் கிடைத்த மட்கலன்களைப் போன்றே இங்கும் காணப்பட்டன. சிவப்பு மட்கலத்துண்டில் கூத்தன் என்ற பெயர், தமிழ் பிராமி எழுத்து வடிவில் காணப்பட்டது. இம்மட்கலத் துண்டுகள், பொ.ஆ.மு. முதல் இரண்டு நூற்றாண்டைச் சார்ந்தவை. இவற்றுடன் சுடுமண் பொம்மைகள், எடைக்கற்கள், மணிகள், சங்கு வளையல்கள், கண்ணாடி வளையங்கள், இரும்பினால் ஆன கத்தி, சுரண்டிகள், செம்பு வளையம் போன்றவை கிடைத்துள்ளன. இவை இங்கு வாழ்ந்த மக்கள் வேளாண் தொழிலையே பெரிதும் நம்பி வாழ்ந்துள்ளனர் என்பதையும், பொ.ஆ.மு. 300 முதல் பொ.ஆ. 1500 வரை இப்பகுதியில் மக்கள் தொடர்ச்சியாக வாழ்ந்துள்ளதையும் தெளிவுபடுத்துகின்றன*10. இவ்வகழாய்வுகள் மூலம் மூன்று பண்பாட்டுக் காலங்கள் வெளிப்படுத்தப்பட்டன.

சான்றெண் விளக்கம்

Indian Indian Archaeology – A Review - 1955-56, 1956-57; 1957-58.

Indian Indian Archaeology – A Review - 1955-56, 1956-57; 1957-58.

Indian Indian Archaeology – A Review - 1955-56, 1956-57; 1957-58.

Indian Archaeology – A Review - 1964-65; 1965-66; 1967-68.

Indian Archaeology – A Review - 1964-65; 1965-66; 1967-68.

Indian Archaeology – A Review - 1964-65; 1965-66; 1967-68.

Indian Archaeology – A Review - 1964-65; 1965-66; 1967-68.

Indian Archaeology – A Review - 1963-64

Indian Archaeology – A Review - 1963-64

K.V. Raman, Excavations at Thirukkampuliyur, Tamil Civilization, Thanjavur.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.