/

வரலாற்றுக் காலம் - 4. கொற்கையும் ஆதிச்சநல்லூரும்

ஆதிச்சநல்லூரில் பல இன மக்கள் வாழ்ந்துள்ளதும், அவர்கள் ஒருவரோடு ஒருவர் இணைந்து ஒற்றுமையோடு வாணிகம் புரிந்து நல்லதோர் வாழ்க்கையை வாழ்ந்துள்ளதையும் தெளிவாக அறியமுடிகிறது. எனவே, ஆதிச்சநல்லூர் அகழாய்வு தமிழக வரலாற்றில் மிகவும் சிறப்பான இடத்தைப் பெறுவது மட்டுமின்றி, தமிழக மக்களின் வாழ்க்கை முறை, பொருளாதார வளர்ச்சி, பண்பாடு இவற்றை எடுத்தியம்புவதற்கான சான்றாகவும் திகழ்கிறது.

News image
Updated On :28 ஜூலை 2025, 4:16 am

ச. செல்வராஜ்

கொற்கை

தூத்துக்கடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் அமைந்த ஊர் கொற்கை. தூத்துக்குடி நகரில் இருந்து 20 கி.மீ. தொலைவிலும், தன்பொருனை ஆற்றிலிருந்து 3 கி.மீ. தொலைவிலும், இயற்கைச் சூழலுடன் இணைந்து அமைந்துள்ளது. மேலும், வங்கக் கடலுக்கு மிக அருகில் உள்ளது.

“புகழ் மலி சிறப்பின் கொற்கை” என்றும், “முத்து படு பரப்பின் கொற்கை முன்துறை”*1 என, கொற்கையைப் பற்றி சங்க இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. பாண்டிய மன்னர்களைக் குறிக்கும்போது, “கொற்கைக் கோமான்” எனவும், “கொற்கைவேந்தன்” என்றும் புகழ்ந்து கூறுவர். இவ்வூருக்கு அருகில் ஆதிச்சநல்லூர் அமைந்துள்ளதும் ஒரு தனிச்சிறப்பாகும். நுண் கற்கருவிகள் காணப்படும் சாயர்புரமும், கொற்கைக்கு அருகிலேயே அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

கிரேக்கக் கடல் பயண நூலான ‘பெரிப்ளஸ் ஆஃப் எரித்ரியன் ஸீ’ என்னும் நூலில், “கொல்சி” என்று இவ்வூர் குறிப்பிடப்பட்டுள்ளது. கொற்கையின் முத்து, பண்டையக் காலத்தில் மேலை நாடுகளில் புகழ்பெற்றுத் திகழ்ந்துள்ளது. தாலமி என்பவர், கொற்கையை ‘‘கரோஸ் நாடு” என்று குறிப்பிட்டுள்ளார். கிரேக்க மக்கள், முதன்முதலில் தென்னிந்தியாவில் கொற்கைத் துறைமுகத்தில்தான் வந்து இறங்கியுள்ளனர். கிரேக்கர்கள் இதனை கொல்சி வளைகுடா என அழைத்தனர்*2.

கால்டுவெல் அகழாய்வு

முதன்முதலில், சங்க காலக் கொற்கை இதுதான் என கால்டுவெல் அறிவித்தார். இப்பகுதியின் சிறப்பு கருதி, 1876-ம் ஆண்டு இங்கு அகழாய்வு ஒன்று நடத்தப்பட்டது. இவ்வகழ்வாய்வில், முதுமக்கள் தாழிகள் பலவற்றைக் கண்டெடுத்தார்கள். இங்கு காணப்பட்ட முதுமக்கள் தாழி, 2 அடி விட்டத்துடன், அதனுள் முழுமையான ஒரு மனித எலும்புக்கூடும், மண்டையோடும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது*3.

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை அகழாய்வு

சிறப்புமிக்க கொற்கையின் வரலாற்றை முழுமையாக வெளிக்கொணர, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, 1968-69-ம் ஆண்டுகளில் முறையான அறிவியல்பூர்வமான அகழாய்வு ஒன்றை மேற்கொண்டது. இவ்வகழ்வாய்வில், முதுமக்கள் தாழிகள், கருப்பு-சிவப்பு மட்கலன்கள், தானியங்கள் சேமிக்கப் பயன்படுத்தப்படும் கொள்கலன்கள், முத்துச்சிப்பிகள், சங்குகள் எனப் பல தொல்லியல் சான்றுகள் சேகரிக்கப்பட்டன.

அகழாய்வு

இங்கு இரண்டு காலகட்டங்களில் மொத்தமாக பன்னிரண்டு அகழ்வுக் குழிகள் தோண்டப்பட்டு, சுமார் 81 ச.மீ. பரப்பளவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இங்கு காணப்பட்ட மண் அடுக்குகளைக் கொண்டு, மூன்று பண்பாட்டுக் காலங்களைப் பிரித்தனர்.

முதல் காலம்

முதுமக்கள் தாழி, கருப்பு சிவப்பு மட்கலன்கள், இரும்புக் கத்தி, பிற இரும்புப் பொருட்கள், சங்கு வளையல்கள், சங்குகள், மணிகள் என முதல் பண்பாட்டுக்குரியவை சேகரிக்கப்பட்டன. இவை பெருங் கற்கால பண்பாட்டுக் காலத்தைச் சார்ந்தவை. இப்பண்பாட்டின் காலகட்டம் பொ.ஆ.மு. 800 முதல் பொ.ஆ. 400 வரை ஆகும்.

இரண்டாவது காலம்

இக்காலகட்டத்துக்கு உரியனவாக, கறுப்பு சிவப்பு, வழவழப்பான சிவப்பு, பழுப்பு மட்கலன்கள் சேகரிக்கப்பட்டன. இதன் காலகட்டம், பொ.ஆ. 400 முதல் பொ.ஆ. 1000 வரை ஆகும்.

மூன்றாவது காலம்

இக்காலத்துக்கு உரியனவாக, சொரசொரப்பான பானை, கறுப்பு மட்கலன்கள் மற்றும் சில செப்புப் பொருட்கள் கிடைக்கப்பெற்றன. இப்பண்பாட்டின் காலகட்டம், பொ.ஆ. 1000 முதல் 1400 வரை ஆகும்.

தொல் பொருட்கள்

மட்பாண்டங்கள்

கொற்கை அகழாய்வில் கிடைத்த பானை ஓடுகளில் கையால் வனையப்பட்ட கருப்பு சிவப்பு மட்கலன்கள், இளஞ்சிவப்பு மட்கலன்கள், பழுப்பு நிற மட்கலன்கள், மூக்குடைய கிண்ணங்கள் (Spouted Vessels), கருப்பு-சிவப்பு மட்கலன்களில் வெண்மை நிறம் பூசப்பட்ட பானைகள் (Russet coated painted ware), வடஇந்திய பளபளப்பான கறுப்பு வண்ண மட்கல ஓடுகள் (Northern Black polished ware) குறிப்பிடத்தக்கவை*4. இங்கு கிடைத்துள்ள கறுப்பு-சிவப்பு மட்கலன்கள், நன்றாகத் தூய்மை செய்யப்பட்ட களிமண்ணைக் கொண்டு செய்தவையாக உள்ளன. இதுபோன்ற மட்கலன்கள் ஆதிச்சநல்லூர், சிந்து சமவெளி நகரமான ஹரப்பா ஆகிய நகரங்களிலும் கிடைத்துள்ளன என்பது கவனிக்கத்தக்க ஒன்றாகும்.

வடஇந்திய கறுப்பு நிற மட்கலன்கள்

கொற்கை அகழாய்வில் கறுப்பு வண்ணம் தீட்டிய பளபளப்பான மட்கலன் கிடைத்திருப்பதும் சிறப்பான ஒன்று*5. இதை வைத்து, வடஇந்தியாவுடன் தென்னிந்தியா கொண்டிருந்த தொடர்பை அறியமுடிகிறது. மௌரியர் காலத்தில் இத்தொடர்பு இருந்தது புலப்படுகிறது. ஏனெனில், வடஇந்திய பளபளப்பான கருப்பு மட்கலன்கள் மௌரியர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட மட்கலன்கள் ஆகும். இம்மட்கலன்கள் அரிதாகவே பயன்படுத்தப்பட்டவை. எனவே, இவை உயர்குடி மக்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டவை என தொல்லியல் அறிஞர்களால் கருதப்படுகிறது. இம்மட்கலன், தமிழகத்துக்கு வணிகத்தின் பொருட்டு வரத் துவங்கியிருத்தல் வேண்டும். இம்மட்கலன், தமிழகத்தில் குறிப்பிடும்படியான சிறப்பான வணிக நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட எல்லா அகழாய்வுகளிலும் கிடைத்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, இவ்வகை மட்கல ஓடுகள் அமராவதியிலும், அழகன்குளத்திலும் கிடைத்துள்ளன.

கீறல் குறியீடுகளும், தமிழ்பிராமி எழுத்துகளும்

இவ்வகழ்வாய்வில், கீறல் குறியீடுகள் பொறித்த பானை ஓடுகளும், தமிழ்பிராமி எழுத்துப் பொறித்த பானை ஓடுகளும் கிடைத்துள்ளன. இவை, பொ.ஆ.மு. 700-ம் நூற்றாண்டு முதல் பொ.ஆ. 1-ம் நூற்றாண்டு வரை உள்ள காலத்தைச் சார்ந்ததாகக் கருதலாம். ஸ்வஸ்திகம், திரிசூலம், நட்சத்திரம், வில், அம்பு, இலை வடிவம், மீன், சூரியன் போன்ற குறியீடுகள் குறிப்பிடத்தக்கவை.

Story image

செங்கற்கள்

அகழாய்வில் ஒரு கட்டடப் பகுதி வெளிப்படுத்தப்பட்டது. இக்கட்டடப் பகுதிக்குக் கீழே உறை கிணற்றின் உறைகள் கிடைத்தன. தெற்கே கழிவு நீர்க் கால்வாய் ஒன்று 87 செ.மீ. ஆழத்தில் வெளிப்படுத்தப்பட்டது. இம்மண்ணடுக்கில் இருந்து எடுக்கப்பட்ட கரித்துண்டு, கரிமம்-14 முறைப்படி ஆய்வு செய்யப்பட்டதில், மட்கலன்களின் காலம் பொ.ஆ.மு. 785 எனத் தெரியவந்துள்ளது*6. இங்கு காணப்பட்ட செங்கற்கள் 45 X 29 X 7.5 செ.மீ. அளவுகளில் இருந்தன. இக்கட்டப் பகுதி 9-வது மண்ணடுக்கில் வெளிப்படுத்தப்பட்டது.

Story image

கொற்கை அகழாய்வில் வெளிப்படுத்தப்பட்ட கட்டடப் பகுதி

Story image

அகழாய்வில் வெளிப்படுத்தப்பட்ட உறை கிணறு

கொற்கை கி.மு. 800 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே ஒரு சிறந்த வணிகத்தலமாகச் செயல்பட்டு வந்துள்ளது என்பதை, அகழாய்வில் இங்கு கிடைத்துள்ள தொல் பொருட்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன. தமிழி எழுத்துகளின் காலமும் பொ.ஆ.மு. 800 என்பதையே இவை குறிக்கின்றன.

ஆதிச்சநல்லூர்

தூத்துக்குடி மாவட்டத்தில், திருநெல்வேலி - திருச்செந்தூர் சாலையில் 24 கி.மீட்டரில் தென்கிழக்கே அமைந்துள்ளது ஆதிச்சநல்லூர் எனும் கிராமம். இவ்வூர், கொற்கையிலிருந்து வடக்கே 9 கி.மீ. தொலைவில் இருக்கிறது.

ஆதிச்சநல்லூர், முற்காலத்தில் சிறந்த வணிக நகரமாக இருந்துள்ளது. கடல் பின்னோக்கிச் சென்றபின், இந்த ஊர் தன் சிறப்பை இழந்துள்ளது. இவ்வூரில், 1876-ம் ஆண்டு ஜாகர் என்பவர் அகழாய்வு மேற்கொண்டு மட்பாண்டங்கள், எலும்புக்கூடுகளின் பகுதிகள், இரும்புப் பொருள்கள் போன்றவற்றை சேகரித்தார். அவை, ஜெர்மனியில் உள்ள பெர்லின் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன*7. அடுத்ததாக, பாரீஸ் பல்கலைக் கழகத்தைச் சார்ந்த எம். லேனிஸு லாபிக்கு என்பவர், 1903-4-ம் ஆண்டுகளில் நான்கு குழிகளை இட்டு அகழாய்வு மேற்கொண்டு, பல மட்கல வகைகளையும், இரும்பு, வெண்கலப் பொருட்களையும் பல வகையான தொங்கு விளக்குகள் மற்றும் இரும்பு வாட்கள் போன்றவற்றையும் சேகரித்தார்*8.

Story image
Story image

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் வெளிப்படுத்தப்பட்ட கருப்பு-சிவப்பு மட்கலன்கள்

Story image

ஆதிச்சநல்லூர் அகழ்வுக்குழிகள்

இதனைத் தொடர்ந்து, அலெக்ஸாந்தர் ரீ என்பவர் விரிவான அகழாய்வு ஒன்றை, 1899 முதல் 1906 வரை மேற்கொண்டார்*9. அடுத்ததாக, 1914-ம் ஆண்டு ஆண்டர்ஸன் என்பவர் அகழாய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறை 2002 முதல் 2006 வரை அகழாய்வு மேற்கொண்டது. இந்த அகழாய்வுகளில் பல தொல் பொருட்கள் சேகரிக்கப்பட்டன. இவற்றைக் கொண்டு மதிப்பிட்டால், தொல் பொருட்களின் களஞ்சியமாகத் ஆதிச்சநல்லூர் திகழ்கிறது என்றே சொல்லலாம். இங்கு முதுமக்கள் தாழிகள் மட்டுமின்றி, பல்வேறு அளவுகளில் சிறியதும் பெரியதுமான மட்கலன்கள், மூடிகள், கூம்பு வடிவ மட்கலன்கள் ஆகியவற்றுடன், ஏராளமான பிற வகை மட்கலன்களும் கிடைத்துள்ளன.

Story image

அகழாய்வில் வெளிக்கொணரப்பட்ட மட்கலன்கள்

ஆதிச்சநல்லூரின் மேற்குப் பகுதியில் தாமிரபரணி ஆற்றின் கரையில் ஒரு மண்மேடு உள்ளது. இப்பகுதியில், சரளைக் கற்கள் அதிகமாகப் பரவி காணப்படுகின்றன எனவே, இப்பகுதியை ஆதிச்சநல்லூர் பறம்பு என்பர். இப்பகுதியில் முதுமக்கள் தாழிகள் அதிகமாகக் காணப்படுவதால் தாழிக்காடு என்றும் அழைக்கின்றனர்*10.

Story image

ஆதிச்சநல்லூர் அகழாய்வுக் குழிகளில் வெளிப்படுத்தப்பட்ட முதுமக்கள் தாழிகள்

தொல் பொருட்கள்

1872-ல், அலெக்ஸாந்தர் ரீ என்பவர் சுமார் 4000-க்கும் மேற்பட்ட தொல் பொருட்களைச் சேகரித்துள்ளார்*11. தொடர்ந்து இங்கு மேற்கொண்ட அகழாய்வுகளில், சுமார் ஒன்பதாயிரத்துக்கும் மேற்பட்ட தொல் பொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இங்கு பழைய கற்கால கைக் கோடாரிகளோ, புதிய கற்காலக் கைக்கோடாரிகளோ கிடைக்கவில்லை. வெண்கலத்தால் ஆன அணிகலன்கள், எருமை, வெள்ளாடு, செம்மறியாடு, கொம்புடைய மறிமான், சேவல், புலி, யானை முதலிய உருவங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

Story image

ஆதிச்சநல்லுர் முதுமக்கள் தாழிக்கு உட்பகுதியில் காணப்படும் எலும்புக்கூடும், வைக்கப்பட்ட பிற மட்கலன்களும் பொருட்களும்

முதுமக்கள் தாழிகள்

இங்கு 3 அடி விட்டம் உள்ள அகன்ற உயரமான கூம்பு வடிவ அமைப்புடைய தாழிகள் முதல், உடல் பகுதியில் கைவிரல் பதிப்பு வேலைப்பாடுகள் கொண்ட கூம்பு வடிவ மூடியும், சில பானைகளில் ஆணி போன்ற அமைப்பு உட்புறம் நீட்டிக்கொண்டிருப்பது போன்றும், கருப்பு - சிவப்பு நிற மட்கலன்களும் நிறைந்து காணப்பட்டன.

Story image
Story image

ஆதிச்சநல்லூரில் சேகரித்த கருப்பு-சிவப்பு மட்கலன்கள் மற்றும் தொல் பொருட்கள்

Story image

ஆதிச்சநல்லூரில் அகழ்ந்தெடுத்த குறியீடுகள் கீறப்பட்ட மட்கலன்கள்

Story image

பறவை, தாய் தெய்வம், மான் உருவம் பதித்த மட்கலன்

ஆதிச்சநல்லூரில் காணப்பட்ட ஒரு முதுமக்கள் தாழியின் வெளிப்பகுதியில், தோல்பட்டைப் பகுதியில் வளமைச் சடங்கைக் குறிக்கும் வகையில் பறவையும், மானும், தாய் தெய்வமும் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளதைக் காணலாம். இது, சிறந்த நாகரிகமும், தெளிவான சிந்தனையும் கொண்ட மக்கள் இங்கு வாழ்ந்துள்ளனர் என்பதை பறைசாற்றுகின்றன.

இங்கு பல வகையான சுடுமண் கிண்ணங்கள், மூடிகள், உருண்டையான பானைகள், குடுவைகள், பெரிய ஜாடிகள் போன்ற மட்பாண்ட வகைகளுடன், மிகுதியான அளவில் கழுத்தணிகள், காப்புகள், வளையங்கள், சிறிய மணிகள், மோதிரம், காதணி, மகுடங்கள், கார்னீலியன் மணிகள் போன்றவை சேகரிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

வெண்கலப் பொருட்கள்

மேற்கண்டவற்றுடன், வெண்கலத்தினால் ஆன வெண்கலக் குடுவைகள், வெண்கலத் தாங்கிகள், சல்லடைக் கிண்ணங்கள் போன்றவை சேகரிக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தகுந்த பண்பாட்டு அடையாளங்களாகும்.

செம்புப் பொருட்கள்

இங்கு கிடைத்த செம்பால் ஆன ஜல்லடைக் குடுவையும் குறிப்பிடத்தக்கது. இதனை மூடியாகவும் பயன்படுத்தியுள்ளனர். இதனைக் கொண்டு வடிகட்டுதல் பணி மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். இதில் ஜல்லடைக்குப் போடப்பட்ட துளைகள் அழகாகவும், நேர்த்தியாகவும், அலங்கார வளைவுகள் போலவும் அமைக்கப்பட்டுள்ளது சிறப்புக்குரியது.

Story image

செம்பால் ஆன ஜல்லடைக் குடுவை

இரும்புப் பொருட்களில் உடைவாள், எறிவேல், புல்லரிவாள்கள், மண்வெட்டி, கோடாரி, விளக்குகள், திரிசூலங்கள் ஆகியவற்றுடன் கல்லால் ஆன குழவிகள், மாவு அரைக்கும் கல், ஆட்டுக்கல், தங்கத்தால் ஆன பத்தொன்பது மகுடங்கள் (தலைக்கவசம்) மற்றும் நெற்றிப்பட்டங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இவை தகடு போன்றும் இருமுனைகளிலும் தங்கத்தினால் ஆன கயிற்றுடனும் காணப்படுகின்றன. எலும்புக்கூடுகள் சில முழுமையாகவும், அவற்றுடன் மண்டை ஓடுகளும் காணப்படுகின்றன.

தர்ஸ்டன் என்பவர், இந்த எலும்புக்கூடுகளை ஆய்வு செய்து, இங்கு வாழ்ந்த மக்களுக்கு நீண்ட தாடை இருந்திருக்க வேண்டும் என்று கருதினார். எலியட் ஸ்மித் என்பவர், இரண்டு மண்டை ஓடுகளை ஆய்வுசெய்து, ஒன்று ஆஸ்ட்ரலாயிடு இனத்தையும், மற்றது மத்தியத் தரைக்கடல் இனத்தைச் சார்ந்தது என்றும் குறித்துள்ளார். மேலும், இவர்கள் ஆல்பைன் இனத்தின் ஒரு பிரிவான ஆர்மினிய மக்கள் எனவும் குறித்துள்ளார்*12. சிக்கர்மேன் என்பவர் ஒரு மண்டை ஓட்டை ஆய்வு செய்து, ஆதி திராவிட இனத்தைச் சார்ந்தவர்கள் எனக் குறித்துள்ளார்*13.

இவ்வாய்வுகள் அனைத்தையும் ஒருங்கிணைத்துப் பார்க்கும்போது, ஆதிச்சநல்லூரில் பல இன மக்கள் வாழ்ந்துள்ளதும், அவர்கள் ஒருவரோடு ஒருவர் இணைந்து ஒற்றுமையோடு வாணிகம் புரிந்து நல்லதோர் வாழ்க்கையை வாழ்ந்துள்ளதையும் தெளிவாக அறியமுடிகிறது. எனவே, ஆதிச்சநல்லூர் அகழாய்வு தமிழக வரலாற்றில் மிகவும் சிறப்பான இடத்தைப் பெறுவது மட்டுமின்றி, தமிழக மக்களின் வாழ்க்கை முறை, பொருளாதார வளர்ச்சி, பண்பாடு இவற்றை எடுத்தியம்புவதற்கான சான்றாகவும் திகழ்கிறது.

ஆதிச்சநல்லூர், அகழாய்வு தொல் பொருட்களின் அடிப்படையில் பொ.ஆ.மு. 1000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது ஆய்வாளர்களின் கருத்து. இங்கு காணப்பட்ட வாழ்க்கை முறை, ஒரு வளர்ச்சி பெற்ற நாகரிகத்தை வெளிப்படுத்துகிறது. எனவே, பொ.ஆ.மு. 1000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்து வளர்ச்சிபெற்ற ஒரு வணிக நகரமாகவும், சிறந்த வாழ்விடமாகவும் இருந்துள்ளது என்பதை அறியும்படி, அங்கு கிடைத்த தொல் பொருட்கள் சான்றாக அமைந்துள்ளன.

(தொடரும்)

சான்றெண் விளக்கம்

1. அகநானூறு, பாடல் எண் 27, வரி 5 – 10;

“வேங்கடம்பயந்த வெண்கோட்டு யானை

முறப்போர் பாண்டியர் அறத்தின் காக்கும்

கொற்கை அம் பெருதுறை முத்தின் அன்ன

நுகைப் பொலிந்து இலக்கும் எயிற்கெழு துவர்வாய்

இலங்கு வளை,இருஞ்சேரி

கட்கொண்டிக் குடிப் பார்கத்து”

“நல் கொற்கையோர் நசைப் பொருந” – மதுரைக் காஞ்சி - 138.

- நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிட், சென்னை.

2.  W.H. Schoff, The Periplus of the Erethrean Sea, (London) etc 1912 pp. 242. “The Three ports in order in which we have named them (From the context, South to North), are Kamara, Podouke and Sopatma. Ptolemy (VII, 1, s.14) after referring to the mouth of the river Khaberos clearly the Kaveri, and Khaberis emporium, which may safely be identified with Kaveripatnam or Kaverippattinam”.

3.  A. Gosh, An Encylopeadea of Indian archaeology, New Delhi, Munshiram and Manoharlal, 1989.

4.  A. Abdul Majeed, Korkai Excavations, Tamil civilization, Thanjavur.

5. R. Nagasamy, Domilica Journal of the Tamil Nadu State Dept. of Archaeology, Dec. 1970.

6. Ibid.

7. தமிழக வரலாறு, தொல்பழங்காலம், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், 1975, பக். 8.

8. மேலது.

9. மேலது.

10. மேலது.

11. சு. ராசவேலு & திருமூர்த்தி, தமிழ்நாட்டுத் தொல்லியல் அகழாய்வுகள், பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை, 1995.

12. மேலது.

13. A. Gosh, An Encyclopedia of Indian Archaeology, Munshiram & Manoharlal, New Delhi, 1989.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.